தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 09, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மறைந்த திரைப்பட இயக்குனர், ஸ்ரீதர் எழுதியது:

இன்று, மிக சகஜமாக ஏற்றுக் கொள்ளப்படும், 'ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்' அணிந்து, வெண்ணிற ஆடை படத்தில் சில காட்சிகளில் தோன்றுகிறார், ஜெயலலிதா. இதுதான், அப்படத்துக்கு, சென்சார், 'ஏ' சான்றிதழ் தரக் காரணம்.

ஒன்றுமில்லாத விஷயத்துக்கு, 'ஏ' சான்றிதழ் பெற்ற, வெண்ணிற ஆடை படம், அந்தக் காரணமாகவே, பரபரப்பை ஏற்படுத்தி, ரிலீசானது. ஆனந்த் தியேட்டரில், முதல் நாள், முதல் காட்சி... 'ஏ' பெற்றுள்ள இப்படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்ற ஆவலில், ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர், இளைஞர்கள்.

மேட்னியும் ஹவுஸ் புல்; மாலை காட்சிக்கும் அதே அளவு, 'க்யூ!'

படம் ஆரம்பித்த சற்று நேரத்துக்கு பின், 'ஆ... ஊ...' என்று ஊளையிடும் சத்தம் கேட்க ஆரம்பித்தன. படம் பார்க்கும் சந்தோஷத்தில், ரசிகர்கள் இப்படி கூச்சலிடுவதாக தான், முதலில் எண்ணினோம்; பின் தான், ஏதோ வெறுப்பில் கத்துகின்றனர் என்பது புரிந்து, நெஞ்சு கலங்க நின்றோம். படம் முடிந்து, வெளியே வரும் போது, பலர், 'கோவிந்தா... கோவிந்தா....' என்று கத்தியபடி வந்தனர்.

'படத்தில் எது இவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கும்...' என்பது புரியவில்லை. யோசிக்க யோசிக்க, குழப்பமே மிஞ்சியது.

தியேட்டர் காலியானதும், உள்ளே சென்ற சுத்திகரிப்பு ஊழியர்கள், பதறி அடித்து ஓடி வந்து, 'சார்... ஏகப்பட்ட சீட்டுகள் கிழிஞ்சிருக்கு; பிளேடு போட்டுருக்காங்க...' என்றனர்; அதிர்ச்சி அடைந்தேன்.

அன்று மாலையே, பல ஊர்களிலிருந்தும், போன் கால்கள் வந்தன; தமிழகத்தின் பல நகரங்களில், வெண்ணிற ஆடை படம், ரிலீசான தியேட்டர்களிலெல்லாம், இதேமாதிரி, இருக்கை கிழிப்பு சம்பவங்கள்... நான் யோசித்தேன்.

'ஒன்று நிச்சயம்... கோவிந்தா போடவும், ஊளையிடவும், சீட்டை கிழிப்பது போன்ற ஏமாற்றமளிக்க கூடிய படம் அல்ல என்னுடையது! ஒருவேளை, 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்ட படத்தில், அதற்கேற்ப ஆபாச காட்சி ஏதும் இல்லாததால் ஏற்பட்ட கோபமாக இருக்குமோ அல்லது என்னை பிடிக்காத சிலர், பொறாமையால், திட்டமிட்டு நிறைவேற்றும் சதியோ... மர்மத்தை விடுவித்தே ஆக வேண்டும்...' என்று தீர்மானித்தேன்.

இரவு காட்சியின் போது, ஆங்காங்கே, நம்பகமான ஆட்களை நிறுத்தி வைத்தேன். கூச்சல் எழுப்பி, சீட்டுகளை கிழிப்போரை கண்டுபிடித்து, அவர்களை மிரட்டாமல், நல்ல வார்த்தையாக பேசி, தனியே அழைத்து வர, ஏற்பாடு செய்தோம். அப்போது வந்து சேர்ந்த சிலரை விசாரித்த போது, திடுக்கிடச் செய்த விவரம் தெரிய வந்தது. அவர்கள் எல்லாருமே, எம்.ஜி.ஆர்., ரசிகர்கள்!

எம்.ஜி.ஆரை வைத்து, சில காட்சிகளை மட்டுமே எடுத்து விட்டு, அந்தப் படம் (அன்று சிந்திய ரத்தம்) பாதியில் நிற்க, காதலிக்க நேரமில்லை மற்றும் வெண்ணிற ஆடை என்று, மேலும் மேலும் வண்ணப்படங்களை, வெற்றிப் படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் என் மீது, அவர்களுக்கு, இயல்பான கோபம் பொங்கியிருக்கிறது. தங்களுடைய அபிமான கதாநாயகனை அலட்சியம் செய்து, புதுமுகங்களை வைத்து படம் எடுப்பதாக எண்ணி, எரிச்சல் அடைந்துள்ளனர்.

பிரச்னைக்கு முடிவு காண, நேரடியாக, எம்.ஜி.ஆரையே அணுகினேன். விஷயத்தை விவரமாக கூறியதும், 'அப்படியா... இது, ரொம்ப தப்பாயிற்றே... என் ரசிகர்கள் இப்படியெல்லாமா செய்தனர்...' என்றார்.

திகைப்புடன், சற்று நேரம் யோசித்தவர், பின் என்னை ஆழமாக பார்த்து, 'எனக்கு இதெல்லாம் பிடிக்காது; கவலைப்படாதீங்க... இனிமேல், இப்படிப்பட்ட காரியங்கள் நடக்காது; நான் பார்த்துக்கறேன்...' என்றார்.

இரண்டு நாட்களில், நிலைமை அடியோடு மாறிப் போயிற்று. ஆனந்த் தியேட்டரில் மட்டுமின்றி, தமிழகத்தில், வெண்ணிற ஆடை படம், திரையிடப்பட்டிருந்த எல்லா தியேட்டர்களிலும் ரசிகர்கள் அமைதியாக படம் பார்த்தனர். ஏதோ மாயாஜாலம், மந்திர ஜாலம் போலிருந்தது.

'பனி விலகி விட்டது; இனி, இப்படத்தை, நீங்கள் நன்றாக பார்க்கலாம்...' என்று, நான், நாளிதழ்களில் விளம்பரம் செய்தேன்.

காதலிக்க நேரமில்லை படம் அளவுக்கு, வெண்ணிற ஆடை படமும் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாவிட்டாலும், 100 நாட்கள் ஓடியது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us