தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலேடை பேச்சாளரும், கலைமகள் இதழின் முன்னாள் ஆசிரியருமான காலஞ்சென்ற கி.வா.ஜகந்நாதன் ஒரு கட்டுரையில் எழுதியது: கடந்த சில ஆண்டுகளாக, பட்டிமண்டபம் என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்து வருகிறது. கவியரங்கம் மற்றும் கருத்தரங்கத்திற்கு கூடுகிற கூட்டத்தை விட, இதற்கு ஏராளமான கூட்டம் வருகிறது. பேச்சாளர்கள், கட்சி கட்டி வாதம் செய்யும் போது, பார்வையாளர்களுக்கு கோழி மற்றும் ஆட்டுக்கிடாய் சண்டைகளை பார்ப்பது போன்ற உற்சாகம் உண்டாகிறது.

முதன்முதலாக, காரைக்குடி கம்பன் விழாவில் தான், பட்டிமண்டபம் துவங்கியது. முதலில், ஒரே தலைப்பில் கருத்துகளை வெவ்வேறு பேச்சாளர்கள் பேசினர்; பின், விவாத அரங்காக மாறி, அதன் பின்னரே சூடுபிடித்தது. முதலில், இரண்டு கட்சிகள் வாதம் செய்தன; பின் மூன்று கட்சிகள் வந்தன. அதற்கு பின், நான்கு கட்சிகள் வந்தன. அப்பீல் கோர்ட் கூட, காரைக்குடி பட்டிமண்டபத்தில் வந்திருக்கிறது.

இந்நிகழ்ச்சி, இப்போது எல்லா இடத்திலும் பரவி விட்டது. எந்த இலக்கிய விழாவானாலும், பட்டிமண்டபம் இல்லாமல் சுவாரசியப்படுவதில்லை.

சங்க காலத்திலேயே பட்டிமண்டபம் இருந்தது; புலவர்கள் கூடி, ஆராய்ச்சி செய்யும் மன்றம் அது! பன்னமும் கலைதெரி பட்டி மண்டபம் என்று பாடுகிறான், கம்பன். இப்போதோ, அது விவாத அரங்காக, இலக்கியப் போர்க்களமாக, ஏசல் வீதியாக திகழ்கின்றன.

பட்டிமண்டபம் என்பதில் மண்டபம் என்பது, வடமொழிச் சொல்; அது, தனித் தமிழருக்கு பிடிக்கவில்லை. அதனால், அதை மன்றமாக்கி, பட்டிமன்றம் என்று போடுகின்றனர். இரண்டு சொற்கள் இணைந்து வந்த தொடர் அது. அதில் ஒரு சொல்லை மட்டும் மாற்றி, அதாவது, பட்டியை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டது வேடிக்கையாக இருக்கிறது. ஸ்ரீமான் என்பதை திருவாளர் என்று தமிழாக மாற்றியவர்கள், ஸ்ரீமதி என்பதில் உள்ள ஸ்ரீயை மட்டும் மாற்றி, மதியை அப்படியே வைத்து, திருமதி என்று வழங்குவது போன்ற வேடிக்கை தான் இது!

திருவாட்டி என்றால், தூய தமிழாக இருக்குமே! இப்போது, திருமதி என்று சொல்லியும், எழுதியும் பழக்கத்துக்கு வந்து விட்டது. நானும் அப்படித்தான் எழுத வேண்டியுள்ளது!

'நாம் தமிழர்' என்று கொள்கை குரல் கொடுக்கும் கட்சியினர், 'தமிழ் வாழ்க...' என்று கோஷம் போட்டு, தெருவில் போயினர். அதைக் கண்ட குப்பண்ணா, 'தமிழ் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துட்டு தான் இருக்கு; நேத்திக்கு பொறந்த இவங்க, 'தமிழ் வாழ்க'ன்னு தொண்டை கிழிய கத்தறாங்க...' என்றார்.

'தமிழகத்திற்குள்ளேயே ஒரு வட்டாரத்துக்காரர்களின் பேச்சு, இன்னொரு வட்டாரத்துக்காரர்களுக்குப் புரியாது...' என்றார் பக்கத்திலிருந்த ஒருவர். சென்னைக்காரரான இவர், சிறிது காலம் உத்தியோகம் சம்பந்தமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றி திரும்பியவர். குமரி மாவட்ட பேச்சு தமிழ் சொற்கள் சிலவற்றை கூறினார்; இதோ அது:

அகத்தே வா - உள்ளே வா

இஞ்சி - முன்கோபி

ஏவுள்ளா - கணவன், மனைவியை அழைக்கும் முறை

காணிக்கிறேன் - காண்பிக்கிறேன்

குருத்துவம் - நன்றி

கொமைக்காதே - கிண்டல் செய்யாதே

சுக்கு செட்டி - சிக்கனமானவன்

தெம்மாடி - ஏமாந்த பயல்

வெறைக்குது - குளிருது

வெப்ராளம் - மனத்தவிப்பு

திண்ணைக்கு வந்த நண்பர் ஒருவர் சொன்னது: சரீரத்தில் உள்ள ஆறு சக்கரங்களும், யோகியின் நிஷ்டையால் ஒன்றாக ஐக்கியமாகின்றன. அந்த ஆறில், 'ஆக்ஞா சக்கரம்' என்பது, நெற்றியில், இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் உள்ளது.

இச்சக்கரத்தில், யோகியின் ஆத்ம சக்தி, பிராண தத்துவம் இரண்டும் கலந்து, சிரத்திலுள்ள, 'பிரமரந்திரம்' எனப்படும் உச்சித் துவாரத்தை எட்டுகின்றன. இதன்பின்னரே, அவருக்கு பூரண ஞானம் கிட்டுகிறது. இச்சாதனையில், ஆக்ஞா சக்கரம் சீக்கிரம் நிஷ்டையில் கலக்க வேண்டும் என்பதற்காக, யோகிகள் தங்கள் நெற்றியில், சந்தனப் பொட்டு வைக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

இதன் பின், மஞ்சள் பொடி மற்றும் கஸ்தூரியை கலந்தனர். இந்த சிவப்பு நிறக் கலவையே குங்குமமாயிற்று!

பழங்காலத்தில் ஆண்கள் தங்கள் வீரத்தைக் காட்டும் வகையில், திருமணத்தின் போது, ரத்தத்தை திலகமாக மனைவியின் நெற்றியில் இடுவர். நாளடைவில் இது, வெறும் திலகமாக அதாவது, குங்குமத் திலகமாக மாறியது. குங்குமம், மங்கலகரமான, சவுபாக்கிய சின்னமாக இருப்பதால், சாஸ்திரக்காரர்கள், விவாக விதியில், இதற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us