
'திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு' என்ற நூலிலிருந்து: தன் சமகால அரசியல் நிகழ்வுகளை தலையங்கமாக எழுதுவதில், பெயர் பெற்றவர் கல்கி.கிருஷ்ணமூர்த்தி. அவர், 'கல்கி' இதழில், ஜூலை, 1954ல் தேவிகுளம் தமிழர் போராட்டம் பற்றி எழுதியிருந்தார்.
அதில், தேவிகுளத்தின் பூர்வீகக் குடிகள், தமிழர் என்பதை தெளிவுபட கூறி, 'வெள்ளையர்கள் காலத்தில் அங்கு குடியேறி, தோட்டங்களை அமைத்தனர் தமிழர்...' என்று விளக்கி, அதனால், தமிழர் போராட்டம் நியாயமானது என்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எழுதினார். அதை, 'தினமலர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.
ஜூலை, 11, 1954ல், 'ஆனந்த விகடன் இதழ்' வெளியிட்ட செய்தியையும், 'தினமலர் நாளிதழ்'தான், தன் இதழில் பதிவு செய்தது. அதில், 'திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்தில், பதவியில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, சோஷலிஸ்ட் இருந்தாலும் சரி, தமிழர்கள் ஒரேவிதமாகத் தான் நடத்தப்படுவர்; அதாவது, சீராக ஒடுக்கப்படுகின்றனர்...' என எழுதி, அன்றைய தமிழர் நிலையை, அரசியல் அரங்கிற்குக் கொண்டு வந்தது. 
அத்துடன், ஜூலை 24, 1954ல், 'தினமலர் நாளிதழ்' கொச்சியில் தமிழர் படும் துன்பங்களை தலையங்கமாக எழுதியது. அதில் 'கொச்சியில், மூன்று மந்திரி சபைகளிலும், தமிழர்களின் நியாயமான உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன என்றும், காங்கிரஸ் அமைச்சரவை திவாலாகி விடும் என்ற நிலைமை வந்ததும், வேண்டாவெறுப்பாக சிதம்பரநாதன் நாடாரை அமைச்சராக்கினர்...' என்று, போராட்டத்திற்கான நியாயத்தை வெளிச்சமிட்டுக் காட்டின.
அல்லையன்ஸ் வெளியீடான, 'இந்துமத உபாக்கியானம்' நூலிலிருந்து: பாரதப் போரில், 15ம் நாள்... துரோணாச்சாரியாரின் கொடிய யுத்தத்தை தாங்க முடியாத பாண்டவ சேனை, சிதறி ஓடியது. அதனால், கிருஷ்ணர், அர்ஜுனனை நோக்கி, 'துரோணர் கையில் ஆயுதம் இருக்கும் வரை, அவரை ஒருவராலும் வெல்ல முடியாது; மகன் அசுவத்தாமா மீது, அவருக்கு உயிர். நாம் அசுவத்தாமாவைக் கொன்று, அச்செய்தியை அவருக்கு தெரிவித்தால், அதிர்ச்சியில், தம் ஆயுதங்களை கீழே போட்டு விடுவார்; அப்போது, அவரைத் தாக்கி, வென்று விடலாம்...' என்றார். ஆனால், குருநாதரின் மகனைக் கொல்ல, சம்மதிக்கவில்லை அர்ஜுனன்.
இதனால், அசுவத்தாமா எனும் பெயர் கொண்ட யானையை கொன்று, போர்க்களத்தில் துரோணாச்சாரியாரிடம் சென்று, 'அசுவத்தாமா இறந்தான்...' என்று சொன்னான் பீமன். இதை நம்பாமல், 'சத்தியம் தவறாத, உண்மையையே பேசும் தருமர் வந்து சொன்னால் தான் நம்புவேன்...' என்றார் துரோணர்.
கிருஷ்ணர், தர்மரிடம் வந்து, பாண்டவ சேனை துரோணரால் படும்பாட்டை எடுத்துக்கூறி, 'துரோணரிடம் சென்று, அசுவத்தாமா இறந்தான் என்று சொல்லி எங்களைக் காப்பாற்றும்...' என்றார். மேலும், 'பல உயிர்களை காப்பாற்ற, ஒரு பொய் சொல்வது பாவம் அல்ல!' என்றும் சமாதானம் சொன்னார்.
பீமன் குறுக்கிட்டு, 'நான் அசுவத்தாமா என்ற யானையை கொன்றிருக்கிறேன். ஆகவே, அசுவத்தாமா இறந்தான் என்று நீங்கள் சொல்வது முற்றிலும் பொய்யாகாது; எங்களை காப்பாற்றிய புண்ணியமே உங்களுக்கு சேரும்...' என்று தைரியம் சொன்னான்.
தருமரின் மனமோ, இப்படி பொய் கூற, பதைத்தது. ஆனால், இப்படி சொல்லாவிட்டாலோ, பெரிய ஆபத்து நேரும் என்பதை அறிந்தார். கடைசியில் ஒருவாறு மனதை திடப்படுத்தி, போர்க்களத்திற்கு வந்து துரோணர் காதில் விழும்படி, உரத்த குரலில், 'இறந்தான் அஸ்வத்தாமா... என்ற நம் யா...னை...' என்றார். முதல் பாதியை உரத்தும், மறுபாதியை மெல்லிய குரலிலும் சொன்னார். அவர் உச்சரித்த மறுபாதி, துரோணர் காதில் விழுந்து விடாதபடி, பக்கத்தில் இருந்தவர்கள், துந்துபி முழங்கி, தடுத்து விட்டனர்.
தருமரின் இச்செயல், அவரது மகிமையை குறைத்து விட்டது. அதுவரை பூமியின் மேல்படாமல் நான்கு விரற்கடை உயரத்தில் ஓடிய அவரது ரதம், உடனே பூமியில் இறங்கி ஓடலாயிற்று. இப்பாவத்தினால், தருமர் சொர்க்கம் போகும் போது, நரகத்தின் துன்ப காட்சிகளை பார்த்தவாறே போகும்படி நேரிட்டது.
நடுத்தெரு நாராயணன்

