
உலகில் இடம் பிடி!
சிரிக்கத் தெரிந்தவனும்
சிந்திக்கத் தெரிந்தவனும்
மட்டுமல்ல மனிதன்
சாதிக்கப் பிறந்தவனும் மனிதனே!
சாதனை
சாதாரணமானதல்ல
அது சோதனை மிக்கது
காயங்களின்றி கனவு காணலாம்...
ஆனால்
கனவுகள் நனவாக
காயம்பட்டாக வேண்டும்!
சாதிக்கப் பிறந்தவருக்கென தனியாக
ஜாதியேதும் ஒதுக்கப்படவில்லை
எவரும் பிறக்கும் போதே
படைப்பதல்ல சாதனை
அதற்கென
உழைக்கும்போது படைப்பது!
சாதனைக்கும், வயதுக்கும்
சம்பந்தமில்லை
எட்டயபுரக் கவிஞனுக்கு
பாரதி பட்டம் கிட்டியது
பதினொரு வயதில்!
குற்றாலீஸ்வரன்
ஆங்கில கால்வாயை
நீந்திக் கடந்தது
பனிரெண்டு வயதில்!
அலெக்சாண்டர் அரியணை ஏறியது
இருபது வயதில்
எடிசனின்
அறிவியல் சாதனையின் ஆரம்பம்
இருபத்தொரு வயதில்!
இளைஞனே
சாதனை என்பது
அசாதாரணமானதென்றாலும் கூட
உன்னுள் ஓர்
லட்சிய வேட்கையும்
முயற்சியும், பயிற்சியும்
முழுமையாய் இருப்பின்
சாதனை சாதாரணமாகி விடும்!
விழித்திருந்து கனவு காண்
அந்தக் கனவு
நனவாகும் வரை விழித்திரு!
தடம் பார்த்து நடப்பவர்கள்
சாதாரணமானவர்கள்
தடம் பதித்து நடப்பவர்கள்
சரித்திரம் படைப்பதற்கென்றே பிறந்த
சாதனை மனிதர்கள்!
நீ தடம் பதிக்க அடம்பிடி
அடம்பிடித்து அடம்பிடித்து
உலகில் இடம் பிடி!
— மீனாசுந்தர், காஞ்சிபுரம்.

