PUBLISHED ON : நவ 16, 2014

'பெரியாரும், அண்ணாதுரையும்' நூலிலிருந்து...
அண்ணாத்துரை, ஈ.வெ.ரா.,விடம் பணியாற்றிய காலம் அது! ஒரு சமயம், ஈ.வெ.ரா., வடமாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, அண்ணா துரையையும் உடன் அழைத்துச் சென்றார். அப்போது கடுமையான குளிர்காலம். கங்கை நதியில், பிற்பகல், 2:00 மணிக்கும் உடலை நடுங்க வைக்கும் குளிர்!
ஹரித்வார் - சந்நியாசிகளின் கோட்டை! எந்தத் தெருவுக்குச் சென்றாலும் சந்நியாசிகளின் நடமாட்டம் தான். மாலை வேளைகளில் உலாவச் செல்வார் ஈ.வெ.ரா., அவருடைய வெண்ணிற தாடி, பொன்னிற மேனி, ஆரஞ்சு நிறத்தில் போர்த்தியிருந்த சால்வையையும், குளிருக்குப் பயந்து, முரட்டுத் துணிக்குள், முழு உடம்பையும் மறைத்து, கைகளை மார்போடு கட்டியவாறு ஈ.வெ.ரா.,வின் பின்னே செல்லும் அண்ணாதுரையையும் பார்த்து, ஹரித்துவார் மக்கள், 'இருவரும் தெற்கே இருந்து வந்துள்ள புதிய சந்நியாசிகள்...' என்று எண்ணி விட்டனர்.
ஈ.வெ.ரா.,வை பெரிய சந்நியாசி என்றும், அண்ணாதுரையை சீடர் என்றும் முடிவு செய்து, இருவரையும் பய பக்தியுடன் வணங்கினர். சிலர் சாஷ்டாங்கமாக கீழே விழுந்தும் வணங்கினர்.
இருவரும் சிரிப்பை அடக்கியபடி, தங்கள் போக்கில் நடந்தனர்.
சாதுக்களையும், சாமியார்களையும் கண்டித்து வந்த ஈ.வெ.ரா.,வை ஒரு சாது என்றும், சாமியார் என்றும் கங்கை கரை மக்கள் எண்ணி, வணங்கியது வேடிக்கை தான்!
தேசபக்தர், சுதந்திரப் போராட்ட வீரர், ராஜாஜி, காமராஜர், கல்கி ஆகியோரின் அன்புக்குரியவர், சிறந்த பேச்சாளர், புத்தகப் பதிப்பாளர், இறுதிக் காலத்தில் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர் சின்ன அண்ணாமலை. அவர், தன், 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்' நூலில் குறிப்பிடுகிறார்:
கடந்த, 1942ல் நடந்த போராட்டத்தில், நான் சிறையிலிருந்து விடுதலை அடைந்தாலும், பல தலைவர்களும், தொண்டர்களும் விடுதலையாகாமல் சிறையிலிருந்தனர். அவர்களை எல்லாம் விடுதலை செய்து, அரசியலில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற கருத்துடன், 'பூட்டை உடையுங்கள்' என்று, ஒரு நூல் வெளியிட்டேன். 'சிறைப் பூட்டை உடைக்கும்படி தூண்டுகிறேன்...' என்று கூறி, என்னைக் கைது செய்தனர்.
வழக்கு எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி ஒரு தெலுங்கர்; சுத்தமாகத் தமிழ் தெரியாது. 'பூட்டை உடையுங்கள்' என்பதை அவருக்கு, ஆங்கிலத்தில் அப்படியே மொழி பெயர்த்து கொடுத்து விட்டனர். இதை பார்த்த அவர், 'எதுக்கு மேன் ஜெயில் பூட்டை உடைக்கும்படி சொன்னே?' என்று கேட்டார்.
நான் பணிவுடன், 'பூட்டை உடையுங்கள் என்பதற்கு நான் கொள்ளும் அர்த்தம், 'டிசால்வ் தி டெட் லாக்' என்பதாகும்...' என்றேன்.
அவர் அதை ஒப்புக் கொள்ளாமல், பூட்டை என்றால், 'லாக்' உடை என்றால், 'பிரேக்' என்று அர்த்தம் செய்து சொன்னார். சர்க்கார் வக்கீலும், என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரும் நீதிபதிக்கு தலையாட்டினர். உடனே, நான், 'கிக்ட் தி பக்கெட்' என்றால், இறந்து போனான் என்று அர்த்தமே தவிர, பக்கெட்டை உதைத்தான் என்றா சொல்வது?' என்றேன். கோர்ட் சிரித்தது; நீதிபதியும் சிரித்து, 'வேறு ஏதாவது சொல்ல வேண்டுமா?' என்று கேட்டார்.
உடனே நான், 'நீங்கள் தெலுங்கர்; உங்களுக்கு சரியாக தமிழ் தெரியவில்லை. என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரோ கன்னடக்காரர்; அவருக்கும் தமிழ் தெரியாது. கேஸ் நடத்த வந்த அரசு வழக்கறிஞரோ மலையாளி; நான் வெளியிட்டிருக்கும் நூலோ தமிழ் புத்தகம். ஆகவே, தமிழ் தெரிந்தவர்கள் இந்த வழக்கை நடத்த வேண்டுமென்று விரும்புகிறேன்...' என்றேன்.
நீதிபதிக்கு கோபம் வந்து விட்டது. 'வாட் டமில் டமில்...' என்று கூறி, ஆறு மாதம் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கினார். என்னைக் கைது செய்த இன்ஸ்பெக்டரே என்னிடம், 'காரியத்தை கெடுத்து விட்டீர்களே... மாஜிஸ்ட்ரேட் மூன்று மாதம் தண்டனை கொடுப்பதாக இருந்தது; ஆனால், நீங்கள் தமிழ், கிமிழ் என்று பேசி, ஆறு மாதம் வாங்கிக் கொண்டீர்களே...' என்று அனுதாபப்பட்டார்.
சென்னை சிறைக்குப் போனதும், அங்கிருந்த பேராசிரியர் என்.ஜி.ரங்காவிடம் மாஜிஸ்ட்ரேட் பற்றிய விஷயத்தை கூறினேன். அதற்கு அவர், 'தாய்நாட்டுப் பற்றுக்காக மூன்று மாதம்; தாய் மொழிப் பற்றுக்காக மூன்று மாதம். ஆக, ஆறு மாதம் சரி தான்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
