
மறைந்த ஜெயகாந்தன், 'நினைத்துப் பார்க்கிறேன்' கட்டுரையில் எழுதுகிறார்: பிழைப்புக்காக, என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு பட்டியல் போட்டால்...
மளிகை கடைப்பையன்; டாக்டருக்கு பை தூக்கும் உத்தியோகம்; மாவு மிஷின் வேலை; கம்பாசிடர், டிரெடில் மேன்; புத்தகம் விற்பது; கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ் பத்திரிகை மற்றும் புத்தகங்கள் விற்றது முதல், மதுரை சென்ட்ரல் தியேட்டரில், வேலைக்காரி சினிமா பட பாட்டுப் புத்தகம் விற்றது வரை!
மாவு மிஷின் பாகங்கள் செய்கிற பவுண்டரியில், இன்ஜினுக்கு கரிவாரிக் கொட்டுகிற வேலையில் கொஞ்ச நாள். சோப்பு பேக்டரி மற்றும் இங்க் பேக்டரியில் கை வண்டி இழுத்தது. ஜட்கா வண்டிக்காரனிடம் உதவியாளனாக இருந்தது. புரூப் ரீடர் மற்றும் பத்திரிகை உதவி ஆசிரியன்...
இந்த உத்தியோகங்கள் ஒவ்வொன்றிலும் நுழையும் போது, என் வாழ்க்கை முழுவதையும், அதே துறையில் கழித்து விடப் போவதான கற்பனையுடன், தீர்மானத்துடன் செயல்பட்டுள்ளேன். ஆனால், எதுவும் சில நாட்களுக்கு மேல் நீடித்ததில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி தான், என்னை நாகரிக மனிதனாக உருவாக்கியது. எனக்கு கல்வி மற்றும் பண்பாடு கற்று தந்து என்னை எழுத்தாளனாக்கியதே கம்யூனிஸ்ட் நண்பர்கள் தான் என்பதை, நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசில் வேலை செய்த போது, எனக்கு வயது, 13; அங்குள்ள தலைவர்களுக்கு நான் செல்லப்பிள்ளை.
அப்போது, கம்யூனிஸ்ட் கட்சி முழு நேர ஊழியர்களின், 'கம்யூன்' சென்னை ஒயிட்ஸ் சாலையில் இருந்தது. அங்கு தான் இருந்தார் ஜீவானந்தம். அவர் தான் எனக்கு யோகாசனம், இலக்கியம் சொல்லிக் கொடுத்தார்.
நான் கதை எழுதி தோழர்களிடம் காட்டுவேன். பால தண்டாயுதம் போன்ற தோழர்கள் தட்டிக் கொடுத்து பாராட்டுவர். ஒரு முறை, ஒரு கதை எழுதி, ஜீவானந்தத்திடம் காட்டினேன். நிறைய எழுத்து பிழைகள் இருந்தன போலும்... 'நீ தமிழில் எழுதும் முன், தமிழைப் படி...' என்றார் கடுமையாக! என் மனம் வாடி விட்டது. அதே காரணத்தினாலே, புலவர் தேர்வுக்கு தகுதியாகிற அளவுக்கு தமிழ் படித்தேன்.
காவ்யா வெளியீடான, 'ஈரோடு வட்டார தெய்வங்கள்' நூலிலிருந்து: ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கவுந்தப்பாடிக்கு அருகிலுள்ளது மணியம்பாளையம் கிராமம். இங்குள்ள, ராக்கியண்ணன் சுவாமி கோவிலில், ஒன்பது சுற்றுகளை கொண்ட பாம்புகள் தங்கும் குகை உள்ளது. இக்குகையில் உள்ள பாம்புகளில் ஒன்று, விஷத்தை உறிஞ்சி பாம்பு தீண்டியவரைப் பிழைக்க வைக்கிறது என்று நம்பப்படுகிறது.
கோவில் கருவறையின் முன், பாம்பு தீண்டியவரைப் படுக்க வைத்து, திருநீறு பூசி, பூசாரி உட்பட, அனைவரும் கோவிலை பூட்டிவிட்டு வெளியே வந்து விடுவர்.
கடிபட்ட இடத்திலிருக்கும் அடையாளத்தில், (கடிவாயில்) கோவில் பாம்பு, வாய் வைத்து விஷத்தை உறிஞ்சி விடுகிறது. நினைவு திரும்பிய பின், பாம்பு தீண்டியவர் வெளியே வந்து விஷம் நீங்கியதை சொன்ன பின், ராக்கியண்ணனுக்கு பூஜை செய்து வழிபடுவர்.
ராக்கியண்ணன் சுவாமியே, பாம்பு உருவத்தில் வந்து, விஷத்தை உறிஞ்சி பிழைக்க வைக்கிறார் என்ற நம்பிக்கை உலவுகிறது.
பாம்பு தீண்டியவரை, நான்கு சக்கர வண்டியில் (கார், வேனில்) அழைத்து வந்தால், 25 ரூபாயும், சைக்கிளில் அழைத்து வந்தால், ரூ. 5.25, மாட்டு வண்டியில் அழைத்து வந்தால், ரூ 2.50ம், நடந்து வந்தால், இருபத்தைந்து காசு மட்டும் காணிக்கை செலுத்த வேண்டும். பாம்பு தீண்டி இக்கோவிலுக்கு வந்தவர்கள் இறந்ததேயில்லையாம்!
வெட்க உணர்ச்சி எவ்வாறு ஏற்படுகிறது, அது ஏன் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது என்பதை, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆராய்ச்சி செய்தது. அதில், வெட்கப்படுவது என்பது, பரம்பரையை ஒட்டியே அமைகிறது என்று முடிவு கண்டனர்.
இரட்டையர்களை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு இடங்களில் உள்ள இரட்டையர்களை தனித்தனியாக சென்று பார்த்து, அவர்கள் எவ்வாறு வெட்கப்படுகின்றனர் என்பதை, கண்டறிந்தனர். புதியவர்களை கண்ட போது இரட்டையர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்த போதும், ஒரே அளவிலேயே வெட்கப்படுகின்றனர் என்று கண்டறியப்பட்டது.
பெரியவர்களிடம் இந்த ஆராய்ச்சியை நடத்திய போது, மனிதரின் மற்ற அம்சங்களை விட, அவர்களது பாரம்பரியத் தன்மையே அவர்களது வெட்கத்தின் தன்மைக்கு காரணம் என்றும் தெரிய வந்தது. பெண்களும் கூட அவர்களது தாயார், பாட்டி ஆகியோர் எந்த அளவுக்கு வெட்கப்பட்டனரோ, அதே தன்மையில் வெட்கப்படுவதை காண முடிந்தது. இக்காரணத்தினாலேயே, பல பெண்கள் மிகவும் வயதான பின்னும் வெட்கப்படுகின்றனர்.
நடுத்தெரு நாராயணன்

