sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 24, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 24, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா —

என் வயது, 24; திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் கணவர் கை நிறைய சம்பாதிக்கிறார். நான் படித்திருந்தாலும், என்னை வேலைக்குப் போய் கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லி விட்டார். பொழுதுபோக்கிற்காக கைவினைப் பொருட்களைத் தயார் செய்து, தெரிந்தவர்களுக்கு விற்கிறேன். என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார் என் கணவர். தாம்பத்ய வாழ்க்கையிலும் எந்தக் குறையும் இல்லை.

இத்தனை இருந்தும், ஒரு விஷயத்தில் என் கணவரின் நடவடிக்கை, விசித்திரமாக இருக்கிறது. சில சமயங்களில் என்னிடம் அடிமையைப் போல நடந்து கொள்கிறார். குறிப்பாக, தனியாக இருக்கும் போது என் பாதங்களிலேயே விழுந்து கிடக்கிறார். அத்துடன், என் பாதங்களை தன் மார்பின் மீது வைத்து, முத்தமிடுவார். விதவிதமாக வெள்ளி கொலுசுகளை வாங்கி வந்து, அணிவிப்பார். ஆரம்பத்தில் இதெல்லாம் எனக்குப் பெருமையாகவும், கர்வமாகவும் இருந்தது. இப்போது, அருவருப்பாக இருக்கிறது.

நாளுக்கு நாள், அவருடைய இந்த விசித்திர நடவடிக்கை, எல்லை மீறிப் போகிறது. என்னை, 'எஜமானியம்மா...' என்று அழைக்கிறார். ஒருநாள், எனக்கு பாத பூஜை செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்; வேறு வழி இல்லாமல், ஒத்துக் கொண்டேன். அகலமான தட்டின் மீது, என் பாதங்களை வைத்து, பயபக்தியுடன் கழுவி, தண்ணீர், பால் மற்றும் தேன் என அபிஷேகம் செய்து, அவற்றை குடித்தார். பின், பாதங்களை துடைத்து, தலையின் மீது வைத்துக் கொண்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சில சமயங்களில் நான் சாப்பிட்ட இலையில் சாப்பிட வேண்டும் என்று கெஞ்சுவார். அழகான மனைவியிடம், மோகம் கொண்ட ஆண்கள், மனைவியின் பாதங்களில் விழுவது சகஜம் தான். ஆனாலும், என் கணவர் மாதிரி, மனைவிக்கு பாத பூஜை செய்யும் கணவர்கள் இருப்பார்களா... இவர் ஏன் இப்படி செய்கிறார்?

என் கணவரைப் போன்று, பெண்களின் பாதங்களின் மீது மோகம் கொண்டோர் உள்ளனரா அல்லது என் கணவர் மன நலம் குன்றியவரா?

மிகவும் குழப்பத்தில் உள்ளேன். உங்கள் அறிவுரைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —

பெற்ற தாய்க்கு, அவளது குழந்தையின் மலம், நறுமணம் மிக்க சந்தனம். காதலியின் அழுக்குத் துணி துவைத்த ஆற்று நீரை, தேவாமிர்தம் என்கிறான் காதலன். விடியற்காலையில் பல் துலக்காத நிலையில், கணவனும், மனைவியும் ஆங்கில முத்தம் கொடுத்துக் கொள்வர். கணவனின் வியர்வை காய்ந்த சட்டையை, ஆசையாய் எடுத்து, அணிந்து கொள்வர் சில பெண்கள். சில ஆண்கள், மனைவி ஊரில் இல்லாதபோது, அவள் களைந்து போட்ட சேலையை படுக்கையில் பரத்தி, அதன் மேல் தூங்குவர்.

அகநானூற்றிலும், திருக்குறளின் காமத்துப்பாலிலும் ஆண் - பெண் உறவில் விரவி கிடக்கும் பல சுகானுபவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

உன் கணவனுக்கு உன் பாதம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தன் மனைவியரின் ஒவ்வொரு அம்சம் மிகவும் பிடித்ததாக இருக்கும்.

ஈகோ இல்லாத கணவனுக்கு, மனைவி நடமாடும் தெய்வம் போன்றவள். அவளது ஒவ்வொரு அசைவையும் ஆராதிப்பர்.

பித்த வெடிப்புள்ள விரல் மடிப்புகளில், கறுப்பு நிறம் படிந்துள்ள புற பாதத்தில் தூசியும், அழுக்கும் படர்ந்த கால்களை பார்த்து சலித்த உன் கணவனுக்கு, உன் அழகான கால்கள் பரவசத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

உன்னை உன் கணவன், 'எஜமானியம்மா...' என அழைப்பதில் பெரிய அதிசயம் இல்லை. சிலர், தன் மனைவியை, 'பெத்த தாயீ...' என கொஞ்சுவர். சிலர், 'குட்டியம்மா...' என விளிப்பர். இன்னும் சிலர், 'மதுரை மீனாட்சி...' என்றும், 'பிரதம மந்திரியே...' என்றும் கவுரவப்படுத்துவர். கணவனின் எச்சில் இலையில் மனைவி சாப்பிடலாம்; மனைவியின் எச்சில் இலையில் கணவன் சாப்பிடக் கூடாதா? மனைவிக்கு பாதபூஜை செய்யும் கணவன்மார்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் மனநலம் குன்றியவர்கள் அல்ல; அப்பழுக்கில்லாத காதலில் கனிந்தவர்கள்.

உன் பாதத்தை கழுவி, உன் கணவன் குடிக்கிறான் என்றால் குடிக்கட்டும் விடு. உன்னுடைய அழகில் பைத்தியமாக இருக்கிறான் உன் கணவன். அதனால், உன் அழகை நினைத்து பெருமைப்படு. உன் காலை எடுத்து, தன் தலையில் வைத்துக் கொள்ளும் உன் கணவரின் காமம், ஓஷோ சுட்டும் இறை நிலைக்கு உவப்பானது.

காமம் விசித்திரமானது; காம தகனத்துக்கு ஆயிரம் அசாதாரணமான உபாயங்கள் உள்ளன. எது இரு தரப்புக்கும் உல்லாசத்தை, பரவசத்தை, உணர்வின் உச்சக்கட்டத்தை தருகிறதோ, அது வரவேற்கத்தக்கதே! கணவனின் காதல் சேட்டைகளை சந்தேகக் கண்கொண்டு ஆராயாதே; அனுபவி. கணவனின் காம கிறுக்குத்தனம் ஆயுளுக்கும் தொடர இறைவனை வேண்டு.

ஆழிப் பேரலையாய் சுழன்றடிக்கும் உங்கள் தாம்பத்யத்தில் பிறக்கும் குழந்தை புத்திக்கூர்மையுடன், சாமுத்திரிகா லட்சணத்தின் படி இருக்கும்.

உனக்கு கிடைக்கும் சந்தோஷம், லட்சத்தில் ஒரு மனைவிக்கு தான் கிடைக்கும். வாழ்த்துகள் மகளே!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.






      Dinamalar
      Follow us