PUBLISHED ON : அக் 02, 2016

மா.பொ.சி., எழுதிய, 'காந்தியடிகளை சந்தித்தேன்' என்ற நூலிலிருந்து: தியாகராய நகரில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியிருந்தார், காந்திஜி. அவரை சந்திக்க, ராஜாஜியுடன், நானும் சென்றிருந்தேன். அப்போது, அகாதா ஹாரிசன் என்ற மூதாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார், காந்திஜி.
ராஜாஜியை பார்த்ததும், அவரை அருகில் அழைத்தார், காந்திஜி. நான், சற்று ஒதுங்கி நின்றேன். அப்போது, என்னை அருகில் அழைத்த ராஜாஜி, 'இவர் கள்ளிறக்கும் ஜாதியை சார்ந்தவர்...' என்று சொல்லி, அறிமுகப்படுத்தினார்.
ஜாதி பற்றி கூறியதை, நான் தவறாக கருதி விடுவேனோ என எண்ணி, 'நான் சொன்னது சரி தானே...' என, என்னிடம் கேட்டார்; 'சரி தான்...' என்றேன்.
பின், 'இவர் கள்ளிறக்கும் ஜாதியை சார்ந்தவரானாலும், உங்களை போல், கள்ளுக்கு எதிரி...' என்றார்.
உடனே, 'தப்பு... நான் கள்ளுக்கு எதிரி அல்ல. தித்திப்புக் கள்ளுக்கு சினேகிதன்; புளிப்பு கள்ளுக்கு தான் விரோதி...' என்றவர், என்னை சுட்டிக் காட்டி, 'இவர் கூட ரொம்ப இளைத்திருக்கிறார். தித்திப்பு கள்ளு சாப்பிட்டாரானால், உடம்பு ஆரோக்கியமாகி விடும். மக்களிடம் இவர் சொல்லலாம்... காந்தியே என்னை தித்திப்பு கள்ளு, குடிக்கச் சொன்னார் என்று!
'இதில் கஷ்டமென்னவென்றால், தித்திப்பு கள்ளு இறக்குவதாக சொல்லி, கள்ளை, புளிக்க வைத்து குடிப்பர்...' என்றார் காந்திஜி.
பின், ஒரு சந்தர்ப்பத்தில் காந்திஜி என்னிடம் பேசிய போது, 'தமிழகத்திற்கு வரும் போது தான், என் மனம் அமைதியாக இருக்கிறது...' என்று கூறினார்.
'அண்ணாவின் வாழ்விலே...' நூலிலிருந்து: கடந்த, 1947க்கு முன், எழுத்தாளர் மாநாடுகள் மற்றும் அவர்களது சங்கங்களில் அதிகம் தொடர்பில்லாதவராக இருந்தார், அண்ணாதுரை. அவரது எழுத்தாற்றலையும், பேச்சு வன்மையையும் அறிந்திருந்த ஒரு சில எழுத்தாளர்கள், தங்களது சங்க விழா ஒன்றுக்கு, அண்ணாதுரையையும் பேச அழைத்திருந்தனர். அவ்விழாவிற்கு, தலைமை வகித்தவர், கல்கி கிருஷ்ணமூர்த்தி. பல்வேறு பொருள் பற்றி பேசுவதற்கு வேறு சில பேச்சாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்து விட்டார், கல்கி. அண்ணாதுரையை தவிர, மற்றவர்கள் ஏனோ வெகு நேரமாகியும் வரவில்லை. இதனால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை.
பொறுமையோடு அமர்ந்திருந்தார், கல்கி. சிறிது நேரம் சென்றிருந்த நிலையில், கல்கியின் காதில் கிசுகிசுத்த அண்ணாதுரை, பேச எழுந்தார். தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த பொருள் பற்றி மட்டுமல்லாது, மற்றவர்களுக்கென குறிக்கப்பட்டிருந்த தலைப்புகளிலும் வெகு அழகாகவும், சரளமாகவும் சொற்பொழிவாற்றி அமர்ந்தார்; பார்வையாளர்களிடையே பலத்த கைத்தட்டல்!
அதன்பின், பேசிய கல்கி, 'நான் பேச வேண்டும் என்பதையே மறந்து, வியப்புக் கடலில் ஆழ்ந்து போயுள்ளேன். அப்படிப்பட்ட ஒரு நிலையை அன்பர் அண்ணாதுரை, தம் அரிய சொற்பொழிவால் ஏற்படுத்தி விட்டார். இப்படி, பல பொருட்கள் பற்றி, முன் தயாரிப்பின்றி, முன் அறிவிப்புமின்றி, தட்டுத் தடங்கல் இன்றி, விரிவாக பேச யாராலும் முடியாது. தரப்பட்ட தலைப்புகளோ ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதவை. இப்படி பலவகைப்பட்ட விஷயங்களைப் பற்றி, விரிவாகப் பேசக்கூடிய இவர், சாதாரண அண்ணாதுரை அல்ல; அறிஞர் அண்ணாதுரையாகவே எனக்கு தோன்றுகிறார். இவரை, 'அறிஞர் அண்ணாதுரை' என்று அழைப்பதே மிக மிகப் பொருத்தம்...' என்று கூறிய போது, கூட்டத்தினர், அதை ஆரவாரத்துடன் ஆமோதித்தனர்.
அன்றிலிருந்து, அண்ணாதுரை, 'அறிஞர் அண்ணதுரை' ஆனார்.
-நடுத்தெரு நாராயணன்
