PUBLISHED ON : செப் 11, 2016

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ!
என, திருமுறைகள், சிவபெருமானை போற்றி புகழ்கின்றன.
உள்ளும், புறமும், தூய்மை நிரம்பிய, பாணினி எனும் முனிவருக்கு, 'வேதங்கள் எல்லாம், தனக்கு சித்திக்க வேண்டும்...' என்ற ஆர்வம் உண்டானது. அதன் காரணமாக, பிரம்மனை நோக்கி, கடுந்தவம் செய்தார்.
பாணினிக்கு தரிசனம் தந்த பிரம்மா, 'பாணினி... உன் தவத்தின் நோக்கத்தை அறிவேன்; உன் எண்ணம் நிறைவேற, ஆதிபுரி எனும் திருத்தலத்திற்கு செல்; எமனை, தன் திருவடிகளால் உதைத்த பரம்பொருள் சிவபெருமான் அங்கே எழுந்தருளியுள்ளார். படைக்கும் தொழிலை அவர் எனக்கு உபதேசித்தது, அத்தலத்தில் தான். அதனால், நீயும் அங்கு செல்; உன் விருப்பம் நிறைவேறும்...' எனக் கூறி, மறைந்தார்.
பிரம்மனால் குறிப்பிடப்பட்ட ஆதிபுரிக்கு விரைந்தார், பாணினி.
அங்கிருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் தினமும் நீராடி, திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்து, பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி, சிவனை சிந்தனையில் நிறுத்தி, மானச பூஜை செய்தவாறு, தவத்தில் ஆழ்ந்தார்.
சிவலிங்கத்திலிருந்து, குரு வடிவாக எழுந்தருளிய சிவபெருமான், 'முனிவனே... உன் தவம் கண்டு, மகிழ்ந்தோம்; வேண்டும் வரங்களை கேள்...' என்றார்.
கண்ணுதலோனை கண்ணெதிரில் கண்டதும், கண்களில் கண்ணீர் வழிய, சிரசின் மீது கைகளை குவித்து பாடி, ஆனந்த நடனமாடிய பாணினி, 'சிவபெருமானே... அடியேன், வேதங்களை எல்லாம் உணரும்படி அருள்புரிய வேண்டும்; அதுவே, என் வேண்டுகோள்...' என, தன் விருப்பத்தை வெளியிட்டார்.
இறைவனிடம், 'அதைக் கொடு; இதைக் கொடு...' என்று கேட்கும் மனிதர்களிடையே வேதத்தை உணர வரம் கேட்டதால், மனம் மகிழ்ந்து, 'பாணினி... உன் பெயராலேயே, ஒரு வியாகரண (இலக்கணம்) நூல் எழுது; அதன் மூலம், உன் விருப்பம் நிறைவேறும்...' என அருளி, மறைந்தார், சிவபெருமான்.
அடுத்த விநாடியில், அவர் எதிரில், 14 சூத்திரங்களும் காட்சியளித்தன. அவற்றைக் கொண்டு, சமஸ்கிருத வியாகரணத்தை எழுதி முடித்தார் பாணினி. இன்றும், அந்நூல், 'பாணினி வியாகரணம்' எனும் பெயரில், புகழ் பெற்று விளங்குகிறது.
சமஸ்கிருதத்தில் மிகவும் புகழ் பெற்ற இலக்கண நூல் உருவான வரலாறு இது!
இத்தலத்தில், சிவபெருமான், பிரம்மாவுக்கு சிருஷ்டித் தொழிலை உபதேசித்ததன் காரணமாக, தேர்வு சமயங்களில், தங்கள் பள்ளி மாணவர்களின், 'ஹால் டிக்கெட்'களை இத்திருக்கோவிலில் வைத்து, வழிபாடு நடத்துகின்றன, சில பள்ளிகள்.
பிரம்மாவுக்கும், பாணினிக்கும் அருள்புரிந்த திருத்தலம், திருவொற்றியூர் வடிவுடையம்பாள், ஆதிபுரீஸ்வரர் கோவில்.
பாணினியின் விருப்பத்தை நிறைவேற்றிய பரம்பொருள், நம் விருப்பத்தையும் நிறைவேற்ற, வேண்டுவோம்!
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்
வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மை எல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்த மதுகர முரலும்
தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே!
விளக்கம்: வண்டுகள் மொய்த்து, ரீங்காரம் இடுகிற கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானே... தேவர்கள் உன்னைத் துதிப்பது, தாங்கள் உயர்வடைந்து, மற்ற எல்லாரும், தங்களை வழிபட வேண்டும் என்பதற்காகவே! நாய் போன்ற அடியேனாகிய நான், பாழான பிறவித் தளையை அறுக்க வேண்டும் என்பதற்காகவே உன்னைத் துதிக்கிறேன்.
கருத்து: மற்றவர்கள் தம்மை வழிபட வேண்டும் என்பதற்காகவே, உன்னை வழிபடுகின்றனர் தேவர்கள்; நானோ, பிறவி நீங்கி, முக்தி அடைய வேண்டும் என்பதற்காக வழிபடுகிறேன்.
