
சீனாவில், 5,000 தியேட்டர்களில், பாகுபலி!
அமீர் கான் நடித்த, பிகே உள்ளிட்ட, சில இந்தி படங்கள் சீனாவில் திரையிடப்பட்டு, 100 கோடி வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், தற்போது இந்தியாவில் சக்கைப்போடு போட்டுள்ள, பாகுபலி படமும் சீனாவில் வெளியாக உள்ளது. மொழிமாற்றம் உள்ளிட்ட வேலைகள் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், பாகுபலி படத்தை சீனாவில், 5,000 தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். இதற்குமுன், சீனாவில் வெளியான, இந்தி படங்களின், 100 கோடி வசூல் சாதனையை, பாகுபலி படம் முறியடித்து விடும் என்று தெரிகிறது.
— சினிமா பொன்னையா
வடசென்னை பெண்ணாக ரேஷ்மி மேனன்!
உறுமீன் படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ள ரேஷ்மி மேனன், மேக்கப் போடாமல் நடித்திருக்கிறார். அத்துடன், வடசென்னையில் வாழும் பெண் கதாபாத்திரம் என்பதால், அந்த ஏரியா பெண்களை போன்றே மேனரிசம் காட்டி நடித்துள்ள அவர், வடசென்னை தமிழை, 'டப்பிங்' பேச ரொம்பவும் சிரமப்பட்டுள்ளார். அவ்வகையில், இரு நாட்களில் பேசி முடிக்க வேண்டியதை, 10 நாட்கள் பேசிய ரேஷ்மி மேனன், ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தபட்சம், 10 டேக்குகளுக்கு மேல் வாங்கியதாகவும் சொல்கிறார். இல்லாததைக் கொண்டு, கல்லாததைக் கனா என்றால் யாரால் முடியும்!
— எலீசா
விவசாயிகளை வாழ வைக்கும் கருணாகரன்!
குறும்படங்களில் நடித்து, பின் சினிமாவுக்கு வந்தவர் கருணாகரன். ஆரம்பத்தில், சூதுகவ்வும் மற்றும் பீட்சா படங்களில் காமெடியனாக நடித்தவர், தற்போது, கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அத்துடன், தான் ஒவ்வொரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தில் இருந்தும், ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி வருகிறார். 'நம் பசியை தீர்க்கும் விவசாய குடும்பங்களுக்கு செய்யும் இந்த உதவி, மனதுக்கு நிம்மதியை தருகிறது...' என்கிறார் கருணாகரன்.க்ஷ
— சி.பொ.,
சிம்புவுடன் நட்பை முறித்த நடிகர்கள்!
அடிக்கடி, ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருபவர் சிம்பு. அதேசமயம், அவர் நடிகர்களிடம் நல்லுறவையே கடைபிடித்து வந்தார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில், சரத்குமார் அணி சார்பில், துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதையடுத்து, விஷால் அணியில் இருக்கும், இளவட்ட நடிகர்களுக்கு எதிராகயிருப்பதோடு, 'நான் நியாயம் உள்ள அணியில் இருக்கிறேன்...' என்றும் கூறியுள்ளார். இதனால், இதுவரை சிம்புவிடம் நட்பு வளர்த்து வந்த அந்த நடிகர்கள், தற்போது, நட்பை முறித்துக் கொண்டுள்ளனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
தளபதி நடிகரின் படத்தில் நடித்துள்ள மயில் நடிகை, புதிய பட வேட்டையில் தீவிரம் காட்டி வருவதால், ரீ - என்ட்ரியில் இருக்கும் சில மாஜி கதாநாயகிகள் கலவரமடைந்துள்ளனர். அத்துடன், மயில் நடிகையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தங்களது படக்கூலியை கணிசமான அளவு குறைத்துள்ளதோடு இயக்குனர்களுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளனர்.
மெரினா நடிகரைப் போன்று, மச்சி நடிகரும், தன் படங்களில் முன்னணி நடிகைகளை சேர்த்து வருகிறார். தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் முயற்சியாக, இப்படி இறங்கியிருக்கும் மச்சி நடிகர், அவர்கள் தன்னுடன் நடிக்க தயங்கினால், மேற்படி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட, கூடுதலாக லட்சங்களை சொல்லியடித்து, ஒப்பந்தம் செய்து வருகிறார். அந்த வகையில், பப்ளிமாஸ் நடிகையை தன் படத்திற்கு, ஒப்பந்தம் செய்ய, தன் சம்பளத்தில் இருந்து, 20 லட்சங்களை விட்டுக் கொடுத்துள்ளார் மச்சி நடிகர்.
சினி துளிகள்!
* இந்தியில் ஸ்ரீதேவியும், அக் ஷராஹாசனும் ஒரு படத்தில் அம்மா - மகளாக நடிக்கின்றனர்.
* பட வாய்ப்பு குறைந்து வருவதால், வளர்ந்து வரும் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார் ஹன்சிகா.
* ஈ படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவுடன் திருநாள் படத்தில் இணைந்துள்ளார் ஜீவா.
அவ்ளோதான்!