
வசந்தகுமார் எழுதியுள்ள, 'திராவிட இயக்கக் கலாசாரம்' நூலிலிருந்து: பெண்களின் பெருமை, வர்ணனை ஆகியவைகளில் பெண்ணின் அங்கம், அவயங்கள், சாயல் ஆகியவை பற்றி, 50 வரிகள் இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி மற்றும் திறமை பற்றி, ஐந்து வரிகள் கூட இருக்காது. பெண்களின் உருவை வர்ணிப்பது மற்றும் அழகை மெச்சுவது பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு மற்றும் அடிமைத்தனம் என்பதை, ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறாள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார், ஈ.வெ.ராமசாமி.
ஆனால், இவரது சீடர்களான அண்ணாதுரையும், கருணாநிதியும், தங்கள் கதை, கட்டுரைகளில், ஈ.வெ.ராமசாமி எதை கண்டித்தாரோ, அதையே தான் செய்து வந்துள்ளனர்.
'கதைகளில், கதாபாத்திரங்களின் பார்வையில், கண்ணோட்டத்தில் சொல்லப்படுவதை, அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் சொந்த பார்வைகள் என்று எப்படிச் சொல்லலாம்?' என்று சிலர் கேட்கக்கூடும். ஆனால், இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தாகவே இப்படி எழுதியுள்ளனர்.
மாதிரிக்குச் சில: 'இருபது, முப்பது ஏக்கர் விஸ்தீரணம் உள்ள இடம்; அதைச் சுற்றி முள்வேலி. அங்கு தான், சீமானின் மாளிகை இருக்கும். மாளிகைக்கு அழகு தர, சிறு குளம். அதிலே, சிங்காரிகள்! அவர்கள் நீராடுவர்; அதுகண்டு, சீமான்கள் களி நடனமாடுவர். அவர்கள் சிரித்துப் பேசுவர்; சீமான் சொக்கிச் சாய்வார். அவர்களின் அதரம் துடிக்கும்; சீமானின் நெஞ்சமோ அருகே சென்று, அவளை அணைத்து முத்தமிடா விட்டால், தன் நெஞ்சே வெடிக்கும் என்று கூறுவார். சேல் விழியாள், சிற்றிடையாள், வாட் கண்ணாள், சுருண்ட குழலழகி, கிளி மொழியாள், கட்டுக்கடங்கா கனகப் பந்தைக் கொண்ட காரிகை இவ்வண்ணம் இருப்பர்!'
பிரெஞ்சுப் புரட்சி பற்றி எழுதும் போது, சீமான்களின் உல்லாச வாழ்க்கை பற்றி இவ்வாறு விவரிக்கிறார், அண்ணாதுரை. இங்கே, அண்ணாதுரையின் பார்வை, ஈ.வெ.ராமசாமியைப் போன்றது அல்ல; மாறாக, சீமானைப் போன்றது.
கருணாநிதியோ, 'சுழற்கண்ணி, சுந்தரபுரி மன்னனின் இளையராணி. அவளது மைத்துனன், தீட்சண்யன்; தூரத்து உறவு. அரண்மனையில் அவனுக்கு மெய்க்காப்பாளன் வேலை. அரசனது மெய் காக்கவும், ஓய்வு கிடைத்து, நேரம் வாய்க்கும் போது, சுழற்கண்ணியின் மெய் தழுவிக் கிடக்கவும் என, இரண்டு வேலைகளும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன அவனுக்கு! கனி ரசம் பருகக் கசக்குமா?
- என்று எழுதி, தனக்கு தானே கேள்வி கேட்டுக் கொள்கிறார்.
கடந்த, ஜனவரி 1, 1946ல் 'பேசும் படம்' இதழில்: ஆபாசமான விஷயங்களை வெளியிட்டதாக, 'இந்து நேசன்' பத்திரிகை ஆசிரியர் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், ஸ்ரீஅனந்தய்யருக்கு, 400 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார், மாகாண மாஜிஸ்திரேட்
ஐ.எஸ்.எம்.ஹசன்.
மேலும், மாஜிஸ்திரேட், 'சினிமா ஒரு சாபக்கேடு; கண்ணியம் மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களை, அது, நாட்டியப் பெண்களாக ஆக்கியதுடன், பையன்களை கோமாளிகளாகவும் மாற்றியுள்ளது. இத்தொழிலுக்கு அறிவு போதிக்கும் அல்லது ஒழுக்கத்தை உயர்விக்கும் சக்தி இருப்பதாகச் சொல்வதெல்லாம், அதன் கொடூரங்களை மறைப்பதற்கான போர்வையே! ஒழுக்க விருத்தியைப் பற்றியும், சமூக சீர்த்திருத்தங்களைப் பற்றியும், பட முதலாளிகளுக்கு அக்கறை இல்லை. அவர்களது முக்கிய நோக்கம், பணம் சம்பாதிப்பதே...' என்று சொன்னதாக, ஒரு செய்தி கூறுகிறது.
இந்த வார்த்தைகள், படத்தொழில் பிரமுகர்களைப் புண்படுத்தியுள்ளது. பிலிம் சேம்பரின் தலைவரான கே.சுப்ரமணியம், படத்தொழில் சார்பாக இவ்விஷயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகத் தெரிகிறது. மேற்படி தீர்ப்பின் நகல், தமக்கு வேண்டுமென்று கேட்டுள்ளார், சுப்ரமணியம்.
நடுத்தெரு நாராயணன்

