PUBLISHED ON : ஜன 01, 2017

பூப்பூக்கும் புத்தாண்டு!
நாட்காட்டிகளில் கிழிக்கப்படும்
தாள்கள்
ஒவ்வொருவருடைய
வாழ்நாளின்
ஒவ்வொரு நாளையும்
கழித்துக் கொண்டிருக்கின்றன!
பூமியின் வசந்தத்தில்
தம் ஆயுளை கழித்த
நம் மூதாதையர்
நீரும், நெருப்புமாய்
நிலமும், காற்றுமாய்
அகண்ட வானமுமாய்
ஐம்பூதங்களில் கரைந்திருக்கின்றனர்!
ஐம்பூதங்களுக்குள்
ஐக்கியமாவதல்ல நம் வாழ்வு!
நம் சந்ததியினருக்கு
கல்வெட்டுகளாய்
கலங்கரை விளக்கங்களாய்
வாழ வழிகாட்டுவது தான்
ஒவ்வொரு ஆன்மாவின்
அர்த்தமுள்ள அடையாளம்!
விஷமாகிப் போனவற்றை
விரட்டியடித்து
பூமியின்
புனிதமான பொக்கிஷங்களாம்
இயற்கை வளங்களை
நேசப்படுத்தும்
நிஜமான பாதுகாப்பே
பூமியின் ஆயுளுக்கான
நிரந்தர உத்தரவாதம்!
சுயநல வெறியால்
புரையோடிப் போயிருக்கும்
பூமியின் வேர்களுக்கு
புது ரத்தம் பாய்ச்சிடும்
புனிதப் பணி தொடரட்டும்!
நாட்களாய்
வாழ்க்கை நகர்ந்தாலும்
பூமியை புனிதப்படுத்தும்
ஒவ்வொரு புத்தாண்டும்
புனித ஆண்டு தான்!
இதில் பயணிக்கும்
ஒவ்வொரு மனிதர்களும்
புனிதர்கள் தான்!
— எஸ்.பி.செல்வராஜ், அல்லிநகரம்
