தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாண்டோ சின்னப்பா தேவர்! (22)

சாண்டோ சின்னப்பா தேவர்! (22)

சாண்டோ சின்னப்பா தேவர்! (22)


PUBLISHED ON : ஜன 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —

தேவரின் அசுர வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அவருடைய தம்பி, இயக்குனர் எம்.ஏ.திருமுகம் திணறினார்.

தெய்வச் செயல் படத்தில் காட்டு விலங்குகளை வைத்து இயக்க வேண்டியிருப்பதுடன், தேவர் பிலிம்சில், மேஜர் சுந்தர்ராஜனும் முன் அனுபவம் இல்லாதவர். அதனால், படத்தை கொஞ்சம் பொறுமையாக எடுக்க வேண்டும் என்றார் இயக்குனர் திருமுகம். இதை, ஏற்றுக் கொள்ளவில்லை தேவர். அதனால், அப்படத்திலிருந்து ஒதுங்கி கொண்ட திருமுகம், தன்னிடம் எடிட்டிங் பயிற்சி பெற்ற எடிட்டர்

எம்.ஜி.பாலுராவை சிபாரிசு செய்தார்.

தேவர் பிலிம்ஸ் துவங்கிய காலம் முதல், இறுதி வரை அங்கே பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் பாலுராவ். சினிமா கதைகளில், அவருக்கு நல்ல ஞானம் இருந்ததை, கண்டு கொண்ட தேவர், தன் படங்களில் திருமுகத்துக்கு அடுத்தபடியான செகண்ட் யூனிட் இயக்குனராகவும் பாலுராவை அங்கீகரித்து, ஆதரவு வழங்கினார்.

'எழுபது நாட்கள் படப்பிடிப்பு; அதற்குள் படம் முடியணும்...' என்றார் தேவர். இதை சவாலாக எடுத்து, டைரக் ஷனுக்கு பிள்ளையார் சுழி போட்டார் பாலுராவ்.

இப்படத்திற்காக, சர்க்கஸ் ஆரம்பமாவதற்கு முன், காலை, 6:00 மணியிலிருந்து, 11:00 மணிவரை, விலங்குகளுக்கு சினிமா பயிற்சி அளிக்கப்பட்டது. தன் பல்வேறு அலுவல்களுக்கிடையே, ஒரு அமாவாசையில், தெய்வச் செயல் படத்தை துவக்கி வைத்தார், எம்.ஜி.ஆர்., சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவுக்கு, தினமும் விலங்குகள் லாரிகளில் வந்து நடித்தன.

நான்கு சிங்கங்களின் மீது, மேஜர் சுந்தர்ராஜன் உட்கார்ந்திருக்கும் அபூர்வ காட்சியை படமாக்க மட்டும் ஆறு நாட்களுக்கும் மேல் ஆனது. அடுத்து, இறந்து போன யானையின் இறுதி ஊர்வலத்தில், சக விலங்குகள் பங்கேற்கும் காட்சியையும், 'பழகும் வகையில் பழகிப் பார்த்தால், மிருகம் கூட நண்பனே...' என்ற பாடல் காட்சியையும் படமாக்க, ஐந்து நாட்கள் ஆனது. ஆனாலும், விலங்குகளின், 'டின்னர் செட்' காட்சி சரியாக படமாக்கப்படவில்லை; படம் தோல்வி அடைந்தது.

வெகு நாட்களாகவே, சிங்கத்தை மையப் படுத்தி, சிங்கமும், சிறுவனும் என்ற பெயரில் படம் தயாரிக்கும் ஆசை, தேவருக்கு இருந்தது.

சினிமா தியேட்டர்களில் தேவரை, ரசிகர்கள் பார்த்து விட்டால், அவரிடம் தவறாமல் இரு கேள்விகளைக் கேட்பர். அது, 'அடுத்த எம்.ஜி.ஆர்., படம் எப்ப...' என்றும், 'உங்க படத்துல அடுத்து நடிக்கப் போற விலங்கு எது?' என்பதாகத் தான் இருக்கும். இதற்கு மிகவும் ஜாலியாகப் பதில் சொல்வார் தேவர்.

மக்கள் தன்னிடம் கொண்ட அன்பையும், எதிர்பார்ப்பையும், தன் திரை வியாபாரத்துக்கு மூலதனமாகக் கருதினார். அதனாலேயே, சிங்கமும், சிறுவனும் பற்றி, அவ்வப்போது பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார். இரண்டு மாதங்கள், தொடர்ந்து ஆப்ரிக்காவில் படமாக்கப் போவதாகவும், 'இந்தியாவின் அனைத்து மொழிகளிலும், ஆங்கிலத்திலும் கூட, சிங்கமும், சிறுவனும் வெளி வரும்...' என்று கூறினார்.

இதற்காகவே, பிரபாத் சர்க்கசிலிருந்து, ஹீரா என்ற ஆறு மாத சிங்கக் குட்டியை வாங்கி வந்து வளர்த்தார். தேவரால் நிஜமாகவே, 'பாலூட்டி' வளர்க்கப்பட்ட சிங்கம் அது. ஆறு, ஏழு ஆண்டுகள் நாயைப் போலப் பழகி பயிற்சி பெற்றது. சென்னை அண்ணாசாலை மற்றும் மெரினா பீச்சில், சிங்கத்துடன், 'வாக்கிங்' சென்று பரபரப்பை ஏற்படுத்தினார் தேவர். ஏறக்குறைய, 10 ஆண்டுகள் திட்டமிடப்பட்டு, 1977ல் சிங்கமும், சிறுவனும் படத்தின் பூஜை நடைபெற்றது.

மாஸ்டர் பிரபாகர் மற்றும் ராமு பட புகழ் மாஸ்டர் ராஜ்குமார் என்று, இப்படத்திற்காக நிறைய சிறுவர்களை மாற்றினார்; ஆனாலும், சிங்கமும், சிறுவனும் வளரவே இல்லை.

இப்படத்தைப் பற்றிய செய்திகள், வடமாநில பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதை வாசித்த நடிகர் ராஜேஷ் கன்னா, தமிழகத்தில் ஒருவர் தொடர்ந்து விலங்குகளை வைத்து, படமெடுப்பதை நினைத்து ஆச்சரியம் அடைந்தார்.

அக்காலக்கட்டங்களில், இந்திய சினிமாக்களில் மாயாஜாலக் காட்சிகள் நிறைய இடம் பெற்றன. டைட்டிலில், 'தந்திரக் காட்சிகள் - ரவிகாந்த் நிகாய்ச்' என்று பெயர் போடுவர்.

ராஜேஷ் கன்னாவின் நண்பர் ரவிகாந்த்; அதனால், அவரிடம் தேவரைப் பற்றி விசாரித்த ராஜேஷ் கன்னா, 'அவரோட படத்துல நடிக்க ஆசைப்படுறேன்; எனக்கு வாய்ப்பு தருவாரா என கேட்டுச் சொல்லுங்க...' என்றார்.

அப்போது, ஆராதனா படம், வெளியாக இருந்தது. வளரும் நடிகரான ராஜேஷ் கன்னா, டிரெயின் என்ற இந்திப் பட ஷூட்டிங்கில் இருந்தார். இந்நிலையில், ராஜேஷ் கன்னாவின் ஆசையை தேவரிடம் சொன்னார் ரவிகாந்த்.

உடனே தேவரும், 'நீங்க பாம்பே போகும் போது சொல்லுங்க; நானும் வரேன். அவருக்கிட்ட பேசுவோம்...' என்றார்.

அதன்பின், ராஜேஷ் கன்னாவை சந்திக்க பம்பாய்க்கு சென்ற தேவர், பிரபலமான நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைந்து, தங்கும் அறை கேட்டார். அங்கிருந்த மேனேஜர் உட்பட அனைத்து ஊழியர்களும், தேவரது தோற்றத்தைப் பார்த்து, பரதேசி என நினைத்து சிரித்து, 'ரூம் கிடையாது...' என்று மறுத்தனர்.

தனக்கு தெரிந்த பட்லர் இங்கிலீஷில், 'நோ ரூம்... ஐ பை திஸ் ஓட்டல்; டெல் மீ தி ரேட். ஐ கிவ் யூ. கோ. அயம் தி ஓனர் தென்...' என்று பேசியபடியே, நடித்துக் காண்பித்தார். 'ஆண்டியைப் போல் காணப்படும் ஒருவர் ஓட்டலையே விலை பேசுவதா... அப்படியாயின் அவர் எத்தனைப் பெரிய சீமானாக இருக்கக் கூடும்...' என நினைத்து, ராஜமரியாதையோடு, அவருக்கு, அறை ஒதுக்கி கொடுத்தனர்.

ஆச்சரியத்தில் வாய் பிளந்தார், ராஜேஷ் கன்னா. கட்டுக்கட்டாக அவர் முன் பணம் விழுந்தபடியே இருந்தது. மூன்று லட்சம் ரூபாயை அவர் முன் கொட்டினார் தேவர். எந்த வட மாநில பட அதிபரும், அதுவரை இப்படி பணத்தால் அடித்ததில்லை.

பணம் கை மாறியதும், தான் தயாரித்த காட்டுராணி, யானைப்பாகன் மற்றும் தாயைக் காத்த தனயன் படக் கதைகளை கூறினார் தேவர். இது எதுவும் ராஜேஷ் கன்னாவுக்கு பிடிக்கவில்லை. தெய்வச் செயல் பிரின்ட்டை மும்பைக்கு எடுத்துச் சென்றனர். அதைப் பார்த்ததும் ஒ.கே., செய்த ராஜேஷ் கன்னா, கூடவே, 'என்னை டம்மி யாக்கிடக் கூடாது; விலங்குகளுக்கும் மேலாக, எனக்கே ஆக் ஷன் காட்சிகள் அதிகம் வேணும்...' என வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு சம்மதித்து, ராஜேஷ் கன்னாவுக்கு ஜோடியாக தனுஜாவை ஒப்பந்தம் செய்தார். பின், 'கிருத்திகைக்கு மருதமலையில இருக்கணும்....' எனக் கூறி புறப்பட்டவரை, தடுத்து, பம்பாய் பழக்கத்தை எடுத்து உரைத்தனர்.

'அண்ணே... பாம்பேல கதாநாயகன், கதாநாயகியை ஒப்பந்தம் செய்ததும், மியூசிக் டைரக்டருக்கும், ஒப்பந்தம் போட்டுடணும். நம்ம ஊரு எம்.எஸ்.விஸ்வாதன், மாமா கே.வி.மகாதேவன் மாதிரி, எம்.ஜி.ஆர்., போன்ல சொன்னதும், அதுவே போதும்ன்னு ஆர்மோனியத்தை அவுத்து ட்யூன் போட மாட்டாங்க...' என்று விளக்கினார் பாலுராவ்.

'சரி வா... மியூசிக் டைக்டரரைப் பார்த்து, பேசிட்டுக் கிளம்பலாம்...' என்றார் தேவர்.

தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

பா. தீனதயாளன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us