PUBLISHED ON : செப் 11, 2016

'சகலமும் அறிந்த மகா பெரியவர்' நூலிலிருந்து: இன்றைக்கும் பல குடும்பங்களின் கண்கண்ட தெய்வம், காஞ்சி மகா பெரியவர். வாழ்ந்த போதும், வாழ்க்கைக்கு பிறகும், பல பேரின் வழிகாட்டி!
பிராமணர்கள் கடல் கடந்து செல்வது, ஆச்சாரமாகாது என்று நம்பிய காலம் அது! அவ்வாறு சென்று வந்தவர்களுக்கு, தன் கையால் தீர்த்தம் வழங்குவதில்லை என்ற நிலைபாட்டை வைத்திருந்தார், மகா பெரியவர்.
ஒருநாள், பெரியவர் தீர்த்தம் வழங்கும் போது, வரிசையில் நின்றிருந்தார், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கணவர் சதாசிவம். அவரும், அவர் மனைவியும் கச்சேரிக்காக வெளிநாடு சென்று, அப்போது தான் திரும்பியிருந்தனர். அவருக்கு பெரியவரின் சாஸ்திர முறைகள் தெரியாததால், அவர் கையால் தீர்த்தம் வாங்கும் ஆனந்தத்தில், சந்தோஷமாக நின்றிருந்தார். அவருக்கு பின்னால், பெரியவர் சொல்லச் சொல்ல, 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகத்தை எழுதிய, எழுத்தாளர் ரா.கணபதி நின்றிருந்தார். பெரியவரின் ஆச்சார, அனுஷ்டானங்களை நன்கு அறிந்திருந்த கணபதி, சதாசிவத்தை பார்த்ததும், அதிர்ச்சி அடைந்தார்.
கணபதிக்கோ, சதாசிவத்திடம் விஷயத்தை சொல்ல முடியவில்லை; அதேசமயம், பெரியவருக்கு அவர் வெளிநாடு சென்று வந்தது தெரியுமோ, தெரியாதோ என்ற சந்தேகம் வேறு!
சதாசிவமும் ஏமாற்றப்படக் கூடாது; அதேசமயம், பெரியவரின் அனுஷ்டானத்திற்கு பங்கமும் வந்து விடக்கூடாது என்று தவித்தார். இந்நிலையில், பெரியவரை நெருங்கினார், சதாசிவம். பெரியவர் என்ன செய்யப் போகிறாரோ என்று குழப்பத்துடன் பார்த்தவாறு இருந்தார், கணபதி.
பெரியவர் தான் அனைத்தும் அறிந்தவராயிற்றே... எந்தவித பதற்றமும் இல்லாமல், தீர்த்த பாத்திரத்தை கீழே வைத்து, பக்கத்தில் கிடந்த தேங்காயை எடுத்து, தரையில் அடித்து உடைத்து, அதன் நீரை, சதாசிவத்தின் கையில் ஊற்றியவாறு, 'இன்று சதாசிவத்திற்கு சிறப்பு தீர்த்தம்...' என்று கூறியவாறு, கணபதியை பார்த்து, அர்த்தமுடன் புன்முறுவல் பூக்க, அப்படியே நெகிழ்ந்து போனார், கணபதி.
என்ன இங்கிதம்... சதாசிவமும் மகிழ்ந்தார்; அனுஷ்டானமும் காப்பாற்றப்பட்டது; கணபதியும் கலவரம் நீங்கப் பெற்று அமைதி ஆனார்.
உலகுக்கும், ஒரு உயர்ந்த பாடம் கிடைத்தது!
'நோபல் பரிசு உருவாகிய வரலாறு' நூலிலிருந்து: சமாதானத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் சமாதானப் பணி செய்த, மகாத்மா காந்திக்கு, ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை?
ஜன., 30, 1948ல் சுடப்பட்டு இறந்தார், காந்திஜி. அந்த ஆண்டு, நோபல் பரிசுக்கு தகுதி உடையவர்களின் பெயர்களை, சிபாரிசு செய்ய கடைசி தேதி ஜன., 31; இறுதி முடிவு எடுப்பது, நார்வே நாட்டு பார்லிமென்ட் குழு.
அவர்களுக்கு, ஜன., 31ம் தேதிக்குள் காந்திஜியின் பெயர் குறிப்பிட்ட கடிதம் போய் சேரவில்லை. இதன் காரணமாக, 1948 - 49ம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு யாருக்குமே வழங்கப்படவில்லை.
ஆனால், 1949ல் அளித்திருக்கலாமே ஏன் தரவில்லை... ஐ.நா., சபை செயலர், 'ஹாமர் ஷீல்டு'க்கு, அவர் இறந்த பின், கடந்த, 1961ல் வழங்கப்பட்டுள்ளது. சுவீடிஷ் கவிஞர் எரிக் என்பவருக்கு, அவர் இறந்து, 19 ஆண்டுகள் கழித்து, நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், காந்திஜிக்கு அவ்வாறு வழங்கப்படாததற்கு, நோபல் பரிசுக் குழு சொல்லும் காரணம்... ஒருவர் இறந்த பின், அவருக்கு நோபல் பரிசு தருவதாக இருந்தாலும், அவருக்கு பரிசு தர வேண்டும் என்ற கோரிக்கை அவருடைய வாழ்நாள் காலத்திலேயே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், காந்திஜி விஷயத்தில் அப்படி செய்யப்படவில்லை!
நடுத்தெரு நாராயணன்
