
அன்புள்ள அக்காவிற்கு —
என் வயது, 43; என் கணவர் வயது, 48. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். ஆனால், வேலைக்கு போகவில்லை. என் கணவர் சி.ஏ., படித்து, பிரபல தனியார் நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட்டாக உள்ளார். கல்லூரியில் படிக்கும், ஆண், பெண் என இரு பிள்ளைகள். வாழ்க்கை வசதிக்கு குறைவில்லை. ஆனால், மிகுந்த மன உளைச்சலால் அவதிப்படுகிறேன்.
என் கணவர், பணி நிமித்தமாக நான்கு ஆண்டுகள் வெளிநாடு சென்றிருந்தார். அதனால், என் குழந்தைகளுடன், என் பெற்றோர் ஊருக்கு சென்று விட்டேன். அருகில் உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தேன். என் போறாத வேளை, பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது, ஒருவன் அறிமுகம் ஆனான். அந்த ஈனப் பிறவியிடம் என்ன பார்த்தேனோ தெரியவில்லை. நான் என்னையே மறந்து, அவனுடன் தகாத உறவை வளர்த்துக் கொண்டேன். அவனுக்கும், இரண்டு மகன்கள்.
அவன் மனைவி, அவனிடம் அடிக்கடி சண்டை போட்டு, அவள் பெற்றோர் வீட்டுக்கு போய் விடுவாள். இதனால், பெரும்பாலும் அவன் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டான். நான் சாக்கடையில் விழுந்தேன். ஒரு வழியாக தெளிந்தேன்.
நான்கு ஆண்டுகள் கழித்து, வெளிநாட்டிலிருந்து என் கணவர் வந்ததும், நகரத்தில் குடியேறினோம். காலங்கள் ஓடினாலும், தவறு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு, என்னை மிகவும் சாகடித்தது. இதனால், மன அமைதிக்காக யோகா பயிற்சி பெற்றேன். அது முதல், ஏனோ எல்லா விஷயத்தையும், என் கணவரிடம் கூறி, அவர் காலில் விழுந்து கதற வேண்டும் போல் இருக்கும். அப்போது எல்லாம் அழுவேன்.
ஒருநாள், நானும், என் கணவரும் தனித்து இருக்கும் போது, 'ஏன் அடிக்கடி எதையோ நினைத்து அழுகிறாய்... எதையாவது தொலைத்து விட்டாயா... எதுவாய் இருந்தாலும் தயங்காமல் சொல்...' என்றார் என் கணவர். எனக்கு இருந்த மன உளைச்சலில், எல்லா விஷயத்தையும் கூறி விட்டேன்.
அன்று முதல் அவர் என்னிடம் பேசுவதோ, நெருங்குவதோ இல்லை. போதாக்குறைக்கு, அவர் அலுவலகத்தில், இவரை விட, வயது குறைந்த இளம் பெண்ணுடன் சிநேகம் வேறு! இவருக்கு கீழ் வேலை செய்யும் அவள், பலமுறை என் வீட்டிற்கு வந்து, என் குழந்தைகளோடும், என்னுடனும், என் கணவரோடும் கலகலப்பாக பேசி, சாப்பிட்டு விட்டு செல்வாள்.
சில மாதங்களுக்கு முன், அவளை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், எனக்கு வேண்டிய பொருளாதார தேவைகளை செய்து விடுவதாகவும், என்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறினார். நான், அப்பெண்ணிடம், 'உனக்கு வெட்கமாக இல்ல; திருமணம் ஆனவரை ஆசைப்படுகிறாயே...' என்றேன். அதற்கு, 'வெட்கத்தை பற்றி, நான் உன்னிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்...' என்று அவள் கூறியதும், என் உடம்பில் ஆயிரம் தேள் கொட்டியது போல் இருந்தது.
என் குழந்தைகளுக்கு, என் விஷயம் தெரியாது. அவர் அந்த பெண்ணுடன் வைத்து இருக்கும் உறவு மட்டும் தெரியும்; அதனால், அவர் இல்லாத போது அந்த பெண்ணை மட்டும் திட்டுவர்.
அக்கா... தயவு செய்து எனக்கு நல்ல அறிவுரையை கூறுங்கள்.
— இப்படிக்கு, 
பதிலுக்கு காத்திருக்கும்
உங்கள் தங்கை.
அன்புள்ள சகோதரிக்கு —
பொறுக்கிகளையும், ரவுடிகளையும், சில வகை பெண்களுக்கு உடல் ரீதியாக பிடிக்கிறது. எதிர்மறை பிரபல்யம் அவர்களை ஈர்க்கிறது. அப்படித்தான் ஒரு பொறுக்கியுடன், நீ கள்ள உறவு கொண்டிருக்கிறாய். உன் கணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய உடன், அந்த உறவை துண்டித்து விட்டாய். வெளிநாட்டில் நான்கு ஆண்டுகள் மனைவி அருகாமையில் இல்லாத நிலையில் உன் கணவர், என்னென்ன லீலைகளில் ஈடுபட்டார் என்பதை உன்னிடம் கக்கினாரா... நீ மட்டும் எதற்கு உன் கள்ள உறவை கூறி, உன் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொண்டாய்?
உனக்கு போட்டியாக, உன் கணவரும் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். தன் கள்ளக் காதலியை தக்க வைக்க, வழிவகை தேடியுள்ளார். இந்நிலையில் நீ எல்லாவற்றையும் கொட்டியது, அவருக்கு சாதகமாய் போய் விட்டது.
இளம் பெண்ணை பிடிக்க, உன் மீது குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார் உன் கணவர். இந்த யுக்தியால், 'அய்யோ பாவம் நம் மேலதிகாரி...' என்ற பச்சாதாபம் தோன்றி, ஒரு கட்டத்தில் கள்ளக் காதல் மலர்ந்துள்ளது.
இரு தரப்பு பெரியவர்களை அழைத்து, கணவனின் கள்ளத் தொடர்பை கத்தரிக்க பார். சட்டப்படி விவாகரத்து பெற்றால் தான், உன் கணவன் தன் கள்ளக் காதலியை மறுமணம் செய்து கொள்ள முடியும். நீ எளிதில் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காதே. குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு நடக்கட்டும். வழக்கு விசாரணையில், 'கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பம்...' என தெரிவி.
அப்பெண் திருமணமானவள் என்றால், அவளது கணவனிடம் பேசி, தொடர்பை துண்டிக்க வழி பார். அவளது கணவரை விவாகரத்து செய்தால் தான் திருமணம் செய்ய முடியும்.
இரண்டு பக்கமும் விவாகரத்து கிடைக்க எவ்வளவு நாளாகுமோ... இந்த இடைவெளியில், உன் கணவரிடம் நீ மனம் விட்டு பேசு. 'செய்த தவறை மறைக்காமல் கூறி பாவமன்னிப்பு பெற முயற்சித்ததுக்கு தண்டனை தரலாமா?' என கேள். மேலும், 'நம் திருமண பந்தம் நீடிக்கவும், மகன், மகள் எதிர்காலம் சிறக்கவும், என் தவறை மன்னியுங்கள்; என் தவறை தண்டிக்க, நீங்கள் ஒரு தவறு செய்யாதீர்கள்...' எனக் கூறு.
உன் கணவர் எதற்கும் மசியவில்லை என்றாலும், இரு தரப்பிலும் விவாகரத்தும் கிடைத்து, அவர் அவளை மறுமணம் செய்து கொண்டார் என்றாலும் பரவாயில்லை. உன் கணவரிடமிருந்து தகுந்த ஜீவனாம்சம் கேட்டுப் பெறு. படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக்கொள்.
உன் மகன், மகளின் படிப்பைக் கவனி. அவர்களுடன் சேர்ந்து வாழ். காலம் முழுக்க உன் குழந்தைகள் உன் சார்பாகவே இருக்க, அவர்களுடன் மனம் விட்டுப் பேசு.
மன அழுத்தத்தை போக்கும் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபடு. கணவன் இல்லாமலும், உபயோகரமான வாழ்க்கை வாழ முடியும் என்பதை, இவ்வுலகிற்கு நிரூபி.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

