தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எழுத்தாளர், பொன். தண்டபாணி எழுதிய, 'அண்ணாவின் வாழ்விலே' நூலிலிருந்து: அமைச்சர்கள், தாங்கள் வசிக்கும் வீட்டை வசதியாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, அரசு ஆணை இருந்தும், முதல்வராக இருந்த அண்ணாதுரை தன் வீட்டை புதுப்பிக்க விரும்பவில்லை.

அதேபோன்று, அரசு வீட்டில் குடியிருக்காத முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஊதியத்தோடு, ஒரு தொகையும் அளிக்கப்படும். அந்த தொகையையும், பெற்றுக் கொள்ளவில்லை, அண்ணாதுரை.

இதய நோய்க்காக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, சென்னை திரும்பினார், அண்ணாதுரை. அவரது உடல்நிலையை கருதி, அரசு பங்களா ஒன்றில், 'ஏசி' உட்பட, அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருந்தனர், அமைச்சர்கள்.

ஆனால், அதை ஏற்காமல், விமான நிலையத்திலிருந்து, நேரே தம் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு சென்று விட்டார், அண்ணாதுரை; அத்துடன், ஏர்கண்டிஷன் வீட்டை, ஏற்பாடு செய்த அமைச்சர்களை கடிந்து கொண்டார்.

'மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள்' நூலிலிருந்து: கி.பி., 1280ல் இத்தாலி நாட்டிலிருந்து புறப்பட்ட மார்க்கோ போலோ, தமிழகத்தில் உள்ள பல ஊர்களை பார்த்து, தன் பயண குறிப்புகளில் எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் முத்து குளிப்பதை கண்டு, அவர் எழுதியுள்ளவை:

இலங்கை - தமிழகத்துக்கு இடையே உள்ள கடல், அதிக ஆழமில்லாதது; அதனால், இங்கு முத்துகுளிப்பு எளிதாக நடைபெறுகிறது. ஏப்ரல், மே மாதங்களே முத்தெடுக்க ஏற்ற காலம். வணிகர்கள் பலர், ஒரு குழுவாக கூடி, முத்து குளிப்பவருடன், படகுகளில் ஏறி, கடலுக்கு செல்வர். முத்துக்கள் கிடைக்க கூடிய இடத்தை அடைந்ததும், முத்தெடுப்போர், தங்கள் இடுப்பில் வலையைக் கட்டி, தண்ணீரில் மூழ்குவர்.

கடலின் அடியில் சென்றதும் வலையை விரித்து, அங்குள்ள முத்து சிப்பிகளை சேகரித்து, மேலே வந்து படகுகளில் அவற்றை கொட்டி, சிறிது நேரம் ஓய்வெடுப்பர். பின், மீண்டும் நீரில் மூழ்கி, சிப்பி எடுப்பர். இவ்வாறு, காலை முதல் மாலை வரை, முத்துக்குளிப்பு நடைபெறும்.

மாலையில், படகுகளில் தாம் குவித்துள்ள சிப்பிகளையும், கிளிஞ்சல்களையும் கடற்கரைக்கு கொண்டு வந்து, மணலில் பரப்பி, ஓடுகளை உடைத்து, உள்ளிருக்கும் முத்துகளை எடுப்பர்.

முத்துக் குளிப்போருக்கு, முத்தெடுக்கும் போது, கடல் வாழ் உயிரினங்களால், தீங்கு ஏற்படாமல் தடுக்க, கரையில் அமர்ந்து, மந்திரம் ஜெபிப்பர், அந்தணர்கள். சுறா மற்றும் திமிங்கலம் போன்ற கடல் பிராணிகளின் வாயை கட்டுதல் என்கிற மந்திர வித்தை செய்வர்.

மாலையில் முத்தெடுப்பு முடிந்ததும், வேறு மந்திரங்களை சொல்லி, மந்திரக் கட்டை அவிழ்த்து விடுவர், அந்தணர்கள். அதன்பின், அவ்வுயிரினங்கள் தம் இச்சைப்படி இயங்கும்.

அரசனின் அனுமதி பெற்ற பின்பே, கடலில் முத்தெடுக்க வேண்டும்; திரட்டப்படும் முத்துகளில் பத்தில் ஒரு பங்கு, மன்னனுக்கும், இருபதில் ஒரு பங்கு, மந்திரம் ஓதும் பிராமணருக்கும் கொடுத்து விட வேண்டும். இது தவிர, மிக சிறந்த, மதிப்பு வாய்ந்த முத்துக்கள் கிடைத்தால், அதை, வணிகர்களிடம், விலை கொடுத்து, மன்னன் வாங்கி கொள்கிறான். காரணம், தமிழகத்து முத்துக்களுக்கு, உலகின் எல்லா பகுதியிலும் வரவேற்பு உள்ளது.

நடுத்தெருநாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us