தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 03, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 03, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'காமராஜரை சந்தித்தேன்' நூலில், துக்ளக் சோ எழுதியது: ஒருமுறை, காமராஜரோடு பேசும் போது, 'ஜெயப்பிரகாஷ், தொழிலதிபர்கள் வீடுகளில் தங்குகிறார்; அவர்கள் வீடுகளில் சாப்பிடுகிறார். பணக்காரர்கள் சிலர், இவருடைய ரயில் செலவு முதலியவற்றை கவனித்துக் கொள்கின்றனர்...' என்று அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை கூறினர்; சில பத்திரிகைககளும் அதை எழுதி வந்தன. அதைப் பற்றிப் பேச்சு வந்த போது, காமராஜருக்கு கோபமும், துக்கமும் கலந்து வந்தன.

'இவங்க எல்லாம் என்ன சொல்றாங்க...' என்று ஆரம்பித்தவர், 'ஜெயப்பிரகாஷ்கிட்ட பணம் ஏது... அவரு ஊருக்கு ஊர் பயணம் செய்யறதுக்கு யாரு செலவிலே போறது... மெட்ராஸ் வராரு, தங்கறாரு, இரண்டு நாள் தங்கறதுன்னா, யாரு வீட்லே இருக்கறது... அவரு சாப்பாட்டுச் செலவை, யாரு கவனிச்சுக்கிறது... இந்தச் செலவுகளை எல்லாம், ஏழைங்க தலை மேலே போட முடியுமா... ஏதோ சில பணக்காரங்களுக்கு, தேச பக்தி இருக்குது. அவங்க அபிமானத்திலே, சில பேருக்காக கொஞ்சம் செலவை ஏத்துக்கிட்டா, அதிலே என்ன தப்பு...' என்று கடிந்து பேசினார்.

அதற்குப் பின், நான் கேட்காமலேயே, திடீரென்று குண்டை தூக்கிப் போடுவதைப் போல, 'இப்ப உங்களை ஏதாவது சாப்பிடச் சொன்னேனா நான்...' என்று கேட்டார். அப்போது, அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக, அவர் இப்படி கேட்டவுடன், எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவர், ஒருநாள் கூட, என்னை, 'காபி சாப்பிடுகிறாயா?' என்று, கேட்டது கிடையாது. அப்படியிருக்க, 'இந்தக் கேள்விக்கு என்ன விதமாக பதில் சொல்வது...' என நினைத்து, மவுனமாக இருந்தேன்.

காமராஜர் விடுவதாக இல்லை: மீண்டும் கேட்டார்... 'இல்லே... எப்பவாவது உங்களை ஏதாவது சாப்பிடச் சொல்லியிருக்கேனா...' என்றார்.

இரண்டு முறை கேட்ட பின்பும், பதில் சொல்லாமலிருப்பது சரியில்லை என்பதால், 'இல்லை' என்று தலையசைத்தேன்.

'ஏன் தான் இந்தப் பேச்சு வந்ததோ...' என்று மனதுக்குள் நான் சங்கடப்பட, அவரே அதற்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்...

'ஜெயப்பிரகாஷைப் பத்திப் பேசினோமே... அந்த மாதிரி நிலையிலே தானே நானும் இருக்கேன்னேன்... இந்தச் செலவையெல்லாம் ஏழைங்க தலைமேலே போடறதா இல்ல ஏழைங்க கிட்டேயெல்லாம் நிதி வசூல் செய்து, அந்தப் பணத்திலே நான் சாப்பிடறதா...'

'இதெல்லாம் இப்ப ஏன் சார்...' என்றேன்.

'இல்லயில்ல... நான், எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சுக்கிட்டீங்களா...' என்றார் காமராஜர். அதைத் தொடர்ந்து, அவர் கூறிய சில வார்த்தைகள், அந்த மனிதரின் மிக உயர்ந்த பண்புகளில் ஒன்றை, எனக்கு எடுத்துக் காட்டியது.

அவர் நினைத்திருந்தால், தன் வீடு தேடி வருபவர்களுக்கெல்லாம் விருந்து உபசாரம் செய்திருக்க முடியும்... ஆனால், காமராஜருக்கு தனக்கு உதவி செய்பவர்கள், தன்னிடம் வைத்திருந்த அபிமானத்தையும், மரியாதையையும், பக்தியையும், துஷ்பிரயோகம் செய்து, அதன் மூலம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. தனக்கு உதவி செய்ய முன் வருவோருக்கு எவ்வளவு குறைந்த செலவு வைக்க முடியும் என்று கணக்கிட்டு செலவிடுவதே, தன் கடமையென அவரது மனச்சாட்சி கூறிக் கொண்டே இருந்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியைப் பற்றி தெரிந்து கொண்ட பின், அவரைப் புரிந்து கொள்ளாதவர்களும் கூட, அவரைப் புரிந்து கொள்வர் என்பது என் நம்பிக்கை!

திருக்குறள் வி.முனுசாமி ஒரு கட்டுரையில் எழுதியது: ஒரு கவிஞர், மன்னர் ஒருவரிடம் ஆதரவு பெற்று, அவரது அரண்மனையில் தங்கியிருந்தார். ஒருநாள், கவிஞரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'இன்று சமையல் எப்படி... சாப்பாடு நன்றாக இருந்ததா?' என்று கேட்டார் மன்னர். அதற்கு கவிஞர், 'சாப்பாட்டில் உப்பும் இல்லை; புளிப்பும் இல்லை...' என்று உண்மையைச் சொல்லி விட்டார்.

மன்னருக்கு, சமையல்காரன் மீது கடுங்கோபம் ஏற்பட்டது. அவனை அழைத்து வர உத்தரவிட்டார்; அஞ்சி, நடுங்கி நின்றான், சமையல்காரன். 'இனி, இப்படிப்பட்ட தவறு செய்தால், கடுமையான தண்டனை கிடைக்கும்...' என்று கண்டித்து, அனுப்பினார்.

மறுநாள், மன்னர், கவிஞரை சந்தித்தவுடன், முதல் கேள்வியாக, 'இன்று சாப்பாடு எப்படி?' என்று கேட்டார். உடனே, கவிஞரும், 'இன்று தேவாமிர்தமாக இருந்தது...' என்றார்.

'நேற்று சமையலில் உப்புமில்லை, புளியும் இல்லை என்றீர்கள்; இன்று, தேவாமிர்தமாக இருந்தது என்கிறீர்களே... அவ்வளவு விரைவில், சிறப்பாக சமையல் செய்ய, அவன் கற்றுக் கொண்டானா...' என்று சமையல்காரனைப் பற்றி வியந்து போய் கேட்டார் மன்னர்.

உடனே கவிஞர், 'தேவாமிர்தத்தில் உப்பும், புளியும் இருக்காதே...' என்றார், புன்சிரிப்புடன்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us