தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/செல்வம் பெருகட்டும்

செல்வம் பெருகட்டும்

செல்வம் பெருகட்டும்


PUBLISHED ON : ஜூலை 31, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆக., - 2 ஆடிப்பெருக்கு

'பெருக்கு' என்றால், பெருகுதல் என்பது மட்டுமல்ல, சுத்தம் செய்தல் என்றும் பொருள். ஆடி மாதத்தில், காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி, சில நேரங்களில் கரையை தாண்டும். அப்போது, ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு, ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.

இது, எதைக் குறிக்கிறது தெரியுமா?

மனித மனங்களில் ஆசை, பொறாமை, தீய எண்ணம் மற்றும் ஆணவம் உள்ளிட்ட கெட்ட குணங்கள் நிரம்பியுள்ளன. அதை, பக்தி எனும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதையே, பெருக்கு என்னும் சொல் நமக்கு உணர்த்துகிறது. மனதில் உள்ள மாசுகளை நீக்கி, உள்ளத்தில் பக்தியை நிரப்பினால், அன்பு பெருகி, உலகமே ஆனந்த மயமாகும்.

காவிரிக் கரையோரங்களில் உள்ள ஊர்களில், ஆடிப்பெருக்கு திருவிழா, மிக விமரிசையாக கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருமேனியை சுற்றி வரும் புண்ணியம் பெற்ற காவிரி, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறது. தெய்வீக பலமிக்க இக்காவிரியாற்றில் புனித நீராடி, பாவங்களை தொலைப்பர், மக்கள். அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டு, காக வடிவில் வந்த விநாயகரின் திருவடி ஸ்பரிசம் பெற்றது, காவிரி. இத்தகைய புண்ணிய நதியில் மஞ்சள் தேய்த்து, மாங்கல்யம் மாற்றி, நீராடுவது, மங்கலமான வாழ்வைத் தரும்.

இதனால் தான், புதுமணத் தம்பதியர் காவிரிக்கு வந்து, அவளது ஆசியை பெறுகின்றனர். தம்பதியர் நீண்ட காலம் ஒற்றுமையாக வாழ, இந்த விழா வழி வகுக்கிறது. அத்துடன், விவசாயிகள் தங்கள் விளைச்சல் பெருக, காவிரி தாயிடம் வேண்டுகின்றனர்.

சமயபுரம் பகுதியில், ஆடிப்பெருக்கன்று, சகோதரர்கள் தங்கள் சகோதரிகள் மற்றும் மைத்துனர்களை வீட்டிற்கு வரவழைத்து, சீர் கொடுத்து, இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்வர். சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாகக் கருதப்படுகிறாள், ஆதிமாரியம்மன். சாதாரண மக்களே, இவ்வாறு சீர் கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா!

தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க, அம்மாமண்டப படித்துறையில் எழுந்தருள்வார், ரங்கநாதர். மண்டபத்தில், சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். சீதனப் பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை ஆற்றில் மிதக்க விடுவர்.

ஆடிப்பெருக்கன்று லட்சுமி தாயாருக்கு பால், தேன், தாமரை, தானியம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் படைத்து, பூஜை செய்ய வேண்டும். அன்று மாலை திருவிளக்கேற்றும் முன், வாசலில் பசுஞ்சாண நீர் தெளித்து, மாக்கோலம் இட வேண்டும். இவ்வாறு செய்தால், வீட்டில் திருமகள் நித்ய வாசம் செய்வாள்.

அனைவரும் செல்வ வளம் பெற்று வாழ, ஆடிப்பெருக்கு நன்னாளில் காவிரித் தாயையும், ரங்கநாதப் பெருமானையும் வணங்குவோம்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us