தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 10, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 10, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கலைவாணர் என்.எஸ்.கே., மகன் நல்ல தம்பி கூறியது: பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்தவர் என் தந்தை கலைவாணர். ஆனால், தான் சம்பாதித்ததை எல்லாம் தர்மத்திற்கே செலவிட்டார்.

இதனால் அவர் இறந்த பின், குடும்பத்தில் வறுமை. இந்நிலையில், இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன்; ஆனா, பண வசதி இல்ல.

எம்.ஜி.ஆருகிட்ட உதவி கேட்கலாம் என்று போயிருந்தேன்.

'எவ்வளவு தேவை?' என்று கேட்டார் எம்.ஜி.ஆர்., '3,000 ரூபாய்...' என்றதும், உடனே ஏற்பாடு செய்து கொடுத்தவர், 'காலேஜுல சேர்றதுக்கு முன் என்னை வந்து பாத்துட்டுப் போ...' என்றார்.

காலேஜ் அட்மிஷன் கிடைத்த பின், எம்.ஜி.ஆரிடம் விஷயத்தை சொல்வதற்காக அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அரசியலில் அவர் பிசியா இருந்த நேரம் அது. குளிச்சு முடிச்சு, ஏழு மணிக்கு அறைக்கு வந்த எம்.ஜி.ஆர்., 'யாரு வெளியே உட்கார்ந் திருக்கிறது...' என்று தன் உதவியாளரிடம் கேட்டார்.

'கலைவாணர் பையன்...' என்றதும், வரச் சொன்னார். உள்ளே போனதும், 'காலேஜுல இடம் கிடைச்சுதா?' என்று கேட்டார்.

'இடம் கிடைச்சிடுச்சு; அதான் உங்கள பார்த்து சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன்...' என்றேன்.

'உங்க அப்பா எவ்வளவு வருமான வரி கட்டுனாருன்னு தெரியுமா?' என்று கேட்டார்.

'தெரியாது...' என்றேன்.

'ஒன்றரை கோடி ரூபாய் வரி கட்டுனாரு; அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப்பாரு...'

'பல கோடி ரூபா இருக்கும்...'

'இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?'

'ஒண்ணும் இல்ல...'

'செல்வம் அழியும்; ஆனா, கல்வி அழியாது. அதனால் தான், கல்விக்கு உதவி செஞ்சிருக்கேன். இது, உன்னை கடைசி வரைக்கும் காப்பாத்தும்; கைவிடாது...' என்றார்.

அவர் சொன்ன மாதிரியே, படிச்சு முடிச்சு, வேலைக்குப் போய், நல்லா சம்பாதிச்சேன். இப்பவும் எனக்கு மாசா மாசம் பென்ஷன் வருது.

'பொம்மை' சினிமா இதழுக்காக, 1967ல், இன்றைய தமிழக முதல்வரும், அன்றைய திரைப்பட நடிகையுமான ஜெயலலிதா, சிவாஜிகணேசனை பேட்டி எடுத்ததிலிருந்து:

ஜெ: உங்களுக்கு எவ்வளவோ ரசிகர் இருக்காங்க; நீங்க யாருக்கு ரசிகர்?

சிவாஜி: நாடகங்களில் நடித்த காலத்தில் பி.ஆர்.பந்துலுவுக்கும், சார்லஸ் போயர் என்ற ஆங்கில நடிகருக்கும் நான் ரசிகன்!

ஜெ: நீங்க விரும்பி பலமுறை பார்த்த படம்?

சிவாஜி: ருடால்ப் வாலன்டினோ நடித்த, தி ஷீக்!

ஜெ: ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், மறக்க முடியாத சில சம்பவங்கள் இருக்கும்; உங்களுக்கு?

சிவாஜி: எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆசிய - ஆப்ரிக்க பட விழா அது... சிறந்த படங்களுக்கான, 'ரிசல்ட்' சொல்லப் போறாங்க... நான் பின் சீட்டில உட்கார்ந்திருந்தேன். பல்வேறு நாடுகள்ல இருந்து நிறைய கலைஞர்கள் கூடியிருக்காங்க. அவங்க எல்லாம், என்னை டெக்னீஷியன்னு நினைச்சிட்டாங்க போல!

நீதிபதிகள், 'சிறந்த படம், கட்டப்பொம்மன்; சிறந்த நடிகர், கட்டபொம்மன்னா நடிச்ச சிவாஜி கணேசன்'ன்னு சொல்லி, என்னை கூப்பிட்டாங்க. நான் எழுந்து நிக்கிறேன்... பிரமிப்பில் தலை சுற்ற ஆரம்பித்தது. என் பக்கத்தில் அமர்ந்திருந்த பத்மினி, என்னை தாங்கிப் பிடிச்சுக்கிட்டாங்க; இல்லன்னா நிச்சயம் விழுந்திருப்பேன். என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்ட அந்த நாள் தான், என் வாழ்வில் மறக்க முடியாதது!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us