
கி.ஆ.பெ. விசுவநாதம், 'என் நண்பர்கள்' நூலில் சொல்கிறார்: ஒரு நாள் நானும், அண்ணாதுரையும் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு அன்பர், 'வரும், 9ம் தேதி கூட்டம்; பேசுவதற்கு தாங்கள் வர வேண்டும்...' என்றார். ஒப்புக் கொண்டேன். அண்ணாதுரையையும் அழைத்தார்; அவரும் வருவதாக கூறினார். வந்தவர், மகிழ்ச்சியோடு சென்றார். அவர் போனதும், அண்ணாதுரையிடம், 'அன்று வேறு வேலை இருப்பதாக சொன்னீர்களே... எப்படி ஒப்புக் கொண்டீர்கள்...' என்றேன்.
'நான் போகப் போவதில்லை; சும்மா சொன்னேன்...' என்றார். 'இந்த உண்மையை அவரிடம் சொல்லியிருக்கலாமே...' என்றேன். 'சொன்னால் அவர் நம்மை விட்டு போயிருக்க மாட்டார்; நாமும் பேசிக் கொண்டிருக்க முடியாது...' என்றார் அண்ணாதுரை.
மகாத்மா காந்தி தன் சுயசரிதை நூலான, 'சத்திய சோதனை'யில் எழுதுகிறார்: தென்னாப்பிரிக்காவில் என் அறையில் இருந்த நண்பர் ஒருவர், எனக்கு சகாவாகவும், உதவி செய்பவராகவும் இருந்தார். சமையல்காரர் ஒருவரும் உண்டு. என் சகா அதிக சாமர்த்தியசாலி. அவர் என்னிடம் உண்மையாக நடக்கிறார் என்றே நினைத்து ஏமாந்திருந்தேன்.
என் குமாஸ்தா மீது எனக்கு சந்தேகம் வருகிற மாதிரி, ஒரு வலையை விரித்தார்.அதை உணர்ந்து, குமாஸ்தாவும் வெளியேறினார். பின், என் சமையல்காரர் வெளியூர் சென்றிருந்த காலத்தில், வேறொரு சமையல்காரரை வைக்க வேண்டியதாயிற்று. ஒருநாள், அந்த புதிய சமையல்காரர், தலைதெறிக்க என் அலுவலகத்திற்கு ஓடி வந்து, 'உடனே வீட்டுக்கு வாங்க; நீங்க பாக்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது...' என்று படபடத்தார். என்னவென்று விசாரித்த போது, 'அதெல்லாம் இங்கே சொல்ல முடியாது; நீங்க வந்து பாருங்க...' என்று கூறி என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார்.
என் சகாவின் அறையை சுட்டிக் காட்டி, 'நீங்களே திறந்து பாத்துக்கங்க...' என்றார். கதவை தட்டினேன்; திறக்கவில்லை. பலமாக தட்டியதும் கதவு திறந்தது.
உள்ளே ஒரு விலைமகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தேன். அவளை எச்சரித்து, வெளியே போகச் சொல்லி, என் சகாவிடம், 'இக்கணத்திலிருந்து உமக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; உன்னால் பல நாட்களாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறேன். உம்மிடம் நான் வைத்த நம்பிக்கைக்கு, நீர் செய்யும் பிரதியுபகாரம் இதுதானா?' என்றேன்.
என் சங்கதிகளை அம்பலப்படுத்தி விடுவதாக, என்னை மிரட்டினார். 'என்னிடம் ஏதும் ரகசியமில்லை; இருந்தால் அம்பலப்படுத்தும். ஆனால், இந்த வினாடியே நீர் இந்த இடத்தை விட்டுப் போயாக வேண்டும்...' என்றேன். அவர் மேலும் கோபாவேசம் கொண்டார். நான் குமாஸ்தாவை கூப்பிட்டு, போலீசை அழைத்து வரச் சொன்னேன். உடனே அவர் மன்னிப்பு கேட்டு, வீட்டை விட்டு போக, ஒப்புக் கொண்டார்.
கெட்டிக்காரனான அந்த தீய ஆசாமி, எவ்வளவு தூரம் என்னை ஏமாற்றியுள்ளார் என்பது அப்போது தான் புரிந்தது. அன்புள்ளவர்களின் எச்சரிக்கைகளை எல்லாம் உதாசீனம் செய்து விட்டேனே என வருந்தினேன்.
'பாரதியார் எழுதிய, 'குட்டிக்கதைகள்' நூலிலிருந்து: ஒரு பிராமணப் பையன், தன் விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனதால், அதைப் பார்த்து அழுதபடி நின்றிருந்தான். அதைக் கண்ட ஒரு சிப்பாய், 'குழந்தாய்... ஏன் அழுகிறாய்?' என்று கேட்டார்.
'வண்டி ஒடிஞ்சு போச்சு...' என்றான் பையன்.
'இதற்காகவா அழுகிறாய்... வீட்டிற்கு போயி உன் தகப்பனாரிடம் சொன்னால், அதை செப்பனிட்டு கொடுத்து விடுவார்...' என்றார் சிப்பாய்.
'எங்கப்பா சாஸ்திரி; அவராலே வண்டியை செப்பனிட முடியாது. அவருக்கு ஒரு தொழிலும் தெரியாது. யார் வீட்டிலாவது அரிசி கொடுத்தால் வாங்கி வருவார். வேறு ஒன்றும் தெரியாது...' என்று விம்மி விம்மி அழுதான் பையன்.
நடுத்தெரு நாராயணன்