தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கே.ரவீந்தர் எழுதிய, 'பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.,' என்ற நூலிலிருந்து: 'யானையின் பலம் அதற்கு தெரியாது' என்பது பழமொழி; குடியிருந்த கோவில் படத்தில், 'ஆடலுடன் பாடலை கேட்டு...' பாட்டுக்கு, 'பாங்காரா' நடனம் ஆட வேண்டும்.

ஆலங்குடி சோமு, தாள லயத்துடன் பாடலை அனுபவித்து எழுத, மெல்லிசை மன்னர்

எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசைத் திறனை காட்ட, பாவனையோடு பாடியிருந்தனர், சுசீலாவும், டி.எம்.சவுந்தர்ராஜனும்!

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவதற்கு, ஒப்பந்தம் ஆகியிருந்தார், நடிகை, எல்.விஜயலட்சுமி.

'எனக்கும் நடனம் தெரியும்; நாடகத்தில் கற்ற நடனம் தான், இப்போது சண்டை காட்சிகளில் உதவுகிறது. 'ஸ்டெப்' என்பது ரெண்டுக்கும் முக்கியம். விக்ரமாதித்தன் மற்றும் மன்னாதி மன்னன் படத்திற்காக ஆடியிருக்கேன். பரதநாட்டியம்ன்னா, 'ஷாட்'களில் ஏமாத் திடலாம்; இதில், 'மூவ்மென்ட்' தவறிட்டா, தப்பாயிடும்; அதனால வேண்டாம்...' என்றார், எம்.ஜி.ஆர்.,

எவ்வளவோ சொன்னார், தயாரிப்பாளர் வேலுமணி. கேட்பதாக இல்லை, எம்.ஜி.ஆர்.,

இயக்குனர் கே.சங்கரும், 'உங்க திறமையில நம்பிக்கை இல்லாம பேசாதீங்க. நான் எடுத்துக் காட்டுறேன்; பிடிக்கலேன்னா தூக்கிடுவோம்...' என்றதுடன், 'நடன இயக்குனர் சொல்றபடி நீங்க ஆடணும்ன்னு இல்ல...' என்றார்.

'அது தப்பு... தொழில்ன்னு வந்துட்டா, அந்தந்த துறையில இருக்கிற பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்கணும்...' என்று கூறியவர், பின், ஒருவாறாக ஒப்புக் கொண்டு, 'ஒரு வேண்டுகோள்... படப்பிடிப்பு முடிந்ததும், வேறு யாரும், ரிக்கார்டு செய்த அந்த காட்சியை, முதலில் பார்க்கக் கூடாது; நான் பாத்தப்புறம் தான் மத்தது...' என்றார்.

அப்பாடலின் படப்பிடிப்பு, மூன்று நாட்கள் நடந்தது.

எம்.ஜி.ஆரின் ஆட்டத்தை பார்த்து, விஜயலட்சுமி வியந்து, 'உங்க ஆட்டத்துக்கு முன், நான் காணமல் போனேனே...' என்றார்.

'ரஷ்' வந்ததும், எம்.ஜி.ஆரிடம் இயக்குனர் சங்கர், 'ரஷ் வந்தாச்சு... யாரும் பாக்க கூடாதுன்னு சொன்னீங்க சரி... அந்த கட்டளை எனக்குமான்னு தெரியலயே... நான் தான் இதுக்கு எடிட்டர்; அனுமதி கொடுத்தா, 'எடிட்' செய்து காட்டுறேன்...' என்றதும், சிரித்தபடியே, 'என்ன கிண்டலா... என்னை, அவ்வளவு தூரம் தாழ்த்திக்கலேன்னா, நீங்க, இவ்வளவு நல்லா எடுப்பீங்களா... போயி வேலையை பாருங்க...' என்றார், எம்.ஜி.ஆர்.,

படத்தொகுப்பு வேலை முடிந்ததும், எம்.ஜி.ஆர்., உட்பட, நாங்களும் பார்த்தோம்.

ஆட்டத்தின் திறனை இயக்குனரும், இயக்குனர் திறனை, எம்.ஜி.ஆரும் மெச்சினர்.

அப்படத்தின் வெற்றிக்கு அப்பாடல், சிறப்பு அம்சமாக அமைந்தது.

அடிமைப்பெண் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்ச்சி இது: 'தாயில்லாமல் நானில்லை...' பாடல் காட்சி, ஒகேனக்கல்லில் படமான போது, அதன் தயாரிப்பு நிர்வாகி பத்மனாபன், பணியாளரிடம், 'யார் கேட்டாலும், கொடுக்கக் கூடாது...' என்று சொல்லி, 10 இளநீர்களை கொடுத்துச் சென்றிருந்தார்.

பகல் வேளை, வெயிலில் நின்ற எம்.ஜி.ஆர்., பணியாளரிடம் இளநீர் கேட்டார்.

'யாருக்கும் கொடுக்க வேணான்னு முதலாளி சொல்லியிருக்கார்...' என்று கூறி, மறுத்து விட்டார் பணியாளர்.

பத்மனாபன் வந்ததும், 'முதலாளி... உங்க ஆளு, எனக்கு ஒரு இளநீர் கொடுக்க மாட்டேங்குறார்... ஒண்ணு கொடுக்க சொல்லுங்க...' என்றார் எம்.ஜி.ஆர்.,

எம்.ஜி.ஆர்., மீது மிகுந்த பக்தி உள்ளவர், பத்மனாபன்; அத்துடன் முன் கோபியும் கூட. பணியாளரை அடிக்கவே பாய்ந்து விட்டார்.

'ஏய் இருப்பா... நீ சொன்னதை தானே செஞ்சார்; அதுக்கு ஏன் கோவிச்சுக்குறே...' என்றார் எம்.ஜி.ஆர்.,

பின், இளநீர் வெட்டிக் கொடுக்கும் அந்த பணியாளருக்கு கொடுக்கப்படும் படியில், 10 ரூபாய் அதிகமானது, எம்.ஜி.ஆரின் உத்தரவுப்படி!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us