/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
குழந்தைகளுக்கு எந்த விட்டமின் குறையக்கூடாது?
/
குழந்தைகளுக்கு எந்த விட்டமின் குறையக்கூடாது?
PUBLISHED ON : அக் 04, 2015

முதலிலேயே சொல்லி விடுகிறேன்... வைட்டமின் என்பது சரியான உச்சரிப்பு அல்ல. சரி விஷயத்திற்கு தாவுவோம்.
ஒரு இளம் தாய் என்னிடம், 'பிள்ளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கூடம் இருந்தால் தேவலை...' என்றார்.
'அட... இத்தாய்க்கு தான் பிள்ளைகள் மீது எவ்வளவு அக்கறை; ஞாயிற்றுக்கிழமை கூட பள்ளிக்கல்வி வேண்டுமென்று நினைக்கிறாரே...' என்று வியந்த வேளையில், அடுத்த வாக்கியம் அவர்களது நிலைப்பாட்டை தெளிவாக்கியது.
'சனியன்களை (!) மேய்க்க(?) முடியலை...' என்றார்.
சனியன்கள் என்றும், கால்நடைகள் என்றும் பிள்ளைகளை கருதும் காலமாகிப் போனது இக்காலம்.
கண்டிப்பையும், அன்பையும் கலக்கிற விகிதத்தில், இக்காலத்து தாய்மார்களின் பார்வை, வேறாக இருப்பதால், வரும் கோளாறு இது!
நிறைய வெளிநாட்டு பவனி வருகிற எனக்கு, விமானத்தில், பொது இடங்களில், நிகழ்வுகளில் பிள்ளைகள் மீது, என் கவனம் செல்வது உண்டு.
மேலைநாட்டில் பிள்ளைகளை தாய் கண்டித்தால், பெரும்பாலும் கட்டுப்படுகின்றன. 'நோ ஜாக்... டோண்ட் டூ தட்...' என தாய் கூறியதும், ஜாக் அச்செயலை தவிர்க்கிறான்.
தவிர்க்கும் முன், 'ப்ளீஸ் மாம்... ஜஸ்ட் ஒன்ஸ்(ஒருமுறை மட்டும்)...' என்று ஒருமுறை கெஞ்சிப் பார்த்து, அம்மாவின் உறுதி எவ்வளவு சதவீதம் என்று நாடி பிடித்து பார்க்கிறான்.
நாடி தளர்ந்து இருந்தால், சலுகை பெறுகிறான்; நாடி உறுதியாக இருந்தால், தவிர்க்கிறான்.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது... 'முடியாது போ... நான் செய்வேன்...' என்கிறான் ஒரு மகன். அவ்வளவு பேர் முன்னிலையிலும், பலர் முன்னிலையில் நிராகரிக்கப்பட்ட கோபத்தில், அம்மாவை நெருங்கி வந்து, அவர்களை அடிக்கும் குழந்தைகளை கூட இங்கு நான் பார்க்க முடிகிறது.
இப்படி தும்பை விட்டு, வாலை பிடிக்கிற கதை, இங்கு மட்டும் இத்தலைமுறையில் தொடர்கிறது. குழந்தை வளர்ப்பில் மேலை நாட்டு தாய்மார்களுக்கும், நம்முடைய தாய்மார்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை சொல்லவா?
மேலைநாட்டு தாய், கண்டிப்பை உள்ளே வைத்து, அக்கண்டிப்பை கூட அன்பாக வெளிப்படுத்துகிறாள்.
நம் தாய்மார்கள், உள்ளே அளவு கடந்த அன்பை வைத்து, வெளியே அதை கண்டிப்பின் வடிவில் வெளிப்படுத்துகின்றனர்.
அந்த அணுகுமுறையால், கண்டிக்கப்படும் குழந்தைகள், கண்டிப்புகளுக்கு பழக்கப்பட்டு போய், முக்கியமான தருணங்களில், 'முடியாது போ...' என்கின்றனர்.
கண்டிப்பு மற்றும் அன்பின் கலவை சதவீதத்தை, எவரும் நிரந்தர அளவுகோலிற்குள் அடக்கி விட முடியாது.
பிள்ளைகளின் அடிப்படை இயல்புகள், அவர்கள் வளரும் சூழ்நிலைகள் என, இந்த இரண்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டிய விகிதாசாரம் இது.
தன் கைகளை விடுவித்துக் கொண்டு, சடாரெனச் சாலையின் குறுக்கே ஓடி கடந்து, ஒரு வாகன ஓட்டியின் சடார் பிரேக்கிற்கு ஆளாகி, மறுபக்கம் உள்ள பலூன்காரரிடம் பலூன் கேட்கிறது குழந்தை. இச்செயலுக்காக அதன் தாய் அடித்து துவைக்கிறாள். 'அறிவிருக்கா உனக்கு... இப்படியா குறுக்க ஓடுறது, செத்துப் போயிருப்பியேடி சனியனே...' என்று திட்டுகிற தாயின் உள்ளத்திற்குள், பாசம் தான், அன்பு தான்!
அன்பைக் கூட அடித்து, துவைத்து வெளிப்படுத்துகிற அறியாமை, இந்த மண்ணில் விடாது தொடர்கிறது.
ஒரு பிள்ளைக்கு இளவயதில் சாக்லேட் முதல் பருவ வயதில் ஒரு குறிப்பிட்ட படிப்பு வரை மறுக்கப்படும் போது, அவர்களுக்கு மறுப்புக்கான காரணம் தெரியப்படுத்துவதே இல்லை.
'சாக்லேட் நல்லதல்ல; பல் கெடும்...' என்ற விளக்கத்தில் அன்பு அடங்கியிருக்கிறது. ஆனால், குழந்தை அதை இரக்கமற்ற தாயின் அரக்க மனமாகவே புரிந்து கொள்கிறது.
'எங்களோடு இருந்து படி. தொலைதூரக் கல்லூரி, வாழ்க்கை என்று எங்களை பிரிந்து வாழ நினைக்காதே...' என்கின்றனர். வேலை, திருமணம் என்று தம் நிலைகள் மாறும் போது, பிரிவு என்பது தவிர்க்க முடியாததாக ஆகிப் போகிறது. கல்லூரி வாழ்க்கையில் பிரிவு என்பது நம் விருப்பம் என்பது அந்த வாலிபனுக்கோ, இளம் பெண்ணுக்கோ விளக்கப்பட்டதில்லை.
விரும்பியதை அடைய முடியாதபடி தடுக்கிற வில்லன்களாக பெற்றோரை பார்க்க நேரும் கொடுமை, ஏன் இங்கு மட்டும் நிகழ்கிறது!
கட்டுரையின் தலைப்பிற்கு நான் முடிவு சொல்ல வேண்டாமா? பிள்ளைகளுக்கு எப்போதும் குறையக் கூடாதது, விட்டமின் எல்; லவ் அன்பு தான். இதைக் கொடுக்கும் தன்மையும், அதாவது, நிபந்தனைகளற்றதாக இருக்க வேண்டும் என்பதோடு, வெளிப்படையானதாக இருக்க வேண்டுமே தவிர, ஒளித்தும், மறைத்தும் அல்ல!
லேனா தமிழ்வாணன்