
ஜென் குருவிடம், அவர் மாணவன் ஒருவன், 'குருவே... மாதம் ஒரு நாள் மவுன விரதம் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...' என்றான்.
'உன்னால முடியாது...' என்றார் குரு.
'ஏன் குருவே?'
'மவுன விரதம் இருக்கப் போவதாக சொல்கிறாயே... அது தவறு; மவுனமாக இருக்கப் போகிறேன் என்று சொல். ஏற்கிறேன்...' என்றார்.
ஜென் குரு கூறியதன் விளக்கம்: சிலர், மவுன விரதம் இருப்பர். இது எதற்கு... ஓய்வு வாய்க்கா, நாக்கிற்கா, தொண்டைக்கா... நிச்சயமாக, மனதிற்கு இல்லை. அடுத்தவர்கள் புகழ வேண்டும் என்பதற்காகவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இருக்கலாம். அப்படியானால், அதுவே, மனதின் ஓய்வுக்கு எதிரான எண்ணம். மனம் எண்ணமற்று இருப்பது அல்லது எண்ணங்கள் குறைவாக இருப்பது தான் விரதம்.
போலி மவுன விரதத்தை கடைபிடித்து, எண்ணங்களை அலைபாய விடுவதை விட, பேசிக் கொண்டிருப்பது நல்லது!
தமிழ்வாணனின் துப்பறியும் சங்கர்லால் கதாபாத்திரம் போல, ஆங்கில நாவல்களில், 'ஷெர்லாக் ஹோம்ஸ்' என்ற துப்பறியும் கதா பாத்திரம் மிக பிரபலம். இக்கதாபாத்திரம் சம்பந்தமாக கதை உண்டு:
ஒருமுறை, ஷெர்லாக் ஹோம்ஸ் சொர்க்கத்திற்கு சென்ற போது, அங்கு வாயில் காவலனாக இருந்த செயின்ட் பீட்டர், இவரது துப்பறியும் திறமையை சோதிக்க விரும்பி, அங்கிருந்த ஒரு பெரிய பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நுாறு ஆதாம் - ஏவாள் ஜோடிகள் ஒரே மாதிரி இருந்தனர். அவர்களில் ஒரிஜினல் ஜோடி எது என்று ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டுபிடிக்க வேண்டும்; இது அவரது துப்பறியும் மூளைக்கு விட்ட சவால்!
ஒரு மணி நேரம் அந்த ஜோடிகளிடையே புகுந்து, கடைசியில் ஒரு ஜோடியை இழுத்து வந்து, பீட்டரின் முன் நிறுத்தினார் ஷெர்லாக் ஹோம்ஸ். பீட்டருக்கு ஆச்சரியம்! ஏனெனில், அவர்கள் தான் உண்மையான ஜோடி.
'எப்படிக் கண்டுபிடித்தீர்கள்...' என்று கேட்டார் பீட்டர்.
'கடவுளால் படைக்கப்பட்ட இவர்களுக்கு தான் தொப்புள் கிடையாது; மற்றவர்களுக்கு உண்டு...' என்றார் ஷெர்லாக் ஹோம்ஸ்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த,'தானாயித்' என்ற பழங்குடியினர் குழு ஒன்று, ஒவ்வொரு ஆண்டும், ராஞ்சி நகரில் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் ஒரு சடங்கை நடத்துவர்.
மாஜிஸ்திரேட்டை இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு கூறி, அவ்விருக்கையில் பழங்குடியினர் தலைவர் சில நிமிடங்கள் அமர்ந்து, பின், இருக்கையை மாஜிஸ்திரேட்டிடமே அளிப்பார்.
சுதந்திரப் போராட்டத்தில் இவர்கள் பங்கு கொண்ட தால், அந்த இருக்கை, அவர் களுடையது என்பதை குறிக்கவே இச்சடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
சுதந்திரப் போராட்ட காலத்தில், ராஞ்சி வந்த காந்திஜி, பழங்குடியினர் தலைவரை கண்டு பேசி, சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டினார். அத்துடன், அகிம்சையின் முக்கியத்துவத்தை போதித்தார். அன்றிலிருந்து, இப்பழங்குடியினர் புகை, மாமிசம் மற்றும் மதுவை விட்டொழித்தனர்.
இன்றும், அவர்களின் தெய்வம் காந்தி தான். அவர்களது கோவிலின் மீது, காந்தி காலத்து காங்கிரஸ் கொடி பறந்தபடி இருக்கும்.
விரோதிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, நெருப்புக் கோழிகள், தங்கள் தலையை மணலில் புதைத்துக் கொள்கின்றன என்று கூறப்படுவது தவறு.
தென்னாப்ரிக்காவில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நெருப்புக் கோழிகளை வளர்க்கும் பண்ணை அதிபர் சொல்கிறார்:
நெருப்புக் கோழி மணலில் தலையை புதைத்து நான் பார்த்ததில்லை. ஏதாவது சத்தம் வருகிறதா என்பதை கேட்பதற்காகவே, நெருப்புக் கோழிகள், நிலத்திற்கு மிக அருகில், தங்கள் தலையை வைத்துக் கொள்வதுண்டு. சில சமயங்களில், தங்கள் கழுத்து தசைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும் அப்படிச் செய்யும். ஆனால், வெளியுலகத்தினர் சொல்வது போல், நெருப்பு கோழி, மணலில் தலையை புதைத்துக் கொண்டால், மூச்சு முட்டி இறந்து விடும், என்று கூறுகிறார்.
பதவியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு, பென்ஷன் வழங்கும் முறை, ஜெர்மன் நாட்டில் பிஸ்மார்க்கினால் துவங்கப்பட்டது. 1889ல், 'ஓல்டு ஏஜ் இன்சூரன்ஸ் ஆக்ட்' சட்டப்படி, 16 வயதுக்கு மேற்பட்ட நிரந்தர வேலையிலிருக்கும், 2,000 மார்க்குகளுக்கு குறைவான சம்பளம் பெறும் ஒவ்வொருவரும், சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கொடுத்து, ஓய்வூதிய திட்டத்தில் சேர வேண்டும். 30 ஆண்டுகள் பிரீமியம் கட்டியவர்களுக்கு அவர்களது, 70வது வயதுக்கு பின், ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
நடுத்தெரு நாராயணன்

