தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜன 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு தமிழன்பன், 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து:

கவிஞர் பாரதிதாசன், சில பேராசிரியர்களை, கடும் கவிதைகளால், 'குயில்' ஏட்டில், திட்டித் தீர்த்ததை, தமிழகம் அறியும். இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.

பாரதிதாசன் இறந்த போது, இவர் விடுத்த இரங்கல் செய்தியில், 'பாரதிதாசன் வாழ்ந்த காலத்தில் விளக்காக இருந்தார். அது, வெப்பமும் கக்கியது; புகையும் பரப்பியது. வெப்பத்தால் சூடுபட்டவரும் உண்டு; புகையால் கண்களை கசக்கியோரும் உண்டு. இப்போது, வெப்பமும் இல்லை; புகையும் இல்லை; ஒளி மட்டுமே மிஞ்சி நிற்கிறது...' என்று குறிப்பிட்டிருந்தார்.

எவர் சொல்வதையும் எளிதில் நம்பி, ஒன்றை நல்லது என்றும், தீயது என்றும் முடிவு எடுக்கும் குணம் கொண்டவர் கவிஞர்.

ஒருமுறை, தெ.பொ.மீ., பற்றிய பேச்சு வந்த போது, 'அவன் ரொம்ப நல்லவன்ப்பா...' என்றார், கவிஞர்.

நான் குறுக்கிடவில்லை.

'என்னான்னு கேளு...' என்றவர், 'புலவர் கூட்டம் நடந்தப்ப, நான், சாப்பிட்டு எழுந்து வர்றேன்... கை கழுவ, தண்ணி எடுத்து ஊத்தறான்பா... நாம் தான், அவனைப் பத்தி கண்டபடியா எழுதிட்டோம்...' என்றார்.

வசவு செய்த கவிஞர் மனம், எவ்வளவு எளிதாக, இரங்கி விட்டது!

பாரதிதாசன் இறந்த போது, கி.வா.ஜகந்நாதன் எழுதியிருந்த இரங்கல் செய்தி, எனக்கு நினைவுக்கு வருகிறது.

'நான் நடந்து செல்லும் போது, கல் ஒன்று என் காலை தடுக்கி விட்டது. அடிபட்ட விரலின் வலியை, தாங்க முடியவில்லை. குனிந்து பார்த்தேன்; விரலில் இருந்து, ரத்தம் கொட்டியது. தட்டி விட்டக் கல்லைப் பார்த்தேன். வைரக் கல்லாக இருந்தது. அதுதான் பாரதிதாசன்!'

கவித்துவத்தோடு, கி.வா.ஜ., எழுதியிருந்த இக்கருத்து, பாரதிதாசனின் ஆளுமையை, நமக்குள் பதிய வைக்கிறது.

நல்லூர் நாகலிங்கம் எழுதிய, 'சுப்ரமண்ய சிவம்' நூலிலிருந்து:

கடந்த, 1906ல் திருநெல்வேலியில் விடுதலைப் போராட்டக் கிளர்ச்சி, பெரிய கலவரமாக வெடித்தது. முனிசிபல் அலுவலகமும், அடுத்திருந்த, சார் - பதிவாளர் அலுவலகமும் தீக்கிரையானது. மக்களிடையே ஆவேசமும், கொந்தளிப்பும், குழப்பமும், போலீசாரால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. ரிசர்வ் படை வந்து சேர்ந்தது. எச்சரித்தும் பயனில்லை; துப்பாக்கிச் சூடு. இருவர் இறந்தனர். கலவரம் அடங்க, மூன்று நாட்கள் ஆயிற்று.

அப்போது ஒரு நிகழ்ச்சி...

பெரிய மீசை வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர், யாராவது, 'வந்தே மாதரம்...' என்று சொன்னால், அவரைப் பிடித்து, மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்குவார். அதனால், சிலர், அப்போலீஸ்காரரைப் பிடித்து, பின் கட்டாகக் கட்டி, கழுதையின் மேல் ஏற்றினர். அவரின் அடர்ந்த மீசையை, இரு பக்கமும் நின்று பிடித்து, 'வந்தே மாதரம் சொல்...' என்றனர். அப்போலீஸ்காரர், வந்தேமாதரம் சொல்லி வர, ஊர் முழுவதும் சுற்றி வந்தனர்.

மறைந்த எழுத்தாளர், சு.சமுத்திரம், 'எனது கதைகளின் கதைகள்' நூலிலிருந்து:

கட்டட தொழிலாளர்கள் பற்றி, ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில், பல்வேறு சேரி பகுதிகளுக்கு சென்றேன். தேனாம்பேட்டை மற்றும் சூளை போன்ற இடங்களில், மண்வெட்டி மற்றும் கூடைகளோடு நிற்கும் ஆண்களையும், பெண்களையும், அவர்களது, அவல நிலையையும் பார்த்தேன்; கான்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், இவர்களை சுரண்டும் விவரங்களும் கிடைத்தன.

மழை வந்தால், இவர்கள் பிழைப்பில் மண். ஒரு தாய், தன்னிடம் இருந்த உணவில், முக்கால் வாசியை, தான் உண்டு, கால்வாசியை மட்டுமே, குழந்தைக்கு கொடுத்தாள்; குழந்தையோ, பசி பொறுக்க முடியாமல் அழுதான். அந்த தாயிடம், இதுபற்றி கேட்ட போது, 'என் வவுறு, கொஞ்சம் நிறைஞ்சா தானே சாமி வேலை பாக்க முடியும்... பசி மயக்கத்துல மயங்கி விழுந்துட்டா, என் பிள்ளைய யார் கவனிப்பாங்க...' என்றவள், மகனைப் பார்த்து, 'பொறுத்துக்கோடா ராசா... சாயங்காலமே, கூலி வாங்கின்னு வந்து, அம்மா, உனக்கு நல்ல சோறு போடறேன்; மசால் தோசை வாங்கி தர்றேன்...' என்று சொல்லி, எதுவுமே நடக்காதது போல் சென்றாலும், அழும் தன் ஆறு வயது மகனை, கண் கலங்க திரும்பித் திரும்பி பார்த்ததையும் பார்த்தேன்.

இப்படி, எத்தனையோ நெஞ்சை உருக்கும் சம்பவங்கள். இவற்றை வைத்து, 'ஒருநாள் போதுமோ' என்று, ஒரு குறுநாவல் எழுதினேன்.

அருணா பப்ளிகேஷன்சின், 'பிரபலங்கள் பத்து, சுவையான சம்பவங்கள் நூறு' என்ற நூலிலிருந்து:

சுதந்திரப் போராட்டக் காலத்தில், காந்திஜி ஈரோட்டிற்கு சென்றிருந்த போது, கொடுமுடியில் இருந்த, கே.பி.சுந்தராம்பாளை சந்தித்தார். மதிய உணவு, சுந்தரம்பாள் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்திஜிக்கு, தங்கத் தட்டில் உணவு பரிமாறினார், கே.பி.எஸ்.,

சாப்பிட்டு முடித்ததும், 'சாப்பாடு மட்டும் தானா... தட்டு எனக்கு இல்லயா...' என்று,

தமாசாக கேட்டார், காந்திஜி.

உடனே, தட்டை கழுவி, சுத்தம் செய்து, சந்தோஷமாக காந்திஜியிடம் கொடுத்தார், கே.பி.சுந்தராம்பாள்.

அத்தட்டை அங்கேயே ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்ட நிதியில் சேர்த்தார், காந்திஜி.

ஒருசமயம், காந்திஜியும், நேருவும் பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வழியில், பெரிய பள்ளம் இருப்பதை கண்ட நேரு, சிறிது தூரம் பின்னால் சென்று, வேகமாக ஓடி வந்து, பள்ளத்தை தாண்டினார். காந்திஜியோ, ஒரு நீளமான மரப் பலகையை போட்டு, அதன் மீது ஏறி, அப்பள்ளத்தை கடந்தார். இதைப் பார்த்த நேரு, 'என்னைப் போல நீங்களும் ஓடி வந்து பள்ளத்தை கடந்திருக்கலாமே...' என்று கேட்டார்.

சிரித்தவாறு, 'இப்பள்ளத்தை தாண்ட, நீங்கள் எவ்வளவு தூரம் பின்னால் சென்று, ஓடி வந்தீர்கள் தெரியுமா... அப்படி நான், பின் வாங்க விரும்பவில்லை; இருந்த இடத்தில் இருந்தே, முன்னேற விரும்புகிறேன்...' என்று கூறினார், காந்திஜி.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனுக்கு ஒருமுறை சென்றிருந்தார், காந்திஜி. அவரை வரவேற்று, 'என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்...' என்று கூறினார், தாகூர்.

காந்திஜி சிரித்தவாறு, 'அப்படியானால், இக்கிழவன் அதிர்ஷ்டக்காரன் தான்... இல்லாவிட்டால், என்றும் இளமையுடன் திகழும், உங்கள் அரசி, பல் இல்லாத இக்கிழவனை வரவேற்பாளா...' என்று கூறி, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us