PUBLISHED ON : மார் 19, 2017

'ஆனந்த விகடன்' அதிபர், மறைந்த எஸ்.எஸ்.வாசன், ஒரு கட்டுரையில் கூறியது: ஒருநாள், என் இல்லத்திற்கு, நண்பர் ஒருவரை அழைத்து வந்தார், பரலி, சு.நெல்லையப்பர். 'இவர், தேனி என்ற புனைப்பெயரில், 'நவசக்தி' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வருகிறார். 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் எழுத ஆவலுடன் இருக்கிறார். இவரை, தாங்கள் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமா...' என்று கேட்டு, ரா.கிருஷ்ணமூர்த்தியை (கல்கி) எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
'ஒரு கட்டுரை எழுதி அனுப்பச் சொல்லுங்கள்; பார்க்கிறேன்...' என்றேன்.
இரண்டே நாட்களில், 'ஏட்டிக்கு போட்டி' என்ற தலைப்பில், முதல் கட்டுரை வந்தது. இக்கட்டுரையில் தான், 'கல்கி' என்ற புனைப்பெயரை சூட்டிக் கொண்டார்.
முதல் கட்டுரை விகடனில் வெளிவந்தது; சன்மானமாக, ஐந்து ரூபாய் அனுப்பினேன் என்று ஞாபகம். பணம் எவ்வளவு என்பது மறந்து விட்டாலும், 'உங்களுடைய அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்...' என்று, நான் எழுதிய கடிதம் மட்டும் இன்னும் மறக்கவில்லை.
'பூரி யாத்திரை' எனும் தலைப்பில், அடுத்த கட்டுரை வெளியானது; அதற்கு, சன்மானத்தை இரட்டிப்பு ஆக்கினேன். பின், இருவரும் அடிக்கடி சந்தித்தோம்.
சில மாதங்களில், 'ஆனந்தவிகடன்' ஆசிரியராகவே, அவரை அமர்த்திக் கொண்டேன்.
ஜஸ்டிஸ் மகராஜன் எழுதிய, 'கவிதையில் விடுமுறை' என்ற நூலிலிருந்து: ஒரு ஊரில், பெரிய பணக்காரர் ஒருவர் இருந்தார். ஒருநாள், அவர், படகில் ஆற்றைக் கடந்த போது, வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. உறவினர்கள், அவரது உடலை தேடி அலைந்தனர். கடைசியில், அது, மீனவன் ஒருவன் கையில் சிக்கிய தகவலை அறிந்து, அவனிடம் சென்று சடலத்தை கேட்டனர்.
'எனக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள்; இல்லையென்றால், சடலத்தை தர மாட்டேன்...' என்று சொன்னான், மீனவன்.
செத்துப் போனவன் கோடீஸ்வரன் தான்; ஆனாலும், அப்பிணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க, அவருடைய குடும்பத்தார் தயாரில்லை.
வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனை கேட்டனர். 'கவலைப்படாதீர்கள்... எனக்கு தர வேண்டிய கட்டணத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு வழி சொல்கிறேன்...' என்றார், வழக்கறிஞர்.
அவர்களும் அவர் கேட்ட பணத்தைக் கொடுக்க, 'உயிரற்ற உடலை, யாரும் வாங்க மாட்டார்கள்; அதனால், சிறிது நாள் காத்திருங்கள். அவன் வழிக்கு வந்து விடுவான்...' என்று சொன்னார்.
வழக்கறிஞரின் ஆலோசனைப்படியே நடந்து கொண்டனர்; இரண்டொரு நாட்கள் கடந்தன... பிணம் நாற்றமடிக்க துவங்கியது.
அவர்கள் என்ன கொடுத்தாலும், வாங்கி, சடலத்தை கொடுத்து விடுவதற்கு தயாராக இருந்தான், மீனவன். இருந்தாலும், வழக்கறிஞரின் ஆலோசனையை கேட்கலாம் என்று அதே வழக்கறிஞரிடம் சென்றான். அவனிடமும் உரிய கட்டணத்தை பெற்று, 'கொஞ்ச நாள் பொறுத்திரு; அவர்கள் வேறு யாரிடமிருந்தும் இந்த உடலை வாங்க முடியாது; நீ கேட்கும் விலையை தந்து தான் ஆக வேண்டும்...' என்று சொன்னார், வழக்கறிஞர்!
இதைக் கேட்ட மீனவன், திருப்தியுடன் திரும்பிச் சென்றான்.
மு.வரதராசனார் ஒரு கட்டுரையில்: எந்தப் பெண்ணை மனைவியாக தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறதா... நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் குறித்து, அவளால் கிடைக்கக் கூடிய அனுகூலங்களையும், பிரதிபலன்களையும் பட்டியலிடுங்கள்... யாரிடம் உங்களுக்கு அனுகூலம் அதிகமோ, அவரையே இறுதியாக தேர்வு செய்யுங்கள். நான், என் மனைவியை அப்படித்தான் தேர்ந்தெடுத்தேன்.
நடுத்தெரு நாராயணன்
