தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுமையான கண்டுபிடிப்புகளை, சமுதாயம் முதலில் ஏற்க மறுப்பது, காலங்காலமாக நடந்து வரும் நிதர்சனம்.

முதன் முதலில், கிரகாம்பெல் தொலைபேசியை கண்டு பிடித்த போது, அதை, ஏதோ வேடிக்கை பொருள் என்றே நினைத்தனர். வெஸ்டர்ன் யூனியன் என்ற கம்பெனியோ, 'புத்திசாலி, இப்படி விசித்திரமான முறையில் தொடர்பு கொள்ள மாட்டான்; இதில், முதலீடு செய்வது பயன் தராது...' என்று கூறி, கிரகாம்பெல் திட்டத்தை புறக்கணித்தது.

பிரிட்டிஷ் அரசோ, 'நம்முடைய அமெரிக்க சகோதரர்களுக்கு வேண்டுமானால், ஆள் பஞ்சம் காரணமாக, டெலிபோன் தேவைப்படலாம்; நமக்கு தான், செய்திகளை தெரிவிப்பதற்கு, ஏராளமான சிப்பந்திகள் (மெசஞ்சர் பாய்ஸ்) இருக்கின்றனரே...' என்று கூறி விட்டது.

அதேபோன்று, ஜேம்ஸ் வாட், நீராவி இன்ஜினை, கண்டுபிடித்த போது, லண்டனில் உள்ள பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், 'நீராவி இன்ஜினால் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணம் செய்வது, முடியாத காரியம். அத்துடன், ரயில், வேகமாக சென்றால், பயணிகள், மூச்சு திணறி இறந்து விடுவர்...' என்றார்.

மார்கோனி, வானொலியை கண்டுபிடித்த போது, லண்டன் பத்திரிகையொன்றில், 'கம்பி யில்லாமல் அமெரிக்காவிற்கு செய்தி அனுப்பி, வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், கம்பி மூலம் செய்தி அனுப்புவது தான், கம்பியில்லாத தந்தியை விட, சீக்கிரமாய் போய் சேரும்....' என்று, கருத்து தெரிவித்தார் ஒருவர்.

டெலிவிஷனை கண்டு பிடித்தவர், ஜான் பேயர்ட். இவர், தன் கண்டுபிடிப்பை பற்றி, செய்தி வெளியிட வேண்டி, லண்டனிலிருந்து வெளியாகும், 'டெய்லி எக்ஸ்பிரஸ்' நாளிதழின் ஆசிரியரை சந்திக்க, 1925ம் ஆண்டு சென்றிருந்தார்.

ஆனால், அந்த ஆசிரியரோ, ஒரு நிருபரை அழைத்து, 'கீழே, 'ரிசப்ஷனில்' உட்காந்திருக்கும் அந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள். அவன் ஒரு பைத்தியக்காரன். கம்பியில்லாமல் உருவத்தை காட்டும், 'மிஷின்' ஒன்றை கண்டுபிடித்திருப்பதாக சொல்கிறான். அவன் கத்தி கூட வைத்திருக்கலாம்; ஜாக்கிரதை. அவனை விரட்டுங்கள்...' என்று கூறினார்.

வெ.சாமிநாத சர்மா எழுதிய, 'நான் கண்ட நால்வர்' நூலிலிருந்து: 'தேச பக்தன்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து திரு.வி.க., விலகியதும், வ.வே.சு.ஐயர் ஆசிரியராக பொறுப்பேற்றார். நான் துணையாசிரியர்.

ஒரு சமயம், பிழை திருத்துபவர், கவனப் பிசகால், அநேக பிழைகளை திருத்தாமலேயே விட்டு விட்டார்; அப்பிழைகளுடனே, பத்திரிகையும் வெளி வந்து விட்டது. பத்திரிகையைப் பார்த்து திடுக்கிட்டு போன நான், பிழை திருத்துபவரிடம் சென்று, 'ஏன் இப்படி...' என்று கேட்டேன்.

'நான், திருத்தித் தான் கொடுத்தேன்; அச்சகத்தாரே திருத்தத்தை சரி செய்யாமல் விட்டு விட்டனர்...' என்று ஒரேடியாக சாதித்தார்.

உடனே, அச்சகம் சென்று விசாரித்தேன். அச்சகத்தை மேற்பார்வை செய்தவர், சிறிது முன்கோபி. அச்சுத் தாள்களை வரவழைத்து பார்த்தார்; பிழைகள் திருத்தப் பட்டிருக்கவில்லை. உடனே, சீறியெழுந்தவர், அத்தாள்களுடன், நேரே பிழை திருத்துபவரிடம் வந்து, 'உண்மையிலேயே நீ திருத்தங்கள் செய்தாயா... இந்த பச்சிலை சாட்சியாக சொல்...' என்று கேட்டு, அருகிலிருந்த செடியிலிருந்து, சிறு கிளையை ஒடித்து, பிழை திருத்துபவரின் தலை மீது அடித்து விட்டார்.

அந்த அப்பாவி மனிதர் அழுது விட்டார். பின், ஐயர் வந்து சமாதானப்படுத்தினார். 'இனி, பொய் சொல்ல மாட்டேன்...' என்று ஐயரிடம், வாக்குறுதி அளித்தார் பிழைதிருத்துபவர்.

ஒரு பேட்டியில், கிருபானந்த வாரியார் கூறியது: 'கல்யாணம் ஆகாத பெண், எந்தக் கடவுளின் திருநாமத்தை உச்சரித்தால், நல்ல கணவன் கிடைப்பான்...' என்ற பக்தர் ஒருவரின் கேள்விக்கு, 'ஒரு பெண், 'விறல் மாறணைந்து...' என்று துவங்கும் திருப்புகழை, தினமும், ஆறு முறை பாராயணம் செய்து வந்தால், சிறந்த கணவன் அமைவான்...' என்றார், வாரியார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us