
ஆர்.வி.பதி எழுதிய, 'தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: இளம் வயதிலேயே கனக சுப்புரத்தினத்திற்கு கவிதை மீது மிகுந்த ஆர்வம். பாரதியார் எழுதிய சில பாடல்கள், 'சுதேச கீதங்கள்' எனும் தலைப்பில், சிறு பிரசுரமாக வெளியாகி, பலருக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டது. பாரதியின் சீடர் குவளை கிருஷ்ணமாச்சாரி, அப்பாடல்களை சுப்புரத்தினத்திற்கு கொடுத்தார். அதைப் படித்ததும், பாடல்களில் மயங்கிப் போனார் சுப்புரத்தினம்.
ஒருமுறை, பாண்டிச்சேரி வீதியில் முதன்முதலாக, பாரதியை பார்த்தார் சுப்புரத்தினம்; ஆனால், அவர் தான் பாரதி என்பது அவருக்கு தெரியாது. அவரைப் பார்த்ததும், புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மா வரைந்த, 'பரமசிவம்' எனும் ஓவியமே அவரது நினைவுக்கு வந்தது. அதனால், அன்று முதல் அவரது மனதில், பாரதியின் முகம், 'ரவிவர்மா பரமசிவம்' என்ற பெயரால் பதிந்து விட்டது.
பின், வேணு நாயக்கர் என்பவரின் திருமண விழாவில் நடந்த பாட்டுக் கச்சேரியில், பாரதியாரின், 'வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ...' எனும் பாடலை கணீர் குரலில் பாடினார் சுப்புரத்தினம். அந்நிகழ்ச்சிக்கு பாரதியும் வந்திருந்தார்.
பாடி முடித்ததும், சுப்புரத்தினத்திற்கு, பாரதியை காட்டி, 'இவரை யார் என்று தெரியுமா?' என்று கேட்டார் வேணு நாயக்கர்.
'தெரியாது...' என்றார் சுப்புரத்தினம். அப்போது பாரதி குறுக்கிட்டு, 'தமிழ் வாசித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். 'கொஞ்சம் படித்திருக்கிறேன்...' என்றார் சுப்பு ரத்தினம். 'அதனால தான், பாடலை உணர்ந்து பாடுறீங்க...' என்று அவரை பாராட்டினார் பாரதி.
'சுப்பு... இப்ப நீ பாடினாயே... இந்த பாட்டையெல்லாம் எழுதின பாரதி இவர் தான்...' என்று கூறி, பாரதியை அறிமுகப்படுத்தினார் வேணுநாயக்கர்.
அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர அடைந்த சுப்புரத்தினத்திடம் சிறிது நேரம் பேசிய பாரதி, வேணு நாயக்கரிடம், சுப்புரத்தினத்தை தம் வீட்டிற்கு ஒருமுறை அழைத்து வருமாறு அழைப்பு விடுத்தார்.
இருவரும், ஒருநாள் பாரதி இல்லம் சென்றனர். அன்று முதல் சுப்புரத்தினம், பாரதியின் சீடராகவும் ஆனார். பாரதி சொல்வதை எழுதுவதும், அவர் எழுதியதை பிரதி எடுப்பதும் அவரது பணியாயிற்று. பாரதி மீது கொண்டிருந்த அன்பு மிகுதியால், தன் பெயரை, 'பாரதிதாசன்' என்று மாற்றிக்கொண்டார்.
மறைந்த நடிகர் டி.எஸ். பாலையா, 'குண்டூசி' சினிமா இதழில் (1954) எழுதியது: என் முழுத் திறமையையும், உற்சாகத்தையும் திரட்டி, என்றென்றும் மறவாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து, நானும் மகிழ்ந்து, மக்களையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே, என் நீண்ட நாளைய கனவு; லட்சியம். அதற்கேற்ற வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
கவுண்ட் ஆப் மாண்டி கிறிஸ்டோ என்ற ஆங்கில படத்தில் வரும், மாண்டி கிறிஸ்டோ போன்ற கதாபாத்திரத்தை, தமிழில் சிருஷ்டிக்க வேண்டும்; முடியும் என்றே நினைக்கிறேன். இதுவரை, நான் நடித்த எந்தப் படமும் எனக்கு முழு திருப்தியைத் தராத போதிலும், என் லட்சியத்தை ஒருவாறு எட்டிப்பிடித்த படங்களுள், வேலைக்காரி படத்துக்குத் தான் முதலிடம்! அப்படத்தில், பழி தீர்க்கும் படலக் காட்சி, சினிமா ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
பணத் திமிரால், மனிதத் தன்மையை இழந்த வேதாசல முதலியாரின் கொட்டத்தை அடக்க, நான், ஆனந்தனுக்கு (கே.ஆர்.ராமசாமி) சூழ்ச்சி சொல்லிக் கொடுக்கும் காட்சி வருகிறதல்லவா? நான் படங்களில் தோன்றிய எல்லா காட்சிகளையும் விட, அக்காட்சி தான், ஏ ஒன்!
நடுத்தெரு நாராயணன்

