தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தொழிற்சாலையே கோவில்!

தொழிற்சாலையே கோவில்!

தொழிற்சாலையே கோவில்!


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை - 4 கோவர்த்தன விரதம்

பணி செய்யும் இடமே கோவில் எனும், அரிய கருத்தை, 'கோவர்த்தன லீலை'யின் மூலம் நமக்கு உணர்த்துகிறார், பகவான், கிருஷ்ணர்.

'கோ' என்றால், பசு; 'வர்த்தனம்' என்றால், பெரிய குகை மற்றும் சிங்கம் என்று பொருள். மலையை தூக்கி, குகை போன்ற பள்ளத்தை உருவாக்கி, மக்களை பாதுகாத்தவர் என்பதால், கிருஷ்ணருக்கு, கோவர்த்தனன் என்ற பெயர் ஏற்பட்டது.

மழைக்கடவுளான இந்திரனை வேண்டி யாகங்கள் செய்தால், மழை பொழிந்து, பசுக்களுக்கு தட்டுப்பாடின்றி, புல் கிடைக்குமென நம்பி, கிருஷ்ணர் வாழ்ந்த கோகுலத்தில், ஆண்டுதோறும் இந்திர விழா நடைபெறும். அந்த ஆண்டும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தார், கிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தை, நந்தகோபர்.

அப்போது, கிருஷ்ணர், கிராம மக்களைப் பார்த்து, 'யாருக்கு எது வாழ்வாதரமாக இருக்கிறதோ, அதுவே அவர்களின் கடவுள்; நாம் காட்டில் வசிப்பவர்கள். இக்காடு, நாம் வாழ்வதற்கு தேவையான வசதிகளை தருகிறது. இங்கு கிடைக்கும் கனிகளும், காய்களும் நமக்கு உணவாகின்றன.

'அத்துடன், நாம் பசு மேய்ப்பவர்கள்; இப்பசுக்கள் தரும் பால் தான் தயிராகி, வெண்ணெய்யாகி, நெய்யாகி, நம்மை செழிப்பாக வாழ வைக்கிறது. இதோ, இங்கிருக்கிறதே மலை... இம்மலை, நம் வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆகவே, இந்திரனுக்கு, யாகம் மற்றும் பூஜை செய்வது தேவையற்றது. அதற்கு பதில், பசுக்களை பூஜிப்போம்; இந்த மலையை கோவிலாக கருதி, வலம் வந்து, வணங்குவோம்...' என்றார்.

எல்லாரும் அவரது கருத்தை ஏற்று, மலைக்கு பூஜை செய்தனர். இதனால், கோபமடைந்த இந்திரன், ஆலங்கட்டி மழையை பொழிவித்தான். வெள்ளம் பெருகியது; அதிலிருந்து மக்களை காக்க, கோவர்த்தன மலையை தூக்கி, பெரும் பள்ளத்தை உருவாக்கி, அப்பள்ளத்துக்குள் மக்களையும், பசுக்களையும் வரவழைத்து, பாதுகாத்தான், ஏழு வயது, கிருஷ்ணன். இப்படியே ஏழு நாட்களும் தொடர, பயந்து போய் கோகுலம் வந்தான், இந்திரன்.

அவனிடம் கிருஷ்ணர், 'இந்திரா... செல்வ வளம் மிக்கவர்கள் ஆணவத்துக்கு அடிமையாகி, தங்களை கடவுளாக கருதுகின்றனர். அவர்களை ஆட்கொள்ளவே, அவர்களிடமுள்ள செல்வத்தை பறிக்கிறேன்; புகழை காவு வாங்குகிறேன்; ஒருவனிடம் செல்வம் குறைகிறது என்றால், அவன், என்னை நெருங்கி விட்டான் என்று பொருள்...' என்றார்.

அவரது கருத்தை ஏற்று, பாதம் பணிந்தான், இந்திரன். இந்நிகழ்வை, ஆனி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று, கோவர்த்தன விரதமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த இனிய நாளில், நாம் பணியாற்றும் இடங்களை கோவிலாகவும், செய்யும் தொழிலை தெய்வமாகவும் மதித்து, வணங்குவோம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us