தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பாடம் படித்த பிள்ளைகள்!

பாடம் படித்த பிள்ளைகள்!

பாடம் படித்த பிள்ளைகள்!


PUBLISHED ON : செப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமணத்திற்கு முன்பே, அப்பாவும், அம்மாவும் நெருங்கிய உறவினர். அப்பாவின் பெரியம்மா மகள் வழி பேத்தி தான் அம்மா. இதனால், இருவரும் ஒருவரையொருவர் அறிவர் என்பதுடன், விரும்பியே மணம் புரிந்தனர்.

எம்.ஏ., படித்துள்ள அப்பா, தமிழ் பத்திரிகை ஒன்றில் மூத்த செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறார். அம்மா, பிளஸ் 2 படித்துள்ளாள்; இல்லத்தரசி. இருந்தாலும், பொது அறிவு, விஷய ஞானம் அதிகம்.

ஆனாலும், எப்போது பார்த்தாலும் அம்மாவை, ஏதாவது குற்றம், குறை சொல்வார் அப்பா; பல நேரங்களில் மவுனமாக இருந்தாலும், சில நேரங்களில் பதில் கொடுத்து விடுவாள், அம்மா. அப்போது, பதில் சொல்ல முடியாமல் பதுங்குவார், அப்பா. இது, அன்றாடம் எங்கள் வீட்டில் காணும் காட்சிகள்.

இருவரும் சண்டைக் கோழிகள் அல்ல; அன்னியோன்னியம் மிகுந்த தம்பதி என்பதை நாங்களே பார்த்துள்ளோம். ஆனால், எங்கள் முன் ஏன் அடிக்கடி சண்டைபோடுகின்றனர் என்பது தான் எனக்கும், என் தங்கைக்கும் புரியாத புதிராக இருந்தது.

வீட்டிற்கு சொந்த பந்தங்கள் வந்தால் தலை, கால் புரியாது; அவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பர். ஏனெனில், இருவருக்கும் பொதுவான சொந்தங்கள் என்பதால், எவ்வித வேறுபாடும் காண முடியாது. வீட்டுக்கு வந்தவர்களை, வெறுங்கையுடன் அனுப்ப இருவருக்குமே பிடிக்காது. தங்களால் முடிந்ததை வாங்கி கொடுத்து அனுப்புவர்.

எனினும், சின்னச் சின்ன விஷயங்களை கூட சுட்டிக் காட்டி அப்பா குறை கூறுவதும், 'இதெல்லாம் பெரிய விஷயமா...' என, அம்மா கோபப்படுவதும், அடிக்கடி நிகழும்.

சில சமயம், இவர்களின் சண்டையை தீர்த்து வைக்கும் நடுவர்களாக, தாத்தா, பாட்டிமார் மாறிவிடுவர்.

ஆனால், அம்மாவைப் பற்றி அப்பா, தன் அக்காள் கணவரான மாமனாரிடம் ஏதாவது குறை கூறினால், 'ஏம்மா... இப்படி பண்றே... மாப்பிள்ளை சொல்றது நியாயம் தானே... அப்படி செய்யாதே. மாப்பிள்ளை என்ன சொல்றாரோ, அதை செய்...' என, அம்மாவைத் தான் கடிந்து கொள்வர், தாத்தா.

அது போல, அப்பாவைப் பற்றி, அம்மா தன் மாமியாரிடம் ஏதாவது புகார் கூறினால், 'என்னடா... நீ இவ்வளவு பெரியவனாக ஆன பிறகும், சின்னச் சின்ன விஷயத்துக்கு கூட சண்டை போட்டுட்டு இருக்கே... தொலைவுல இருக்கிற பிள்ளைய, இப்படியா தொந்தரவு செய்வே... தப்புப்பா...' என்பாள், பாட்டி.

அப்போது, அப்பாவிடம் இருந்து, 'இல்லேம்மா'ன்னு மட்டும் தான் பதில் வரும்.

என் பெற்றோர் அடிக்கடி செல்லமாக கோபித்துக் கொள்வதை, சிறுவயதில், சண்டை என்றே நினைத்துள்ளோம், நானும், தங்கையும். அச்சமயத்தில், இருவரையும் மாறி மாறி பார்த்தபடி இருப்போம். பல சமயம் சிரிப்பும், சில நேரங்களில், கோபமும் வரும்.

ஆனால், இப்போது, நான், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்; தங்கை, பிளஸ் 2 படிக்கிறாள். எங்கள் இருவருக்கும் எங்கள் பெற்றோர் என்றால் உயிர்; இந்நிலையில் இருவரும் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட சண்டையிடுவது, மனதில் வருத்தத்தை தந்தது. இதனால், இருவரையும் கண்டிக்க வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஓடும். ஆனால், அவர்களை கண்டிக்கும் அளவுக்கு தைரியம் வரவில்லை.

இப்படித் தான் நேற்று காலை, அப்பா குளிக்க தயாரானார். நான் குளித்து முடித்து, டைனிங் டேபிளில் அமர்ந்து, சாப்பிட தயாராக இருந்தேன். கிச்சனில் எனக்கு பூரி சுட்டுக் கொண்டிருந்தாள், அம்மா. தோளில் துண்டு, இடுப்பில் லுங்கியுடன், பாத்ரூமுக்குள் அடி எடுத்து வைத்த அப்பா, 'ஏய், ஜெயா... பேஸ்ட் எங்கே வைச்சுருக்கே...' என்றார்.

'பாத்ரூமில் தான் இருக்கும்; பாருங்க...' என்றாள் அம்மா. 'இங்கே ஒண்ணையும் காணலயே... எங்க தான் வச்சுருக்கே...' என்றார்.

பூரிக்கு மாவை உருட்டியபடியே, 'பேஸ்ட் எங்க இருக்குன்னு தேடி எடுக்கத் தெரியல; இதைக் கூட நான் தான் எடுத்துத் தரணுமா... பாத்ரூமில் இல்லன்னா டேபிள்ல கிடக்கும் பாருங்க...' என்றாள்.

டேபிள் டிராயரில் கிடந்த டியூப் ஒன்றை எடுத்து, மூடியை திறந்து, டூத் பிரஷ்ஷில் வைத்தபடி, 'இதை பாத்ரூமில வைச்சா என்ன...' என, அம்மாவைப் பார்த்து கோபமாக கேட்டார். திரும்பிப் பார்த்த அம்மா, 'அய்யோ மாமா... அதை வாயில வைச்சுறாதீங்க... அது, டூத் பேஸ்ட் இல்ல; 'மூவ்' ஆயின்ட்மென்ட்...' என அலற, அப்போது தான் தன் கையில் இருந்த டியூபை, வெளிச்சத்திற்கு நேராக நீட்டிப் பார்த்து, நெளிந்தார், அப்பா. அம்மாவுக்கு, மகிழ்ச்சி தாங்கவில்லை.

'எதுக்கு எடுத்தாலும் அவசரம்; நிதானமே இல்லேன்னு ஆயிடுச்சு. நல்ல வேளை, வாய் தப்பிச்சது...' என்றாள்.

இப்படியான இருவரின் செல்ல சிணுங்கல்கள் நிறைய நடந்தாலும், ஒருவரை ஒருவர் மனது புண்படும்படியாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டாலும், அவர்களுக்குள் நடக்கும் சின்ன சண்டைகள் மனதுக்கு கஷ்டமாக இருந்ததால், அப்பாவிடமே கேட்டு விடுவது என, முடிவு செய்தேன்.

ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதுடன், 'ஏம்மா இப்படி'ன்னு அம்மாவிடமோ, 'ஏம்பா இப்படி செய்றீங்க'ன்னு அப்பாவிடமோ கேட்க பயமாகவும் இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை காலை -

ஹாலின் நடுவே தரையில் அமர்ந்திருந்த அப்பாவைச் சுற்றி, அன்றைய நாளிதழ்கள் இறைந்து கிடந்தன. அப்பாவின் அருகில், செய்தித்தாளுடன் சேர்த்து வந்திருந்த வார இதழ் ஒன்றை வாசித்தவாறு இருந்தாள், அம்மா. ஒவ்வொரு செய்தியையும் படித்து, அதை, அம்மாவிடம் சொல்லி, உலக நிலவரத்தை எடுத்துச் சொன்னார், அப்பா. அம்மாவும், 'அப்படியா...' என்றும், 'அய்யோ பாவம்' என்றும், 'நல்ல ஜாலியா இருக்கே' என்றும், அவர் சொல்லும் செய்திகளுக்கு, 'ரியாக் ஷன்' செய்தபடி இருந்தாள்.

பல் துலக்கிக் கொண்டிருந்த எனக்கு, இதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் இருவரும் பேசுவதை ரசித்தவாறு, பல் துலக்கி முடித்தேன். பின், அப்பாவின் அருகில் அமர்ந்து, செய்தித் தாள் ஒன்றை எடுத்து விரித்தேன்.

இது தான் சரியான சந்தர்ப்பம் எனக் கருதி, “அப்பா, அம்மா, உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் ஒண்ணு கேட்கலாமா... தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா கேட்கிறேன். ரொம்ப நாளா கேட்கணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்,” என்றேன்.

ஏறிட்டுப் பார்த்த அப்பா, “சொல்லு, அருண்...” என்றார்.

“இப்ப நீங்க ரெண்டு பேரும் இருக்கிறதை பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... இப்படியே, தினமும் இருந்தால் என்ன... ஏன், அடிக்கடி சண்டை போடுறீங்க...

“நீங்க ரொம்ப படிச்சவர்ங்கிறதால, அம்மா, சரியா படிக்கலன்னு உங்களுக்கு ஏதும் கோபம் இருக்குதாப்பா... அப்படியே இருந்தாலும் இனிமே என்ன செய்ய முடியும்... கொஞ்சம், 'அட்ஜெஸ்ட்' செய்துக்க கூடாதா...'' என, மனதில் இருப்பதை கொட்டி விட்டேன்.

கையில் இருந்த செய்தித்தாளை மடித்து வைத்த அப்பா, அம்மாவை தன் பக்கம் இழுத்து, தோளை அணைத்துக் கொண்டவர், “தப்புதான்ப்பா... ஒங்க முன்னாடி நாங்க சண்டையிட்டுருக்க கூடாது தான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா, நீ நினைக்கிறது மாதிரி, நாங்க சண்டை போடல; மறைமுகமா உங்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுத் தர்றோம்.

“உங்கம்மா தான் என் உயிர்; இவ இல்லாம நான் இல்ல; நான் இல்லாம இவ இல்ல. உங்களுக்கு முன் சண்டையிடுற நாங்க, எங்கள் அறையில், அப்படி இருக்கிறது இல்ல. எங்கள் கண்களான உங்களுக்கு, நாங்க நல்ல கல்விய கொடுக்கிறது மாதிரி, நல்ல வாழ்க்கை பண்பையும் கற்றுக் கொடுக்கணும்ன்னு நினைச்சோம். அதை, வார்த்தையா சொன்னா, காதில ஏறாது; மனசுல பதியாதுங்கிறதால தான், இந்த நாடகம்.

''எங்க சண்டையப் பார்த்து, அப்பா, அம்மா போல, நம்ம வாழ்க்கையில நாம சண்டையிடக் கூடாதுன்னு நினைப்பீங்க. கணவன் மனைவிக்குள் ஏற்படும் தப்பான அபிப்ராயங்கள எப்படி கையாளணும்ங்ற படிப்பினையை எங்க சண்டைகள் மூலம் உங்களுக்கு கற்றுத் தர்றோம்.

“பெரும்பாலான ஆண்கள் இப்படித் தான் இருப்பாங்கிறதால, அம்மா செய்தது போன்ற தவறுகளை தான் செய்யக் கூடாதுன்னு உன் தங்கை மனதில் பதியும். அது போல, வீட்டை நிர்வகிக்கும் போது என்னென்ன பிரச்னைகள் ஏற்படுங்கிறத நீங்க ரெண்டு பேருமே புரிஞ்சுப்பீங்க,'' என்று கூறி, அம்மாவின் தலை முடியை கோதி விட்டார் அப்பா.

எங்களுக்கு பாடம் நடத்த, இருவரும் தங்களுக்குள் மோதிக் கொண்டார்களா என நினைத்து, ஆச்சரியமாக இருந்தது.

எனினும், எனக்கு திருப்தி இல்லை; ஏனெனில், அப்பா, தன் தரப்பு நியாயத்தை கூறி விட்டார். அம்மா ஒண்ணும் சொல்லவில்லையே என எண்ணி, “எங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் நாடகச் சண்டையா போட்டீங்க...” என்றேன், அம்மாவிடம்!

“ஆமாண்டா செல்லம்... உங்க தாத்தாவும், பாட்டியும், ஆதர்ஷ தம்பதியா வாழ்ந்தவங்க. திருமண விழாக்களுக்கு அவுக ரெண்டு பேரும் ஒண்ணாப் போனாலே காலியாக கிடக்கிற மண்டபம் கூட நிறைஞ்சு போயிடும். அவங்க மனசார வாழ்த்தினால், அந்த வாழ்த்தே கோடி பெறும். அப்படியொரு ஒற்றுமையான தம்பதி அவங்க. அவங்க வாரிசான உங்க அப்பா, தப்பா இருப்பாரா... குடும்பத்தில், நடைமுறை வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், சிரமங்களை நீங்க அறிஞ்சுக்கணும்ன்னு தான் நாங்க சண்டை போடுறது போல நடிச்சோம். எவ்வளவுக்கு எவ்வளவு சண்டை போடுறது போல நடிக்கிறோமோ அதுக்கு பத்து மடங்கு, அன்னியோன்னியமாக இருப்போம்.

“இப்ப, உங்களுக்கு உண்மை புரிஞ்சுட்டதால, இனிமே எங்களுக்குள், சண்டை இருக்காது,” என்றாள், அம்மா.

இந்த உரையாடலை கேட்ட என் தங்கை, ஓடி வந்து, அப்பாவையும், அம்மாவையும் கட்டிக் கொண்டாள். “நீங்க ரியலா தான் சண்டை போடுறீங்களோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேம்மா... இப்பத் தான் நிம்மதியா இருக்கு. எங்களுக்காக, நீங்க நடத்தியது, நாடகம் இல்லேம்மா... குட் டீச்சிங்,” என்றாள், கண்கள் குளமாக!

இப்போது அப்பாவின் மடியின் ஒருபுறத்தில் அம்மா, மறுபுறத்தில் தங்கை; முன்புறத்தில் நான்!

-ஏ. மீனாட்சி சுந்தரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us