
எட்டயாபுரம், பா.நா.கணபதி எழுதிய, 'நினைவுகள்' நூலிலிருந்து: ஒரு முதிய காங்கிரஸ் தியாகி, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும்போது, தன் பெயருடன், மே/பா. காமராஜர், தலைவர், சத்தியமூர்த்திபவன், சென்னை என, பதிவேட்டில் எழுதி கொள்ளும்படி கூறினார்.
ஒருநாள், அம்முதியவர் திடீரென்று இறந்து விட்டார். அவர் தந்த முகவரிப்படி காமராஜருக்கு தகவல் தரப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ந்து போனார் காமராஜர். ஏன் என்றால், இறந்தவர் யார் என்றே அவருக்கு தெரியாது.
'இறந்தவர் காங்கிரஸ் தியாகி; என் முகவரியை தந்திருக்கிறார். அவருக்கு என்னிடம் அவ்வளவு நம்பிக்கை! தியாகியின் இறுதி சடங்கை நல்ல முறையில் செய்ய வேண்டும்...' என்ற கடமையுணர்வு அவரது உள்ளத்தில் மேலிட்டது.
மருத்துவமனை சென்று, இறந்தவரின் உடலை பெற்று, நல்லடக்கம் செய்யும்படி, செயலர் வி.எஸ். வெங்கட்ராமனிடம் தெரிவித்தார். அன்று, தன் வழக்கமான நிகழ்ச்சிகளை ரத்து செய்தவர், செயலற்றவராக, ஈஸி சேரில் சாய்ந்து விட்டார்.
சடலம், மூலகொத்தளம் சென்றடைந்து, எரியூட்டும் சமயம் அங்கு சென்ற காமராஜர், 'இந்த தியாகி யாரோ... வீடு, வாசல், மனைவி, மக்கள் எல்லாவற்றையும் துறந்து, காங்கிரசில் சேர்ந்து பல அவஸ்தைகள் பட்டும் கூட, அக்கட்சியிடம் நம்பிக்கை இழக்காத இவர், மரணம் அடையும் முன், காங்., அலுவலக விலாசமே தந்துள்ளார். இவருக்கு நாம் எல்லாருமே கொள்ளி போடுவோம்...' என்று, நா தழுதழுக்க கூறிய வார்த்தைகள், அனைவரையும் கண்ணீர் விட செய்தன.
ஒரு எளிய தியாகிக்காக, தியாக சீலரான காமராஜர் சிந்திய கண்ணீர், தூய்மையான அன்பின் வெளிப்பாடாக விளங்கியது.
ஒரு கட்டுரையில், கி.வா.ஜ., எழுதியது: கவிதை, சங்கீதம் மற்றும் நாடகம் போன்ற கலைகள் எதுவானாலும், ரசிகர்கள் இருந்தால் தான், கலைஞர்கள் மகிழ்ந்து, மேலும் தம் திறமையை காட்டுவர். கலைஞர் உள்ளம் வெறும் பணத்துக்கோ, கொடைக்கோ மகிழாது.
மாடு தன் காதை மட்டும் ஆட்டுவதைப் போன்று ஆட்டுவது, கோகர்ண வித்தை; யானை தன் காது நுனியை மட்டும் ஆட்டும்; அதைப் போன்று செய்வது கஜகர்ண வித்தை. ஒரு வித்தையாடி, இந்த வித்தைகளை எல்லாம் செய்வதுடன், மாடு மாதிரி குரல் எழுப்புவான்; யானை மாதிரி பிளிறுவான். பலவகை விலங்குகளைப் போல நடிப்பான்.
ஒருநாள், ஓர் வித்தைகாட்டி, அரசன் ஒருவனின் சபைக்கு வந்து, தன் வித்தைகளை காட்டத் துவங்கினான்; எல்லாரும் பார்த்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு வித்தை முடிந்தவுடன், அதற்கேற்ப பரிசை அளித்து வந்தான் அரசன். இந்நிலையில், பார்வையாளர் கூட்டத்தில், பசு மேய்க்கும் இடையன் ஒருவன், கோலை ஊன்றி, ஓட்டை கம்பளியை தலைமேல் போட்டு, வித்தைகளை கவனித்தவாறு இருந்தான்.
பசுமாடு மாதிரி நடிக்க துவங்கினான் கலைஞன். வால் போன்ற ஒன்றை, பின்னால் செருகி, அதை ஆட்டினான்; காதை தனியே ஆட்டினான். வேடிக்கை பார்த்த இடையன், வித்தைக்காரன் அருகில் வந்து என்னவோ செய்தான். அடுத்த நிமிடம், தான் போர்த்தியிருந்த ஓட்டை கம்பளியை, அவன் மேல் போட்டு விட்டுப் போய் விட்டான்.
வித்தைகள் எல்லாம் முடிந்தன. வித்தைக்காரன் முதலில் அந்தக் கம்பளியை எடுத்து மடித்து, கண்ணில் ஒற்றி, பெட்டிக்குள் வைத்தான். அதை பார்த்த அரசனுக்கு கோபம் வந்து, 'என்னை நீ அவமதித்து விட்டாய்.... இடையன் போட்ட கம்பளிக்கு கொடுத்த மரியாதையை, நான் வழங்கிய பரிசுகளுக்கு கொடுக்கவில்லையே... அந்த ஓட்டை கம்பளி உனக்கு பெரிதாக போய் விட்டதா...' என்று கேட்டான்.
'அரசே... அந்த கம்பளி கொடுத்தவர், எதை பார்த்து ரசித்தார், தெரியுமா?' என்றான் வித்தைக்காரன்.
'நீ மாடு மாதிரி நடந்ததையும், காதை ஆட்டினதையும் பார்த்திருப்பான்; அவனுக்கு மாடு தானே தெரியும்...' என்றான் அரசன்.
வித்தைக்காரன் நிதானமாக, 'அரசே... அவர் என் நடிப்பில் ஒரு நுட்பத்தை கண்டு மகிழ்ந்தார். நான் மாடாக நடித்த போது, ஒரு சிறு பருக்கை கல்லை எடுத்து, என் மேல் போட்டார். அந்த இடத்தை மட்டும், நான் சுழித்துக் காட்டினேன். அதன் அருமையை உணர்ந்து, அந்த கம்பளியை அளித்தார். ஓட்டம் அறிந்து வழங்கியதால், அதை பெரிதாக கருதுகிறேன்...' என்றான்.
நடுத்தெரு நாராயணன்

