sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடவுளை சரணடைந்தால்...

/

கடவுளை சரணடைந்தால்...

கடவுளை சரணடைந்தால்...

கடவுளை சரணடைந்தால்...


PUBLISHED ON : மார் 13, 2016

Google News

PUBLISHED ON : மார் 13, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தரையில் நடப்பவனுக்கு தான் மேடு, பள்ளம், ஆண், பெண், மரம், விலங்கு ஆகிய பேதங்கள் தெரியும். ஆகாய விமானத்தில் செல்பவனுக்கு, ஒரு வித்தியாசமும் தெரியாது; எல்லாம் ஒன்று போல தெரியும். மனம் பக்குவம் அடைந்தவர், உயிர்களிடையே பேதம் பார்ப்பதில்லை. அவ்வாறு இருக்கையில், தான் படைத்த உயிர்களிடையே இறைவன் பேதம் பார்ப்பாரா...' என்றார் கிருபானந்த வாரியார்.

தெய்வம் ஒருபோதும் பேதம் பார்க்காது என்பதை, யானை, பாம்பு முதலானவைகள் பூஜை செய்து, நன்னிலை பெற்றதை இதிகாச புராணங்கள் நமக்கு விளக்கியுள்ளன. அதனால், தெய்வம் எக்காலத்திலும் அருள் புரியத் தவறுவது இல்லை. அவரின் அடியவர்களும் தெய்வத்தை மறப்பதில்லை.

வேதாந்த தத்துவங்களை மாணவர்களுக்கு கற்பித்து வந்தார், குருநாதர் ஒருவர். அவருடைய மாணவர்களில் ஒருவர், அவரிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஒருசமயம், அக்குருநாதரிடம் உணவுத் தேவைக்கு கூட பணம் இல்லாமல், அவரும், குடும்பத்தாரும் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர். ஆனால், அவர் தன் நிலையை வெளிப்படுத்தி, யாரிடமும் உதவி கேட்கவில்லை. வாட்டத்தை முகத்தில் காட்டாமல் பாடம் நடத்தினார்.

மூன்றாவது நாள், பாடம் நடைபெறும் வேளையில், குருநாதருக்கு தந்தி வந்தது. அதை வாங்கி பிரித்து படித்ததும், அவரது கண்களில் இருந்து, கண்ணீர் வழியத் துவங்கியது. அதைப் பார்த்த சீடருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எது நேர்ந்தாலும் மனம் கலங்காத குருநாதர், இப்படி கண்ணீர் விடுகிறாரே... என்ன காரணம்...' என நினைத்து, 'குருதேவா... வேதாந்தத்தை வாய் வார்த்தைகளால் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் நீங்கள்; இதுவரை நீங்கள் கலங்கி நான் பார்த்ததே இல்லை. இன்று என்ன ஆனது... உங்கள் கண்ணீருக்கான காரணத்தை நான் அறியலாமா?' எனக் கேட்டார்.

தன் கையிலிருந்த தந்தியை, சீடரிடம் கொடுத்தார் குருநாதர். அதில், 'ஐயா... அடியேன் சிவபக்தன்; இல்லத்தில் சிவலிங்கத்தை வைத்து, வழிபாடு செய்கிறேன். நேற்றிரவு என் கனவில் சிவபெருமான் எழுந்தருளி, 'மூன்று நாட்களாக உன் வழிபாட்டை நான் ஏற்கவில்லை. காரணம், என் பரம பக்தனான வேதாந்தி, மூன்று நாட்களாக பட்டினி கிடக்கிறார். உடனே, அவருக்கு உன்னால் முடிந்த பொருள் உதவியைச் செய்; அவர் உண்ட பின் தான் நான் உண்பேன்...' என்றார். சிவபெருமான் உத்தரவுப்படி, மணியார்டர் மூலம், 10 ரூபாய் அனுப்பியுள்ளேன்; பெற்றுக் கொள்ளுங்கள்...' என எழுதியிருந்தார், சிவபக்தரான அந்த செல்வந்தர்.

தந்தியை படித்ததும், 'தெய்வம் எப்படியெல்லாம் அருள் செய்கிறது...' என்று வியப்பு ஒருபுறம் இருந்தாலும், 'நம் குருநாதர் மூன்று நாட்கள் பட்டினியாக இருந்தும், அதை வெளிப்படுத்தாமல் பாடம் நடத்தியிருக்கிறாரே...' என்கிற வேதனையில் சீடர் அழுதார்... 'குருநாதா... நீங்கள் என்னை சீடனாகவும், மகனாகவும் நினைக்கும் பட்சத்தில், ஒரு வார்த்தை கூட என்னிடம் சொல்லாமல், நீங்கள் பட்டினி இருக்கலாமா... தெரிந்திருந்தால், நான் ஏதாவது ஏற்பாடு செய்திருப்பேனே...' என்று வருந்தினார் சீடர்.

அவரை கட்டி தழுவிய குருநாதர், 'அப்பா நீ கவலைப்படாதே... என்னைக் காப்பாற்ற, என் தந்தை சிவபெருமான் இருக்கும் போது, சீடனான உன்னை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும். என்னைப் பற்றிய கவலை சிவபெருமானுக்கு இல்லையா என்ன... குழந்தை, தாயை நம்பி இருப்பதைப் போல, நாம் தெய்வத்தை நம்பி வாழ்ந்தால், நமக்கு ஒரு குறைவும் வராதே... காப்பாற்றக் கடவுள் இருக்கும் போது, உதவி கேட்டு அடுத்தவரை இம்சைப்படுத்தலாமா...' என்றார்.

அந்த குருநாதர் பெயர் ஸ்ரீசிவராம் கிங்கர்ஜி; அவரது சீடர் பெயர் நரேந்திரன். ஆம், விவேகானந்தர் தான் அந்த சீடர்!

விவேகானந்தர் எனும் திருநாமம் பெறுவதற்கு முன், அவர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது!

ஆழமான பக்தி கொண்டவர்களை காப்பாற்ற, ஆண்டவன் தவறுவதே இல்லை. பக்தி நம் அல்லல்களை தீர்த்து, தொல்லைகளை தடுக்கும்!

பி.என்.பரசுராமன்

திருவாசகம்!

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு

இங்கு அறிவு இன்றி

விளைவு ஒன்றும் அறியாதே

வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு

அளவிலா ஆனந்தம் அளித்து

என்னை ஆண்டானைக்

களவிலா வானவரும்

தொழு தில்லை கண்டேனே!

விளக்கம்: அளவேயில்லாத பல வகை எண்ணங்களால் அமுக்கப்பட்டு, அறிவு இல்லாமல், பின் விளைவுகள் எதைப்பற்றியும் அறியாமல் இவ்வுலகில் வெறுமையாளனாக கிடந்தேன். அப்படிப்பட்ட எனக்கு அளவில்லாத ஆனந்தத்தை அளித்து, என்னை ஆண்டருளிய பெருமானை, தூய்மையான தேவர்களும் வணங்குகின்ற இறைவனை, தில்லையம்பதியிலே நானும் கண்டேனே!






      Dinamalar
      Follow us