தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அண்ணாவின் சிந்தனைகள்' நூலிலிருந்து: இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியன் ஒருவன், 'உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்...' என்ற எண்ணத்தில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தான்.

இயேசுநாதரின் அருள் நிறைந்த கண்கள், அன்பு ததும்பும் முகம் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை அவன் கற்பனை செய்து, அதைப் போன்ற முகத்தை தேடி, பல குழந்தைகள் முகத்தைப் பார்த்தான். எந்தக் குழந்தையின் முகமும், அவன் மனதில் இருந்த கற்பனை முகத்துக்கு ஏற்றபடி அமையவில்லை.

கடைசியில், ஒரு ஏழையின் வீட்டில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தான். இயேசுவின் கண்களில் இருந்த அருள் ஒளி, அந்தக் குழந்தையின் முகத்தில் இருந்ததைக் கண்டான், அக்குழந்தையின் முகத்தைப் பார்த்து, குழந்தை இயேசுவின் முகத்தை வரைந்து, திருப்தி அடைந்தான்.

பின்னர், 'இது தான் யூதாஸ்' என்ற கிறிஸ்துவ சமய புத்தகத்திற்காக, இயேசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் பற்றி படம் வரைய முனைந்த போது, அதற்கான முகம் மட்டும் கிடைக்கவே இல்லை.

அவனும் பல முகங்களைப் பார்த்தான்; ஆனால், யூதாஸ் பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் ஒரு முகம் கூட இல்லை. கொலைகாரனைக் கொண்டு வந்து ஓவியன் முன் நிறுத்தினர்; அவன் கண்களிலோ குரூரம் இருந்தது. ஆனால், யூதாசின் கண்களில் குரூரம் இல்லை. 'அந்த முகம் யூதாசுக்கு ஏற்றதில்லை...' என்று அனுப்பி விட்டான்.

இப்படியே பலரை நிராகரித்த நிலையில், கடைசியில், பசி, பட்டினியால் மிக மெலிந்து, வெறுப்பு நிறைந்த பார்வையுடன் எளியவன் ஒருவன் வந்தான்.

அவனைப் பார்த்த உடனேயே, 'யூதாஸ் படத்துக்கு இவனே ஏற்றவன்...' என, அவனை உட்கார வைத்து, வரைந்து முடித்தான்.

யூதாஸ் ஓவியத்திற்கு மாடலாக உட்கார்ந்தவன், ஓவியனைப் பார்த்து, 'என்னை உங்களுக்கு தெரிகிறதா...' என்று கேட்டான்.

'தெரியலையே... ஆனால், உன்னைப் போன்ற ஆளை தேடி நான், சுற்றாத ஊர் இல்லை. நல்லவேளை, நீ கிடைத்தாய்...' என்றான் ஓவியன்.

'இப்போது, உங்களுக்கு யூதாஸ் போன்று தெரியும் என் முகத்தை பார்த்து தான், ரொம்ப வருஷத்துக்கு முன், குழந்தை இயேசுவை வரைந்தீர்கள்...' என்றான் அவன்.

'கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து: இதுவரை, நான் பார்த்த நாடகங்கள் எல்லாமே சந்தோஷமாக முடிந்தவை தாம். அதாவது, நாடகம் முடிந்ததும், நான் சந்தோஷமடைவேன். நான் மட்டுமா, என் ஐந்து புலன்களும் சந்தோஷமடையும்.

இவற்றில், மூக்கின் சந்தோஷம் தான் அபாரமானது. சுருட்டு மற்றும் புகையிலை வாசனைகளை இடைவிடாது, ஐந்து மணி நேரம் பிடித்த மூக்கு, நாடகம் முடிந்ததும், பெருமூச்சு விட்டு, மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமுண்டோ!

இதற்கு அடுத்து வருவது கண்! வைரம், இமிடேஷன் வைரம், தங்க முலாம் பூசிய பித்தளை, முகப்பவுடர் பூசிய விதவிதமான முகங்கள், பொய் மீசை, பொய் முடி போன்றவற்றை காந்த விளக்கிலும், மின்சார தீபத்திலும் பார்த்துப் பார்த்து பூத்துப் போன கண்கள், இப்போது பெரிதும் மகிழ்ச்சியடைவது இயல்பே!

காதின் சந்தோஷத்தையோ, சொல்ல வேண்டியதில்லை. நடிகர்களின் புலம்பல், பின்பாட்டுக்காரர்களின் ஹார்மோனியத்தின் ஓலம், 'ஒன்ஸ்மோர்' கூச்சல், ஸ்திரீகளின் பகுதியிலிருந்து வரும் குழந்தைகளின் அழுகைச் சத்தம் முதலியவற்றினால் துளைபட்டு, வெளியே போக வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டிருந்த காது, நாடகம் முடிந்ததும், உண்மையிலேயே, ஆனந்தமடைந்து விடும்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us