தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 01, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொ.மு. பாஸ்கர தொண்டைமான் எழுதிய, 'கல்லும் சொல்லாதோ கவி' என்ற நூலில் இடம் பெற்ற, பெர்னாட்ஷாவின் கூற்று இது: எருமையின் அற்புத குணாதிசயங்களை மக்கள் சரியாக உணரவில்லை. மந்தம், மடமை, சோம்பல், அறிவின்மை எல்லாம் சேர்ந்த மிருகம் என்ற தூற்றலுக்கே அது ஆளாகியுள்ளது. ஆனால், நான் அடிக்கடி அதை பார்த்து அதிசயிப்பதுண்டு.

மரத்தின் நிழலில் படுத்து, அமைதியாக அசை போட்டபடி இருக்கும் அதன் நிலையை பார்த்திருக்கிறீர்களா... பக்கத்தில் நடக்கும் காரியங்களில் சிறிதும் மனதை சிதற விடாமல், அவற்றை எல்லாம் துச்சம் என, ஒதுக்கித் தள்ளி, மனதை ஒரு நிலையில் நிறுத்தும் சக்தி பெறுவது எளிதான காரியமா என்ன!

'உலகம் என்னவானால் என்ன, என் உள்ளம் எதனாலும் சலனம் அடையாது...' எனும் அற்புத நிலையை அல்லவா அது பெற்றுள்ளது. அதை விட சிறந்த பேறு உண்டா?

சில சமயம், எண்ணத்தை எங்கோ பரவ விட்டு, நடுத்தெருவில் அது நின்று விட்டால், அதை யாராலும் அசைக்க முடியுமா... எத்தனை மோட்டார் கார்கள் எப்படியெல்லாம், 'ஹாரன்' அடித்து, சத்தம் எழுப்பினாலும், அதன் சமாதி நிலையை கலைக்க தான் முடியுமா... ஆனால், அந்த சமாதி நிலையை கடந்து, பேரானந்த அனுபவத்தை அது பெற்று விட்டால், அப்படியே கும்மாளம் போட்டு, துள்ளி ஓட ஆரம்பிக்குமே... அப்போது அதை நம்மால் பிடிக்க தான் முடியுமோ!

எருமையின் குரல் இனிமையை, நம்மால் அனுபவிக்க முடியாது என்றாலும், அது, தன் குரலில் இன்னிசை அனுபவத்தை அடைந்து, அந்த ஆனந்தத்தில், தன்னை மறந்த லயத்தையே அடைந்து விடுகிறது.

தனக்கென வாழாது, பிறருக்காவே வாழும் எருமையை கர்மயோகி என்றே கூறலாம். மக்களுக்கு வேண்டியவற்றை எல்லாம், நிஷ்காம்ய நிலையில் கொடுத்து உதவுகிறது.

யோக சித்தி கைவரப் பெற்ற தத்துவ ஞானி அது! இவ்வுலகத்தின் சந்தடி இரைச்சல் எல்லாம், அதை ஒன்றுமே செய்வதில்லை.

'கலைமகள்' இதழுக்கு, 1972ல், ஈ.வெ.ராமசாமி அளித்த பேட்டியிலிருந்து:

கேள்வி: உங்கள் உணவுப் பழக்கம் எப்படி?

ஈ.வெ.ராமசாமி: காலை, 6:30 மணிக்கு எழுந்து, 'பெட்' காபி சாப்பிடுவேன். பின், யாராச்சும் வந்தா, பேசிட்டு இருப்பேன்; இல்லேன்னா படிப்பேன். அப்புறம், ரெண்டு இட்லியும், ரெண்டு மலை வாழைப் பழமும் சாப்பிடுவேன். மதியம், புலால் உணவு; ஒரு கப் தயிர்; ரெண்டு வாழைப்பழம்... மாலையிலே, ஒரு கப் காபி; அப்புறம், இரவில் ரெண்டு இட்லி, மலை வாழைப்பழம். மீட்டிங் ஏதும் இல்லன்னா, 8:00 - 8:30 மணிக்குள்ள தூங்கிடுவேன்.

கேள்வி: மதுவிலக்கு கொள்கை பற்றி, உங்கள் கருத்து?

ஈ.வெ.ராமசாமி: குடிப்பது தவறில்லை; கள் குடிச்சு செத்தவங்க எத்தனை பேர் சொல்லுங்க... நான் குடிக்கிறதில்லே; எப்படியோ அந்தப் பழக்கம், எனக்கு ஏற்படல. ஆனா, நண்பர்களுக்கு வாங்கி கொடுத்திருக்கேன். கள்ளுக்கடை எல்லாம் மூடியிருந்தாங்களே அப்போ குடிக்காமலா இருந்தாங்க... திருட்டுத்தனமா குடிச்சாங்க; இதனால, வருமானம் குறைஞ்சது தான் மிச்சம். ஜனங்க சோம்பேறி ஆனதுக்கும், கூலி உயரவும் காரணம் மது ஒழிப்பு தான். சினிமாவுக்கு போறதை விட, குடிக்கிறது மேல்!

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய, 'நாடக மேடை நினைவுகள்' நூலிலிருந்து:

இலங்கையில் நாடகம் நடத்த சென்றிருந் தோம். ஒருநாள், 'சாரங்கதாரா' நாடகம் நடத்திய போது, சிங்களவர்களின் தலைவரான, பண்டார நாயக, நாடக கொட்டகைக்கு விஜயம் செய்தார். அவருடைய முழு பெயர், 'சர் சாலமன் டையஸ் பண்டார நாயக மகா முதலியார்' இப்பெயரிலுள்ள விசித்திரத்தை பாருங்கள்...

சர் என்பது, வெள்ளைக்கார துரைகளால் அவருக்கு அளித்த பட்டப் பெயர்; சாலமன் என்பது ஹீப்ரு மொழி, டையஸ் - போர்ச்சுக்கீசிய வார்த்தை; பண்டார நாயக என்பது பாலி பாஷை. மகா - சமஸ்கிருதம்; முதலியார் - தமிழ்ப்பதம்; மகா முதலியார் என்பது, சிலோன் கவர்ன்மென்ட் கொடுத்தப் பட்டப் பெயர்!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us