/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
/
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
PUBLISHED ON : ஏப் 24, 2016

ஏப்., 26 - வராக ஜெயந்தி
திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' என்றார் காஷ்யபர். ஆனால், அவள் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்; அவள் கர்ப்பமானாள்.
இச்சமயத்தில், சனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்கள், திருமாலைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களை தடுத்து, 'நாராயணனின் அனுமதியை பெற்ற பிறகே, தங்களை உள்ளே அனுமதிப்போம்...' என்றனர் ஜெய, விஜயர் எனும் துவார பாலகர்கள்.
இதனால், கோபமடைந்தனர் முனிவர்கள். இதை அறிந்த திருமால், ஜெய - விஜயரை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள், திதியின் கர்ப்பத்தில் இறங்கி, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.
இந்த உலகயே தன் கீழ் கொண்டு வர, தவமிருந்து வரம் பெற்று, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் இடையூறு செய்தான் இரண்யாட்சன். இதுபற்றி பிரம்மாவிடம் அனைவரும் முறையிட்டனர். இச்சமயத்தில், சுவாயம்புவ மனு என்ற மன்னரும், அவரது மனைவி சத்ருவையும் பிரம்மாவை தரிசிக்க வந்தனர். உலகம் அழிந்து, பூமி கடலுக்கடியில் கிடப்பதாகவும், அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டதும், பெருமூச்சு விட்டார் பிரம்மா. அந்த மூச்சுக்காற்றிலிருந்து, வராகம் (பன்றி) ஒன்று வெளிப்பட்டது.
அது ஆர்ப்பரித்தபடி, கடலுக்குள் இறங்கியது. அப்போது இரண்யாட்சன், நாரதரை சந்தித்தான்.
'நாரதரே... நான் வருணலோகம் சென்று வருணனை போருக்கு அழைத்தேன். அவனோ என் தகுதிக்கு சரியான எதிரி திருமால் தான் என்று கூறினான்; அவர் எங்கிருக்கிறார்?' என்று கேட்டான்.
இதுதான் சமயமென, கடலை நோக்கி கை காட்டிய நாரதர், 'இதற்குள் தான் திருமால் இருக்கிறார்; போய் சண்டையிடு...' என்று தூபம் போட்டார். இரண்யாட்சனும் கடலுக்குள் சென்றான். அப்போது, வராக வடிவில் இருந்த திருமால், பூமிப்பந்தை தன் கொம்பில் சுமந்தபடி வெளியே வந்தார். அவரை, வம்புக்கு இழுத்தான் இரண்யாட்சன். அவனுடன், போரிட்டு கொன்றார் வராக மூர்த்தியான திருமால்.
இரண்யாட்சனின் தம்பி இரண்யகசிபுவும், தன் மகனான பிரகலாதனைக் கொடுமை செய்ததால், திருமாலின் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.
இதன்மூலம், நேரம் தவறி உறவு கொண்டால் அசுர குணங்களுடன் குழந்தைகள் பிறப்பர் என்பது தெளிவாகிறது. இதனால் தான், மணமக்களின் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கின்றனர். வராக ஜெயந்தி நாளில் இதை தெரிந்து கொண்ட நாம், தாம்பத்யத்தை தெய்வீகமாகக் கருதி, நம் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்!
தி.செல்லப்பா

