sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 24, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணதாசன் எழுதிய, 'எண்ணங்கள் ஆயிரம்' நூலிலிருந்து: நல்ல உள்ளமும், ஞாபக மறதியும் படைத்த பொதுமக்களே...

உங்களை வணங்குகிறோம்; தெய்வம் வரம் கொடுப்பது போல, எங்களுக்கு பதவி கொடுத்து, உங்களை வாழ வைக்க வந்த எங்களை, வாழ வைக்கிறீர்கள் என்பதால், உங்களை மதிக்கிறோம்.

அரசியல்வாதிகளான நாங்கள் அன்று எப்படி இருந்தோம், இன்று எப்படி இருக்கிறோம் என்று நீங்கள் ஆராயக் கூடாது. அன்று பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும் போய் கொண்டிருந்தோம்; இன்று பாரீசுக்கும், நியூயார்க்குக்கும் சென்று வருகிறோம்.

இந்த முன்னேற்றத்தை, நீங்கள் விஞ்ஞான ரீதியாகக் கணக்கிட வேண்டுமே தவிர, வேறு காரணங்களை ஆராயக் கூடாது.

நாங்கள் சிரிப்பதே, உண்மையான சிரிப்பென்றும், அழுவதே உண்மையான அழுகை என்றும் நீங்கள் நம்புகிறீர்கள்; நன்றி!

அந்த நம்பிக்கை மேலும் தொடர வேண்டுமே தவிர, இடையில் தளரக் கூடாது.

நாங்கள் மேடையில் பேசும் போது நீங்கள் ஆரவாரம் செய்கிறீர்கள். உண்மையில், நீங்கள் ஆரவாரம் செய்வீர்கள் என்று நம்பித்தான் பேசுகிறோம். உங்களுடைய புத்திக்கூர்மையில் எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை!

சில நேரங்களில் நாங்கள் உண்மையும் பேசுவதுண்டு; ஆனால், எப்போது உண்மை பேசுகிறோம் என்பது, எங்களுக்கு மட்டுமே தெரியும்.

எதிர்க்க முடியாத சூழ் நிலையில், தப்பித் தவறி பேசுகிற அந்த உண்மையை போல் தான், எங்களுடைய எல்லாப் பேச்சுகளும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும்.

நாங்கள் மேலே போட்டிருக்கும் துண்டின் நீளத்தை விட, எங்கள் நாக்கின் நீளம் அதிகம்.

வாக்காளர்களே... நீங்கள், எங்களை எந்த நேரமும் கை விட்டு விடக் கூடாது.

எங்களுக்கு வேறு தொழில் தெரியாததால் தான், இத்தொழிலுக்கு வந்துள்ளோம்.

நாட்டிலுள்ள வேலையில்லாத திண்டாட்டத்தை எங்களால் ஒழிக்க முடிகிறதோ இல்லையோ, எங்களுடைய வேலையில்லாத் திண்டாட்டம் உங்களால் ஒழிந்து விட்டது.

நாங்கள் ஜனநாயகத்தால் நியமிக்கப்பட்ட சாதாரண ஊழியர்கள்.

'மக்கள் சேவையே மகேசன் சேவை; மக்கள் குரலே மகேசன் குரல்' என்று வாழ்ந்து வருபவர்கள்.

நாங்கள் அழகான புதிய கார்களில் செல்லும் போது, அவற்றை எங்களுடைய கார்களாக நீங்கள் எண்ணி விடக் கூடாது. நாங்கள் ஏழைகள்; கார் வாங்கக் கூடிய சக்தி எங்களுக்கு ஏது... அவை, எங்கள் மனைவிமார்களின் கார்கள்!

அவர்களுக்கு எப்படி வந்ததென்று நீங்கள் கேட்கக் கூடாது. குடும்பக் கணக்கு ரகசியங்களை ஆராய்வது, அரசியலுக்கு அழகல்ல.

சென்ற தலைமுறையில் நாங்கள் செய்த புண்ணியம், இந்த தலைமுறையில், எங்களை தலைவர்களாக்கியிருக்கிறது.

நம் அரசியல் சட்டத்தின் அடிப்படை மிகவும் பரவலானது. ஒரு அரசியல்வாதிக்கோ, அவன் பதவி வகிப்பதற்கோ, இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று, அது கட்டாயப்படுத்தவில்லை.

'அப்படி இருந்தவனா இப்படி இருக்கிறான்...' என்று நீங்கள் ஆச்சரியப்படக் கூடாது. நதிமூலம், ரிஷிமூலம் மற்றும் அரசியல்வாதி மூலம் மூன்றும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.

பதவிக்கு தகுதி எப்படி நிர்ணயமில்லையோ, அப்படியே பணம் சேர்வதற்கும் தகுதி நிர்ணயமில்லை.

ஆகவே, எங்களுக்கு பதவியுடன் கூடவே பணமும் வருகிறது.

'கடைசியாக பாம்புக்கும், கீரிக்கும் சண்டை...' என்று சொல்லியே பணத்தை வசூல் செய்து, சண்டையை காட்டாமலேயே, மூட்டை கட்டும் மந்திரவாதியைப் போல், நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம்.

நாங்கள், 'வரும் வரும்...' என்று சொல்கிற நல்வாழ்வு, ஏதோவொரு நூற்றாண்டில், ஏதோ ஒரு தலைமுறையில் வரும்.

அது வரும் போது, எங்களால் தான் வந்தது என்று, நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்!

'ஊழல் ஊழல்...' என்று மற்றவர்கள் கூறுவர். அது குறித்து நீங்கள் கவலைப்படக்கூடாது. எந்த நாட்டில் தான் ஊழலில்லை?

நீங்கள் தலையால் இடும் வேலையை காலால் உதைக்க, மன்னிக்க வேண்டும்... நாக்கு குழறி விட்டது. நீங்கள் காலால் இடும் வேலையை, தலையால் உழைக்க, நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

ஆகவே, இந்தத் தேர்தலிலும், நீங்கள் எங்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்.

மறவாதீர்கள்... எங்கள் நரிக்குட்டி சின்னத்தை!

நரிக்குட்டி, ஏழைகளின் பணப்பெட்டி; வாழ்க நரிக்குட்டி; வாழ்க நாங்கள்!

இப்படிக்கு,

ஜனநாயகம் மறவா அரசியல்வாதிகள்.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us