/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை! (20)
/
எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை! (20)
PUBLISHED ON : ஜூன் 28, 2015

'நடிப்பதாகச் சொல்லி, தொண்டை கிழிய கத்துகிறார்...' என்று, சில பத்திரிகைகள் ராதாவை தாக்கி எழுதின. அதற்கு, 'நான் கத்தறேன்னு சொல்றாங்க. ஒரு சிலர், வளவளவென்று பேசுவர்; அவர் என்ன பேசினார் என்றே நமக்கு புரியாது. அதை போன்றே படங்களில் நான் நடிக்கும் கதாபாத்திரம்!
'இது புரியாதவர்கள் நான் கத்துவதாக கூறுகின்றனர். எனக்கு, எப்படி நடிக்க வேண்டுமென்பதும், எப்படிப் பேச வேண்டுமென்பதும் நன்றாகத் தெரியும். நடிப்போ, பேச்சோ யார் சொல்லிக் கொடுத்தும் வருவதல்ல; அது இயற்கையாக வர வேண்டும்...' என்று பதில் கூறினார்.
தமிழ் சினிமாத்துறையில், ராதாவின் மார்க்கெட், 1963ல், உச்சத்தில் இருந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெமினிகணேசன் படங்கள் என்றால், ஒரு லட்சம் ரூபாயும், மற்றவர்கள் படத்துக்கு, 60,000 ரூபாயும் வாங்கினார். வெளிவரும் பெரும்பாலான படங்களில் அவர் இடம் பெற்றிருந்தார்.
'ராதாவே நகைச்சுவை, குணசித்திரம் மற்றும் வில்லன் இம்மூன்றையும் சேர்த்து ஒரே கதாபாத்திரத்தில் நடிப்பதால், பல நடிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...' என்று விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு ராதா, 'நான் எந்தப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், ஒரே மாதிரி ரேட் தான் வாங்குகிறேன். அது, பட முதலாளிக்கு வசதியாக இருக்கு. என் நியாயமான ரேட், புதுமையான நடிப்பு, நேரப்படி படப்பிடிப்புக்கு வருவது போன்ற காரணங்களால், எனக்கு ஏகப்பட்ட படங்கள் ஒப்பந்தமாகின்றன. என் வரவால் அப்பா நடிகர்களும், காமெடி நடிகர்களும் பாதிக்கப்பட்டனர் என்பது தவறு. என் ஒத்துழைப்பால், நேர்மையால் உயர்ந்தேன்; ஜால்ரா கூட்டங்களால் உயரவில்லை...' என்றார்.
இருவர் உள்ளம் படத்தில், ராதாவுக்கு குணசித்திரப் பாத்திரத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் எல்.வி.பிரசாத்.
புத்தி சிகாமணி பெத்த புள்ள...
படத்தில் ராதாவுக்கான பாடல் இது! ஏ.எல்.ராகவன் பாடியிருந்தார்.
'ராதாவுக்கான கரகர குரலில் பாட வேண்டாம்; இயல்பான குரலில் பாடல் இருந்தால் போதும்...' என்று இயக்குனர் கேட்டபடியே பாடிக் கொடுத்தார் ராகவன்.
'எனக்கு இப்படி ஒரு பாட்டா... இதுல நான் நடிச்சா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க; நல்லா வராது...' என்று மறுத்தார் ராதா.
'நான் பாட்டை எடுத்துடுறேன். அதை மட்டும், 'கட்' செஞ்சு, உங்கிட்ட போட்டு காண்பிக்கிறேன். நீங்க நல்லாயிருக்குன்னு சொன்னா, படத்துல வச்சுக்கிறேன்; இல்லேன்னா தூக்கிடலாம்...' என்றார் பிரசாத்.
ஒப்புக் கொண்டார் ராதா. நடிகை முத்துலட்சுமியுடனும், ஏராளமான குழந்தைகளுடனும் ராதா பாடுவது போல் பாடல் படமாக்கப்பட்டது. பாடலை ராதாவுக்கு போட்டு காட்டினார் இயக்குனர் பிரசாத். அதைப் பார்த்ததும் ராதா கண்கலங்கி, பிரசாத்தை பாராட்டினார்.
அப்பாடல் குடும்ப கட்டுப்பாடு பிரசாரப் பாடலாக பட்டி, தொட்டியெங்கும் ஒலித்தது.
நானும் ஒரு பெண் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ரங்காராவ். அவரும், ராதாவைப் போல சீனியர். அதனால், அவரிடம் பேச, எல்லாரும் பயப்படுவர். நானும் ஒரு பெண் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வராமல், இஷ்டத்திற்கு வந்தார் ரங்காராவ்.
காலை, 9:00 மணிக்கு ஆரம்பிக்கும் ஷூட்டிங்கிற்கு, 11:00 மணிக்கு சாவகாசமாக வருவார். மதியம், 1:00 மணிக்கு சாப்பிட வீட்டிற்கு கிளம்பி விடுவார். சில சமயங்களில் மாலை மீண்டும் வருவார். பல சமயங்களில் மது அருந்தி, வீட்டிலேயே இருந்து விடுவார். இது, பல நாட்கள் தொடர்ந்தது. இயக்குனர் உட்பட யாராலும், அவரை கேள்வி கேட்க முடியவில்லை.
கூடிய மட்டும் பொறுமையாக இருந்தார் ராதா, அவரது கால்ஷீட் வீணாகிக் கொண்டே போனது. அடுத்த நாள் செட்டில் ராதா காத்திருந்தார். 10:30 மணிக்கு உள்ளே நுழைந்தார் ரங்காராவ்.
'ராதாண்ணே வணக்கம்...' என்றார் ரங்காராவ்.
உடனே ராதா, கஜபதியிடம், 'பாருய்யா... படத்துல நான் கெட்டவன் வேஷம் போடுறேன்; ஆனா, 9:00 மணிக்கே வந்து காத்துக்கிட்டிருக்கேன். இவரு நல்லவன் வேஷம் போடறாரு; வர்ற நேரத்தை பார்த்தியா...' என, 'பஞ்ச்' டயலாக் ஒன்றைச் சொன்னார்.
ரங்காராவின் முகம் சுருங்கிப் போனது. 'மேக் - அப்' ரூமுக்குச் சென்ற அவர், கஜபதியை அழைத்து, 'இப்படம் முடியுற வரைக்கும், தயாரிப்பாளர்கிட்ட சொல்லி, மதிய நேரத்துல, கொஞ்ச நேரம் நான் படுத்துக்கறதுக்கு ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்...' என்றார்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, ராதாவும், ரங்காராவும் மதியம், 1:00 மணி முதல், 3:00 மணி வரை, ஓய்வு எடுக்க வசதி செய்யப்பட்டது. 3:00 மணிக்கு வரும் டிகிரி காபியை குடித்தபின், நடிப்பை தொடர்ந்தனர். படப்பிடிப்பும் சீக்கிரம் முடிந்தது.
சீனியர் நடிகராக இருந்தாலும், தவறு செய்தால், அதை தட்டிக் கேட்கும் துணிச்சல் அன்று ராதாவிடம் மட்டுமே இருந்தது.
அதுவரை சிறு வேடங்களிலும், வில்லனாகவும் மட்டுமே நடித்து வந்த அசோகன், ராதாவை தேடி வீட்டுக்கு வந்தவர், அவரது கால்களில் விழுந்து, 'அண்ணே... நான் கதாநாயகனாகிட்டேன்...' என்றார்.
'அப்படியா... சந்தோஷம்; நீ, நல்லா ஓஹோன்னு வரணும் அசோகா...' என்று, நிறைந்த மனதுடன் ஆசீர்வாதம் செய்தார் ராதா.
'எம்.ஜி.ஆர்., சிவாஜி கால்லயும் விழுந்து, ஆசீர்வாதம் வாங்கிட்டேண்ணே...' என்றார்.
சட்டென்று முகம் மாறி, 'அசோகா... நீ கதாநாயகனாகவே மாட்ட...' என்றார் அழுத்தமாக!
'ஏன் அப்படிச் சொல்றீங்கண்ணே?' என, அதிர்ச்சியாக கேட்டார் அசோகன்.
'நான் வில்லன்; என் கால்ல விழுந்தே... மனசார ஆசீர்வாதம் செஞ்சி, கதாநாயகனாகட்டும்ன்னு நினைப்பேன். ஆனா, நீ ஒரு கதாநாயகன் கால்ல போய் விழுந்து, கதாநாயகனாகிட்டேன்னு சொன்னா, அவன் எப்படி ஆசீர்வாதம் செய்வான்... அது, அவனை பாதிக்குமே... நீ கதாநாயகனாகவே முடியாது...' என்றார்.
தொங்கிய முகத்துடன், ராதாவின் வீட்டிலிருந்து வெளியேறினார் அசோகன்.
ஒரு நாள் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில், பேசிக் கொண்டிருந்தார் ஈ.வெ.ரா., லேசாக ஆரம்பித்த தூறல், பலத்த மழையாக மாறியது. ஈ.வெ.ரா., உட்பட அனைவரும் அருகிலிருந்த வேப்பேரி தேவாலயத்தில் ஒதுங்கினர். அங்கே கூட்டத்தைத் தொடர அனுமதி கேட்டார் ஈ.வெ.ரா.,
'நீங்க கடவுள் இல்லன்னு சொல்றவங்க; உங்களுக்கு இடம் தர முடியாது...' என்று மறுத்து விட்டனர்.
'நான் இங்கே பேசுறதுனால, உங்க கடவுளுக்கு சக்தி போயிரும்ன்னு பயப்படுகிறீங்களா... நான் ஒரு மேடை கட்டுவேன்... நான், கடவுள் இல்லன்னு சொல்றவன் தான்; ஆனா, நான் கட்டுற மேடைய, கடவுள் இருக்குன்னு சொல்றவங்களுக்கும் வாடகைக்குக் கொடுப்பேன்...' என்று சொல்லி, அங்கிருந்து கிளம்பினார் ஈ.வெ.ரா.,
சொன்னது போலவே, 1963ல் பெரியார் திடலில் அரங்கம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஈ.வெ.ரா., வைத்த பெயர், 'நடிகவேள் ராதா மன்றம்!'
விஷயத்தைக் கேள்விப்பட்ட ராதாவுக்கு, தர்மசங்கடமாகி விட்டது. அதனால், அந்த விழாவையே புறக்கணிக்க நினைத்தார். ராதா பெயரிடப்பட்ட அந்த அரங்கத்தில் விழா ஆரம்பமாகி, நேரம் சென்று கொண்டே இருந்தது.
'நான் தானே அவரோட பேர இந்த மன்றத்திற்கு வெச்சுருக்கேன்; ராதாவப் பெருமைப்படுத்துறேன்னா அதனால, சமுதாயத்துக்கு லாபம்ன்னு நினைச்சுத் தானே செய்றேன்...' என்று கோபமாகச் சொன்னார் ஈ.வெ.ரா.,
உடனடியாக, ராதாவின் வீட்டுக்குச் சென்ற கி.வீரமணி, அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, மேடையில் உட்கார வைத்தார்.
ஈ.வெ.ரா., பேச ஆரம்பித்தார்...
'இந்த மன்றத்திற்கு ஏன் ராதாவின் பெயரை வைத்தேன் தெரியுமா? இந்நாட்டுக்கு, பெரிய கேட்டை கொண்டு வந்த அநேக சாதனங்களில், மிக முக்கியமானது சினிமா. அதில், இதுவரைக்கும் முட்டாள்தனமான நடிகர்களே தோன்றினர். ஆனால், அத்துறையில், தன் நடிப்புக் கலையை மாற்றி, மனிதன் சிந்திக்கும்படியான கருத்துகளை சொல்லி வருபவர் ராதா. மடையர்கள் அதை சொல்லவில்லை; ராதா தான் சொல்லி வருகிறார். சுயமரியாதை கருத்துக்களை எடுத்து சொன்னதால் ராதா ஒழிந்து விடவில்லை; வாழ முடியாமல் போனதுமில்லை. ராதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்...' என்று கூறினார்.
கம்பர் விழாவில் பேச, ராதாவுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய ராதா, 'பெரியவங்களே, சின்னவங்களே, பொம்பளைங்களே... நீங்கள் எல்லாம் இப்ப எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரியும். இந்த கம்ப நாடாரின் விழாவிலே...' என்று ஆரம்பித்த போது, ஒருவர் குறுக்கிட்டு, 'அய்யா... அவரு நாடாரு இல்ல..' என்றார்.
'நாடார் இல்லயா... நம்மாளு போலருக்கு; இந்த கம்ப முதலியாராகப்பட்டவர்...'
'அய்யா... அவரு முதலியாரும் இல்ல...' என்றார்.
'முதலியாரும் இல்லயா சரி... என்னன்னு புரிஞ்சு போச்சு; இந்த கம்பர் அய்யர் ஆனவர்...'
'அய்யா... அவரு அய்யரும் இல்ல...'
'என்னது நாடார் இல்ல, முதலியார் இல்ல, அய்யரும் இல்லயா... அப்போ, இப்ப தான் ஜாதிகளை சொல்லிக்கிட்டிருக்கோமா... அப்ப ஜாதி கிடையாதா... சரி தான்; இந்த ஜாதியில்லாத கம்பன் விழாவிலே...' என, ராதாவின் பேச்சு தொடர்ந்தது.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
- முகில்