தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நூலில், 'துக்ளக்' சோ எழுதியது: ஒருமுறை, மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜோதிர்மாய் பாசுவை, 'துக்ளக்' இதழுக்காக பேட்டி எடுத்தேன். அப்போது, 'ஜனநாயகத்தில் மார்க்சிஸ்ட்களுக்கு நம்பிக்கை கிடையாது...' என்பதை, நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த, பொறுமை இழந்த ஜோதிர்மாய் பாசு, 'ஆமாம்... ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது; அதை அழிப்பதற்காக தான், ஜனநாயக வழிமுறையில் பங்கு கொள்கிறோம்...' என்று கூறிவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு பின், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை பேட்டி கண்ட போது, ஜோதிர்மாய் பாசு கூறியதை பற்றி அவரிடம் கேட்டேன்; அவர் பதில் சொல்லாமல் நழுவினார். நான் விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப, 'ஜனநாயகத்தை அழிப்பதற்காகத் தான் அதில் பங்கு பெறுவதாக ஜோதிர்மாய் பாசு சொன்னாரே...' என்று கேட்டு, அந்தப் பேட்டி வெளியான, 'துக்ளக்' இதழை, அவருக்கு காட்டினேன்.

ஒரு நிலையில், ஜோதிபாசுவுக்கு கோபம் பீறிட, தன் கையில் வைத்திருந்த, 'கம்யூனிஸ்ட்களின் வேலை திட்டம்' பற்றிய அறிக்கையை காட்டி, 'இதுதான் எங்களுடைய தஸ்தாவேஜு; இதைப்பற்றி கேள்வி கேளுங்கள்...' என்று உரக்கக் கூறி, அதை என் மீது தூக்கி அடித்தார்.

பதிலுக்கு, ஜோதிர்மாய் பாசு பேட்டி வெளியாகியிருந்த, 'துக்ளக்' இதழை வீசி எறிந்து, 'இதுதான் என் தஸ்தாவேஜு; இதற்கு பதில் சொல்லுங்கள்...' என்று அவரை போலவே, 'இமிடேட்' செய்து, கத்தி விட்டேன்.

அந்த அறையில் வேறு சிலரும் இருந்தனர். சில வினாடிகள் அறையில் பயங்கர அமைதி நிலவியது. அவர், 'இப்படியும் ஒரு பத்திரிகையாளன் நடந்து கொள்வானா...' என்ற பாவனையில், என்னைப் பார்த்தார். நானோ, 'அவர் செய்தார்; பதிலுக்கு நாமும் செய்தோம்...' என்ற எண்ணத்தில், பேசாமல் நின்றேன்.

சுதாரித்த ஜோதிபாசு, 'இந்த சின்ன வயசில இப்படி நிதானமிழக்கக் கூடாது...' என்று, புன்சிரிப்புடன் கூறினார்.

நானும் சமாளித்து, 'சரி... நான் செய்ததை மன்னித்து விடுங்கள்; நிதானமிழப்பது, பெரியவர்களுக்கே உரிய செயலாக இருக்கட்டும்...' என்று கூற, அவர் சிரிக்க, பேட்டி மேலும் தொடர்ந்து முடிந்தது. அதன்பின், ஜோதிபாசுவை சந்திக்கும் வாய்ப்பு, எனக்கு கிட்டவே இல்லை.

'தமிழ் இதழியல்' எனும் நூலில் காணப்படும் செய்தி: கடந்த, 1920ல் வெளிவந்த, தமிழ் மாத பத்திரிகை, 'விமோசனம்!' அதன் ஆசிரியர் ராஜாஜி; துணையாசிரியர், கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. சேலம் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து வெளி வந்தது. ஆண்டு சந்தா, ஒரு ரூபாய்; தனிப்பிரதி, ஓர் அணா - அதாவது, ஆறு காசு. மதுவிலக்கு பிரசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த இப்பத்திரிகையில், விளம் பரங்கள் ஏற்கப்படவில்லை. மதுவிலக்கு கட்டுரைகளோடு, கதைகளும் வெளி வந்தன.

'விமோசனம்' பத்திரிகை ஒன்பதாவது இதழ் வெளிவந்த போது, பர்மாவில் இருந்த சாமிநாதன் என்பவர், நான்கு ரூபாய் அனுப்பி, நான்கு ஆண்டுகளுக்கான சந்தாவாக வைத்துக் கொள்ளும்படி எழுதினார். எத்தனை ஆண்டுகள் பத்திரிகை வரும் என்ற நிச்சயம் இல்லாததால், அந்த சந்தாவை ஏற்க மறுத்து, திருப்பி அனுப்பி விட்டார், ராஜாஜி. 'விமோசனம்' பத்திரிகை, 12 இதழ்களே வெளிவந்தன.

காலில் அணியும் ஷூக்கள், 1850ம் ஆண்டு வரை, கைகளாலேயே செய்யப் பட்டு வந்தன. அப்போது வலது மற்றும் இடது காலுக்கு என்று தனித்தனியாக ஷூக்கள் கிடையாது; எந்த காலுக்கும் போட்டுக் கொள்ளலாம்.

கடந்த, 1850க்கு பின், இயந்திரத்தில் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னரே, வலது மற்றும் இடது கால்களுக்கு தனித்தனி ஷூக்கள் தயாரிக்கும் முறை, ஏற்பட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us