PUBLISHED ON : மார் 12, 2017

'நேரு நூறு' நூலிலிருந்து: இசை மேதை ஓம்கார் நாத் தாகூர், கச்சேரியில் பாடிக் கொண்டிருந்தார். முன் வரிசையில் நேருவும், வேறு ஒரு முக்கிய நபரும் சுவாரசியமாக பேசியபடி இருந்தனர்.
திடீரென்று பாட்டை நிறுத்திய ஓம்கார், நேருவை நோக்கி, 'நீங்கள் ஏதோ முக்கியமான விஷயம் பேசுகிறீர்கள் என நினைக்கிறேன். அதற்கு, என் இசை இடையூறாக இருக்க கூடாது. நீங்கள் பேசி முடித்த பின், பாடுகிறேன்...' என்றார்.
கோபிக்காமல், புன்னகையுடன் பாடகரின் கண்டனத்தை ஏற்றுக் கொண்ட நேரு, பின், கச்சேரி முடியும் வரை பேசாமல் ரசித்தார்.
'சரித்திர நாயகன்' நூலில், மறைந்த, நடிகர், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அளித்துள்ள பேட்டி: ஜன., 1958ல் திராவிட நாடு கோரிய விஷயத்தை, 'நான்சென்ஸ்' என்று குறிப்பிட்டார், நேரு. அதனால், சென்னைக்கு வரும் நேருவுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார், அண்ணாதுரை. கறுப்புக் கொடி தயாரிக்கும் செலவை, நானும், எம்.ஜி.ஆரும் ஏற்றோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்ணாதுரை, சம்பத், நெடுஞ்செழியன் மற்றும் கண்ணதாசனை கைது செய்தனர், போலீசார். மறுநாள் அதிகாலை, என்னையும் கைது செய்து, மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றபின் தான், எம்.ஜி.ஆரை கைது செய்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருப்பது தெரிய வந்தது.
மறுநாள் காலையில், எங்களை மத்திய சிறையில் அடைத்தனர். எனக்கு முன்பே சிறையில் இருந்தார், எம்.ஜி.ஆர்., பகல், 12:00 மணிக்கு சிறையில் எங்களுக்கு உணவு தந்தனர். அலுமினிய தட்டில் இருந்த அரிசி சாதமும், குழம்பும், காய்கறிகளும் எனக்கு விசித்திரமாகப்பட்டது; ஆனால்,
எம்.ஜி.ஆரோ, சலனமில்லாமல் சாப்பிட்டு முடித்தார்.
அங்கு ஒரு மண் பானையும் அருகில் தகர டப்பாவும் இருந்தது. 'அதைக் கொண்டு, அப்பானையில் உள்ள தண்ணீரை எடுத்து குடித்துக் கொள்ள வேண்டும்...' என்றார், எம்.ஜி.ஆர்., பானைக்கு சற்றுத் தள்ளி, இரு மண் சட்டிகள் இருந்தன. அதன் அருகில் மற்றொரு மண் பானை. அவை என்னவென்று கேட்டேன்.
'இரவில் நம் கழிப்பிட வசதிக்காக...' என்றார். பயந்து போனேன். 'எப்படிண்ணே... இதெல்லாம் நாம பயன்படுத்தறது...' என்று சங்கடத்துடன் கேட்டேன்.
'வேற வழி... நீர் ஆகாரங்களையும், பழச்சாற்றையும் அருந்துவோம்; இயற்கை உபாதைப் பிரச்னை இருக்காது...' என்றார், எம்.ஜி.ஆர்.,
நேரு சென்னை விஜயம் செய்து திரும்பி சென்ற பின், அதாவது ஐந்து நாட்கள் சிறை வாசத்திற்கு பின், நானும், எம்.ஜி.ஆரும் விடுதலை செய்யப்பட்டோம்.
எழுத்தாளர், கு.ப.ராஜகோபாலன் ஒரு கட்டுரையில் எழுதுகிறார்: பயணம் போவதென்றால், எனக்கு பைத்தியம். டிக்கெட்டை வாங்கி, மூட்டை முடிச்சு தொல்லையின்றி, ரயிலில் ஏறி, ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து விட்டால் போதும்... வாழ்க்கை போரின் இடையே ஏற்படும் சிறிய குழப்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
பயணம் ஒரு போதை; இலக்கியம் மற்றும் சங்கீதத்தை போல எல்லா சுகங்களையும் ஒருங்கே அளிக்கும் நிகரற்ற லாகிரி அது!
மூன்றாம் வகுப்பு வண்டி; ஜன்னலண்டை இடம்; பக்கத்தில், கூஜா ஜலம்; வெற்றிலை, பாக்கு; அடுத்த கம்பார்ட்மென்ட்டில் சிற்றுண்டி சாலை இருந்தால் போதும். கோடியக்கரை என்ன, உலகத்தின் கோடி வரையில் கூட ரயிலில் போவேன். எண்ணிப் பார்த்தால், என்னென்ன அனுபவம் என்கிறீர்கள்!
ஆனால், இதெல்லாம் கூட, அவ்வளவாக இன்பம் அன்று; ஏதோ ஒரு ஆனந்தம். சிட்டுக் குருவி ஒன்று ஆகாய வெளியில் பறப்பது போல, கவலையின்றி வானில் மிதந்து செல்வது போல் ஒரு இன்பம் - அது தனி தான்; சந்தேகமில்லை!
நடுத்தெரு நாராயணன்
