தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'படிக்காத மேதை காமராஜர் வாழ்விலே' நூலிலிருந்து: அக்., 2, 1975ல் காலமானார், காமராஜர். அதற்கு முன், செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள், சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி, வள்ளியப்பனை அழைத்து, 'மாவட்ட கமிட்டிகள் வசூலிச்சு, நமக்கு அனுப்பின, கட்சி பணம், 10 லட்ச ரூபாய் நம்மகிட்ட இருக்கு. அந்த கணக்கு எல்லாம் உன்கிட்டே தானே உள்ளது... இனிமே, நாம் அந்தப் பணத்த கையில வைச்சிருக்க கூடாது; அதை, உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார்.

'ஐயா... சில மாவட்ட கமிட்டிகளில் இருந்து, இன்னும் பாக்கி வர வேண்டி இருக்கே...' என்றார், தயக்கத்தோடு வள்ளியப்பன்!

'அதை எல்லாம் கணக்கில வைச்சுக்கிட்டா இருக்கே... அந்தத் தொகை எல்லாம் வராதுப்பா. அவனவன், கட்சிக்கு பணம் வசூல் செய்றதுக்காக, வெளியூர்களுக்கு கார் எடுத்துட்டுப் போயிருப்பான்; டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாயிருக்கும். இதையெல்லாம், கட்சிக்காரன் தன் கையிலே இருந்தா கொடுக்க முடியும்... 10 -- 20 ஆயிரம்ன்னு பாக்கியிருந்தா, அதையெல்லாம் விட்டுடு. பெரிய தொகை வரவேண்டி இருந்தா, அதுகளை மட்டும் குறிச்சுக் கொடு; அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் கேட்டு, வசூல் செய்துடலாம்...' என்றார் காமராஜர்.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில், 'பேங்க்'கில் பணத்தைக் கட்டச் சொல்வார் என்று நினைத்து, 'ஆகட்டும் ஐயா...' என்றார், வள்ளியப்பன். ஆனால், காமராஜரோ, 'இப்பவே கிளம்பிப் போய், பணத்தை கட்டிட்டு வந்துடு...' என்று, அவசரப்படுத்தினார்.

'போறதுக்கு முன், அழ.வள்ளியப்பாவுக்கு போன் போட்டுச் சொல்லிடு...' என்றார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு, 'இந்தியன் பேங்க்'கின் சென்னை, ஆயிரம் விளக்கு கிளையில் இருந்தது. அக்கிளையின் மேனேஜராக இருந்த, 'குழந்தைக் கவிஞர்' அழ.வள்ளியப்பா, காமராஜரிடம், மிகுந்த மரியாதை உடையவர்.

அவரே, நேரடியாக, 10 லட்ச ரூபாய் கட்டுகளை எண்ணினார். 100 ரூபாய் கட்டு ஒன்றில், ஒரு நோட்டு குறைந்தது. அதனால், தொலைபேசியில், காமராஜரை தொடர்பு கொண்டு, விஷயத்தை சொன்னார், அழ.வள்ளியப்பா.

'சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ, இப்போது கையிலிருந்து போட்டுக்கிறாயா?' என்று கேட்டார், காமராஜர்.

'நான் போட்டுடுறேன்; தகவலுக்காகத் தான் உங்களிடம் சொன்னேன் ஐயா...' என்று கூறி, 'செலானில்' 'சீல்' போட்டுக் கொடுத்து விட்டார், வள்ளியப்பா.

பணம் கட்டிய ரசீதையும், வங்கி கணக்குப் புத்தகத்தையும் வாங்கி புரட்டிப் பார்த்த காமராஜரின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

ஊரார், தம்மை நம்பி ஒப்படைத்த பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து வர, காமராஜர் காட்டிய அவசரம், அன்று, சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி, வள்ளியப்பனுக்கு புலப்படவில்லை. சில நாட்களுக்கு பின் தான் புரிந்தது.

'முடிவு நெருங்கி விட்டது...' என்பதை உள்ளூர உணர்ந்ததும், 'காமராஜர், தம் கையில், 10 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தார்...' எனும் பழிச் சொல்லுக்கு ஆளாகி விடக் கூடாது என்று, அந்த ஆத்மா பதறியிருக்க கூடும். வங்கியில் பணத்தை கட்டிய சில நாட்களில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார், காமராஜர்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள, 'தண்டமிழ்ச் சான்றோர்' நூலிலிருந்து: எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி, பண்டிதர் பட்டத் தேர்வு எழுதி, பட்டம் பெற்றார். பின், சென்னை பல்கலைக்கழகத்தில், வித்வான் பட்டம் பெற்றார். கல்விக்கு வயது இல்லை என்பதற்கேற்ப, 45 வயதில் பச்சையப்பன் கல்லூரியில், மாலை நேர வகுப்பில் சேர்ந்து படித்து, முதுகலைப் பட்டம் பெற்றார்.

மேலும், தன், 54ம் வயதில், பி.எச்.டி., பட்டம் பெறுவதற்காக, சென்னை பல்கலைக்கழகத்தில், 'பழந்தமிழர் கட்டடக் கலையும், நகரமைப்பும்' என்ற தலைப்பில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து, வாய்மொழித் தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கையில், மாரடைப்பு, அவர் வாழ்வை பறித்தது; எனவே, டாக்டர் பட்டம் கிட்டாமல் போய் விட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us