PUBLISHED ON : ஜூலை 31, 2016

அன்புள்ள சகோதரிக்கு —
என் ஒரே மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். எங்கள் வீட்டில், நான், என் கணவர், மகள், மாமியார் என, நாங்கள் நான்கு பேர். என் பிரச்னையே என் மகள் மிகவும் பிடிவாதக்காரியாக இருப்பது தான். என் கணவரிடம் உள்ள அதே கோபம் மற்றும் பொறுமையின்மை மகளிடமும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டமாக, உரக்க பேசுகிறாள். நாங்கள் இருப்பது வாடகை வீடு; பக்கத்து வீட்டினர், 'ஏன், உங்கள் மகள் இப்படி கத்தி, ஆர்ப்பாட்டம் செய்கிறாள்...' என கேட்கும் போது, கூனி குறுகி போகிறேன். ஓரளவிற்கு படிக்க கூடியவள் தான்; வெளி நபர்களிடம், மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள், எங்களிடம் எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிறாள்.
வீட்டில் ஒரு வேலையும் செய்வது கிடையாது. எந்நேரமும், 'டிவி' பார்க்கிறாள். 'உடம்புக்கு முடியல; இந்த வேலையை செய்யக் கூடாதா...' என்றால், 'உனக்கு எப்பத் தான் முடியுது; என்னால வேலை செய்ய முடியாது...' என்கிறாள்.
அவளின் சோம்பேறித்தனத்தை கண்டு, தினமும் அவளிடம் சண்டை போடுகிறார், என் கணவர். இதைப் பார்த்து, என் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.
அவளின் இந்த பிடிவாத குணத்தால், அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றேன். மருத்துவரிடம், எங்களைப் பற்றி குறை கூறி அழுதாள். மறுமுறை, அழைத்த போது, 'வரமாட்டேன்; நான் பைத்தியம் இல்ல...' என தெளிவாக கூறிவிட்டாள். நான், அவளிடம் எவ்வளவோ பேசி பார்த்து விட்டேன்; சுபாவத்தை, மாற்றிக் கொள்ள மறுக்கிறாள். எதற்கெடுத்தாலும் கத்திப் பேசுவதால், அடங்கிப் போகிறேன்.
உடல்நிலை சரியில்லாத சமயத்திலும், ஒரு தாயாக என்னால், என் மகளை வேலை வாங்க முடியவில்லை. அடிமை போல், நானே அனைத்து வேலைகளையும் செய்கிறேன். ஊரார், என் மகளை அடங்காபிடாரி என்று கூறிவிடுவரோ என, பயமாக இருக்கிறது.
என் மகளை, எப்படி வழிக்கு கொண்டு வருவது, அவளின் இந்தக் குணத்தால், அவளது திருமண வாழ்க்கை, எப்படி இருக்குமோ என நினைத்து தூங்காமல் தவிக்கிறேன். என் கணவரின் கோபத்தை, திருத்த முடியாமல் அடங்கி விட்டேன்; ஆனால், என் மகளை திருத்தியே ஆக வேண்டும். ஏனெனில், அவள் இன்னொரு இடத்தில் வாழப் போகிறவள்.
தயவு செய்து, நல்ல பதிலை தாருங்கள். உங்கள் பதில், என் மகளைப் போன்ற பெண்களைப் பெற்றோருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.
— இப்படிக்கு
தங்கள் சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு —
ஆடவர் - பெண்டிரிடம், ஆயிரம் சுபாவங்கள் மண்டிக் கிடக்கின்றன. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சுபாவம். சிலர், இடியே விழுந்தாலும், பொறுமையாக பிரச்னையை தீர்ப்பர். இன்னும் சிலர், பிறரை குறை கூறாது, புன்முறுவலுடன், அனைவரிடமும் சாத்வீகமாய் பழகுவர். மற்றும் சிலர், சின்ன விஷயத்தை பெரிதாக்கி, தன்னுடைய ரத்த அழுத்தத்தையும், எதிராளியின் ரத்த அழுத்தத்தையும் ஏற்றி, மரவட்டை முகத்துடன் உழல்வர். அவரவர் சுபாவங்களே, அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன.
'ஒரு மனிதரின் குணாதிசயம், பெற்றோரின் மரபணுவிலிருந்து தொடராது...' என்று விஞ்ஞானம் கூறினாலும், உங்கள் மகளின் முன் கோபம், பொறுமையின்மை மற்றும் சோம்பேறித்தனம் அவளது தந்தையிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். சிறுவயதிலிருந்து, தந்தையின் நடவடிக்கைகளை பார்த்து, தானும் அதுபோல நடக்கிறாள் என, எண்ணுகிறேன்.
'பெற்றோரோ, பிள்ளைகளோ யாரும் யாருக்கும் அடிமை அல்ல. அவரவர் ஸ்தானத்திற்குரிய கண்ணியத்தை, அவரவர் பாதுகாக்க வேண்டும்...' என, உங்கள் மகளிடம் கூறி, 'உன் வேலையை நீ தான் செய்ய வேண்டும்...' என்று கண்டிப்பாக கூறிவிடுங்கள். அவள் கத்தினால், அதை அலட்சியம் செய்யுங்கள். ஒரு தீமையை (கணவன்) சகித்து கொண்டதற்காக, குட்டி தீமையை (மகள்) சகித்து கொள்ள வேண்டிய கட்டாயமில்லை.
அவள் கோபப்பட்டு, ஆங்காரமாக கத்துவதை, அவள் அறியாமல், மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்து, அவள் அமைதியாக இருக்கும்போது, காட்டுங்கள். கோபத்தில் அவள் முகம் அஷ்ட கோணலாவதையும், இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம் வரும் அபாயத்தையும், பொறுமையாக விளக்குங்கள்.
உங்களிடம் கோபப்படும் மகள், வெளியில் பதவிசாக நடந்து கொள்வது நாடகமே! இந்நாடகத்தை, பல பெண்கள் நடத்துகின்றனர். இந்நாடகம், நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை.
வீட்டு உறுப்பினர்களோ அல்லது நீங்களோ உங்களையறியாது அவளை எரிச்சல் மூட்டுவது போல தொடர்ந்து நடந்திருக்கலாம்; பேசியிருக்கலாம். அப்படி இருந்தால், அதை மாற்றிக் கொள்ளுங்கள். காதல் தோல்வி இருந்தாலும், பெண்கள், 'டப் டுப்' என்று வெடிப்பர். அப்படி இருந்தால், ஆறுதல் கூறி சமாதானப்படுத்துங்கள்.
பிறந்த வீட்டில் ஒரு வேலையும் செய்யாது, எதற்கெடுத்தாலும் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்கள், திருமணமானவுடன் தலைகீழாய் மாறி விடுகின்றனர்.
ஹார்மோன் பிரளயத்தில், உணர்வுகள் உச்சமடையும்; அப்போது, தாறுமாறான மன நிலையில் உழல்வர், பெண்கள். மாதவிலக்கு ஒழுங்காக வராவிட்டாலும், கோபத்தின் உச்சாணி கொம்பில் ஏறுவர்; இத்தகைய உடலியல் பிரச்னைகள் இருந்தால், தகுந்த பெண் மருத்துவரை அணுகுவது நல்லது.
பிள்ளைகளுக்கு, 10 வயது வரை தான் நல்லொழுக்கத்தை போதித்து வளர்க்க முடியும். அதன்பின், அவர்களின் பள்ளி சூழ்நிலை, நண்பர்கள், பொருளாதார தேவை மற்றும் வாழ்க்கையை அணுகும் தன்மையை பொறுத்தே, அவர்களின் குணாதிசயம் அமைகிறது. சரியாக வளர்க்கவில்லை என, யாரும் சான்றிதழ் தந்து விடுவர் என, பயப்பட வேண்டாம். நல்லதையே எண்ணி, சொல்லி, செய்து பிள்ளைகளை வளர்ப்போம். அதன்பின், அவர்கள் எப்படி இருக்கின்றனரோ, அது, அவர்களின் பிராப்தம் என நினைத்து, அமைதிபடுங்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்
