தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : மே 07, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 07, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு தமிழன்பன் எழுதிய, 'பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்' நூலிலிருந்து: பாரதிதாசன் புதுவையில் இருந்த காலம் அது... ஒருநாள், கவிஞரின் மனைவி பழனியம்மாள், 'மாட்டுக்கு தீவனம் தீர்ந்து விட்டது; தெருவில் வைக்கோல் வண்டி வரும்; பார்த்துக் கூப்பிடுங்கள்...' என்று சொல்லி, மற்ற வேலைகளை செய்ய வீட்டுக்குள் போய் விட்டார்.

திண்ணையில் அமர்ந்து, அவ்வழியே வைக்கோல் வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார், கவிஞர். சிறிது நேரம் சென்றதும், அவ்வழியாக, வைக்கோல் வண்டி ஒன்று வந்தது. பக்கத்து வீட்டுக்காரர், அதை நிறுத்தி, தம் வீட்டு பசுவுக்கு தேவையான வைக்கோல் வாங்கினார். கவிஞர் அதை கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, மற்றொரு வைக்கோல் வண்டி வந்தது. இப்போதும், பாரதிதாசனின் மனம், வண்டி, வைக்கோலை எல்லாம் கடந்து, எங்கோ போய் விட்டது. நெடுநேரம் கழித்து, மனைவியை அழைத்து, 'வைக்கோல் வண்டியையே காணோமே... இன்னைக்கு மாடு பட்டினி தான்...' என்றார்.

உடனே, அவர் மனைவி, 'உங்கள எனக்கு தெரியாதா... விழித்துக் கொண்டே தூங்குபவர் ஆயிற்றே... நான் வைக்கோல் வாங்கிட்டேன்...' என்றார்.

இரண்டாம் முறையாக வந்த வண்டியில், பாரதிதாசன் கண் முன்னாலேயே வைக் கோலை வாங்கியுள்ளார், அவர் மனைவி. அதைக் கூட கவனியாமல் கனவில் மூழ்கியிருந்திருகிறார், கவிஞர்.

'தினமணி' நாளிதழின் ஓய்வு பெற்ற ஆசிரியர், ஏ.என்.சிவராமன் பற்றி, அவருக்கு அடுத்து, வந்த, 'தினமணி' (2000ல்) ஆசிரியராக பொறுப்பேற்ற சம்பந்தம் எழுதிய கட்டுரையிலிருந்து: பத்து ஆண்டு இடைவெளிக்குப் பின், 'தினமணி' அலுவலகத்துக்கு வந்தார், ஏ.என்.எஸ்., எல்லாருக்கும் குதூகலம்! 1987ல் ஓய்வு பெற்றுச் சென்றவர், 1997ல் திடீரென, ஒருநாள், அலுவலகம் வந்ததால், ஊழியர்கள் எல்லாம் அவரைக் கண்டு மகிழ்ந்தனர். முன்பு பார்த்தது போலவே இருந்தார்; ஒரே ஒரு மாறுதல். கையில் தடி!

ஊன்றி நடப்பதற்கு அல்ல; லிப்டிலிருந்து இறங்கும்போதும், படிக்கட்டில் நடக்கும்போதும் ஆழம் பார்க்க!

சுதந்திரப் பொன்விழா மலரை, 'தினமணி' பத்திரிகையில் வெளியிட முடிவு செய்திருந்தோம். அதன் முதல் பகுதியை எழுத இசைந்திருந்ததால், தொடர்ந்து ஒருமாதம், அலுவலகம் வந்தார், ஏ.என்.எஸ்.,

அவரது இல்லத்துக்குச் சென்று, அவரை அழைத்து வருவோம். வீட்டில், காவி வேட்டியுடன் இருக்கும் அவர், எங்களை கண்டதும், வெள்ளைக் கதர் சட்டை, வேட்டியுடன் புறப்படுவார். கையில் தடியைக் கொடுத்து, 'ஸ்கூலுக்குப் போயிட்டு வாங்க...' என்று அவரது, மருமகள் வழியனுப்பி வைப்பார். பள்ளிக்கூடப் பையனாகப் பாவித்து இப்படி கேலி பேசினாலும், மருமகள் அப்படி அழைப்பதை பெருமையாகவே நினைத்தார், ஏ.என்.எஸ்.,

காரணம், 97 வயதிலும் மாணவராகவே இருந்து, நாளும் கற்றுக் கொண்டே இருந்தார்!

சமூக வலைதளத்தில் உலவும் செய்தி இது:

கோடை காலத்தில், மது அருந்தும் போது கடைப்பிடிக்க வேண்டியவை:

* கிளாசில் மதுவை ஊற்றும் போது, கொஞ்சமாக ஊற்றி, நான்கு மடங்கு, சுத்தமான தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

* எக்காரணத்தைக் கொண்டும், தண்ணீருக்கு பதிலாக, பெப்சி, கோக், மிரண்டா போன்ற குளிர்பானங்கள் சேர்க்கக் கூடாது. மேலும், இளநீர் சேர்த்துக் குடிப்பதை, கண்டிப்பாக தவிர்க்கவும்.

* முதல் ரவுண்ட் குடித்த பின், அடுத்த ரவுண்ட் குடிப்பதற்கு, குறைந்தது, 15 நிமிடங்களாவது, இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.

* மது அருந்துவதற்கு, 'சைடிஷ்'ஆக கேரட், வெள்ளரி, பப்பாளி, பீன்ஸ், கோஸ், அன்னாச்சி மற்றும் பச்சை திராட்சை போன்றவற்றை பயன்படுத்தவும்.

* அசைவ விரும்பிகள், மீன் மற்றும் சிக்கன் சார்ந்த உணவுகளை தவிர்த்து, நன்கு வேக வைத்த ஆட்டுக்கறி, சுட்டமீன் மற்றும் குழம்பு மீன் போன்றவற்றை உண்ணலாம். ஊறுகாய், சிப்ஸ், கார வகை, எண்ணெயில் பொறித்த தின்பண்டங்களை அறவே ஒதுக்கவும்.

- 'மது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு' என்ற அறிவிப்போடு, மேற்படி அறிவிப்பையும் மதுக்கடைகளின் முன் வைத்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us