தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/யார் அங்கே... என் தேர் எங்கே... நான் ராஜகுமாரி வந்துருக்கிறேன்!

யார் அங்கே... என் தேர் எங்கே... நான் ராஜகுமாரி வந்துருக்கிறேன்!

யார் அங்கே... என் தேர் எங்கே... நான் ராஜகுமாரி வந்துருக்கிறேன்!


PUBLISHED ON : ஜூலை 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர் - வாரமலர் வாசகர்களுக்கான இந்த ஆண்டு குற்றால சீசன் டூர், கடந்த, ஜூன், 20, 21, 22 ஆகிய தேதிகளில் மிக குதூகலமாக நடைபெற்றது. 29வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற டூரில், பல்வேறு சுவராசியமான சம்பவங்கள் நிகழ்ந்தன.

வழக்கம் போல குவிந்த வாசகர்களது விண்ணப்பங்களில் இருந்து தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், தங்கள் குடும்பத்துடன் மதுரை வந்து சேர்ந்தனர்.

தேர்வு செய்யப்பட்ட பலருக்கு மதுரைக்கு வருவது முதல் முறை என்பதால், மதுரை வந்ததும் ஒட்டல் வருவதற்கான வழியை போன் மூலம் கேட்டறிந்தனர். சென்னை, தரமணி வாசகி, ராஜகுமாரி மதுரை வந்திறங்கியதும், 'நான் ராஜகுமாரி வந்திருக்கிறேன்; யார் அங்கே... என் தேர் எங்கே?' என்றெல்லாம் போனில் கேட்க ஆரம்பித்து, டூர் முழுவதும், இதே போல ஏதாவது பேசி, கலகலப்பாக்கியபடி இருந்தார்.

மதுரை பிரேம் நிவாஸ் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டவர்கள், ஏழாவது மாடியில், ரூப் டாப் உணவகத்தில், மீனாட்சி அம்மன் கோவிலின் அழகை ரசித்தபடியே உணவருந்தியது, மறக்க முடியாத அனுபவம் என்றனர்.

மதுரையில் இருந்து ஸ்ரீவேல்முருகன் டிரான்ஸ்போர்ட் சொகுசு பஸ்சில், வாசகர்களின் பயணம் துவங்கியது. கோவை வாசகி பானுமதி, தன் கையோடு கொண்டு வந்திருந்த, 'பென் டிரைவ்'வை, பஸ்சின் ஆடியோ சிஸ்டத்தில் செருகியதுதான் தாமதம், பஸ்சை ஓட்டிய டிரைவரை தவிர அனைவரும் ஆட ஆரம்பித்து விட்டனர். அப்படி பாடல்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து, பதிந்து, எடுத்து வந்திருந்தார். அதிலும், திண்டிவனம் பவுல் இருதயராஜ் -- டெய்சி விக்டோரியா தம்பதியர், பெரியநாயக்கன் பாளையம் ஜோதிமணி, விருத்தாச்சலம் மேனகா, மதுரை மதன் மாதவ் ஆகியோர் ஆடிய ஆட்டம், அமர்க்களம்.

ராஜபாளையத்தில், 'ராஜேஸ்வர் எலக்ட்ரிகல்ஸ்' உரிமையாளர், ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் 'ஆனந்தா கார்டன்' உரிமையாளர், பிரபாகர் ஆகியோர், அந்துமணியின் நண்பர்கள். இவர்கள் இருவரும் இணைந்து, கடந்த பல ஆண்டுகளாக குற்றாலம் போகும் வாசகர்களை, ராஜபாளையத்தில் வரவேற்பதையும், திரும்பி வரும் போது வழியனுப்புவதையும், இனிய கடமையாக கருதி செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டும் அந்த கடமையை பெருமையாக செய்தனர்.

இந்த ஆண்டு, குற்றாலத்தில் உள்ள பிரீஸ் ரிசார்ட்ஸில் தங்க வைக்கப்பட்டனர், வாசகர்கள். முழுவதும் ஏ.சி., மற்றும் நவீன வசதிகளுடன் மெயினருவிக்கு மிக அருகில், சகல வசதிகளுடன் கூடிய இந்த புதிய ரிசார்ட்ஸில் தங்கியது, வாசகர்களுக்கு பேரானந்தம்.

இதே போல, இன்னோரு புதிய அனுபவமாக திண்டுக்கல் துளசி மெஸ் குழுவினரின் சாப்பாடு அமைந்திருந்தது. உரிமையாளர் செந்தில்குமார் வாழைப்பழத்தை குலைகுலையாக தொங்க விட்டிருந்ததும், புரோட்டா, தோசை மற்றும் அசைவ உணவுகளில் வித்தியாசம் காட்டியதை, வாசகர்கள் வெகுவாக ரசித்து, ருசித்தனர்.

பின், திருப்பூர் ஸ்பெஷல் டிசைன் பனியனுடன் ஐந்தருவியில் குளித்து, திரும்பினர், வாசகர்கள். அன்று மாலை பேராசிரியர் ஞானசம்பந்தன், தன் துணைவி அமுதாவுடன் இணைந்து, நகைச்சுவை பேச்சால் வாசகர்களை மகிழ்ச்சி மழையில் நனைய வைத்தார். 'சினிமாவும், 'டிவி'யும் மனதை பாழ்படுத்துகிறதா... பண்படுத்துகிறதா?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், வாசகிகள், ஆராதினி, மோனிஷா, உமா மகேஸ்வரி, கீதா மற்றும் முத்து திவ்யா ஆகியோர் அற்புதமாக பேசினர்.

இவர்களது பேச்சை ரசித்த ஞானசம்பந்தன், 'அடுத்த வருஷத்திலிருந்து இவர்களுக்கு எல்லாம் பரிசு கொடுப்பது போல திட்டமிடலாமே...' என்றார்.

'அதென்ன அடுத்த வருஷம்... இந்த வருஷமே கொடுக்கிறோம். பேசியவர்களுக்கு மட்டுமல்ல; கைதட்டி ரசித்து கேட்ட வாசகர்களுக்கும் சேர்த்தே கொடுக்கிறோம். இதற்காகவே, ராஜபாளையம், 'இதயம் பப்ளிசிட்டீஸ்' உரிமையாளர், எஸ்.மாரியப்பன், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவைகளை பரிசாக கொண்டு வந்துள்ளார்...' என்று சொல்லி பரிசுகளை கொடுக்க, அனைவருக்கும் அப்படி ஒரு ஆனந்தம்!

இரண்டாவது நாள் அகஸ்தியர் அருவியிலும், பாபநாசம் தலையனை ஆற்றிலும் நீராடியது இனிய அனுபவம் என்றால், அதே நாள் மாலை, சித்ரசபை சென்றதும், திருமலைக்குமாரசாமி கோவில் தரிசனம் பெற்றதும் புதிய அனுபவம். ஆற்றுக்குளியல் தந்த சந்தோஷத்தால் அகமும், முகமும் மகிழ்ந்த சிறுமி கனிஷ்கா, தன் தாய் பத்மாவதிக்கு தந்த அன்பு முத்தத்திற்கு இணையே இல்லை; 'இந்த சந்தோஷத்தை தந்த வாரமலர் இதழை வாழ்த்த வார்த்தையே இல்லை...' என்றார், பத்மாவதி.

இந்த அனுபவங்கள் எல்லாம் மகிழ்ச்சியை தந்தது என்றால், மறுநாள் குற்றாலநாதர் கோவிலில் ஒவ்வொருவருக்கும் சன்னிதியில் வைத்து மாலை போட்டு, மரியாதை செய்தது நெகிழ்ச்சியை தந்தது.

விருத்தாச்சலம் லட்சுமி புவனேஸ்வரி, நிலக்கோட்டை முத்தையா, விழுப்புரம் ஏழுமலை, நெய்வேலி பிச்சைமணி, விருத்தாச்சலம் வசந்தி, பொள்ளாச்சி சிவகாமி, சென்னை திரண்யா, தேன்மொழி, மதுரை சித்ரா சுந்தர் ஆகியோர், 'இது எங்கள் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் நிற்கும் இனிய தருணம்...' என்றனர்.

இரண்டாம் நாள் இரவு, வாசகர்களின் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளால், சிவராத்திரியானது. தங்களது அருமையான குரல் வளத்தால் திருப்பூர் பவித்ரா, இளங்கோவன், சரண்யா ஆகியோர் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றனர்.

இரவு சாப்பாட்டுக்கு பின், வாசகர்கள் தங்களுக்குள் அணி பிரித்து நடத்திய, 'பாட்டுக்கு பாட்டு' நிகழ்வில் மகேஸ்வரி, விநோதினி, மகேஸ்வரி, மோனிஷா, சிவரஞ்சனி ஆகியோர், அசத்தலாக பாடி அசத்தினர். இந்த நிகழ்வை, பேராசிரியர் கண்ணன் மற்றும் ஆட்டோ கண்ணன் இருவரும் சிரிக்க சிரிக்க நெறிப்படுத்தினர்.

மூன்றாவது நாளான்று மெயினருவி, சிற்றருவி குளியல் முடித்து, ஷாப்பிங் செய்த பின், இல்லமும், உள்ளமும் பிரகாசம் பெறட்டும் என, வாரமலர் வாசகர்கள் அனைவருக்கும் குபேர விளக்கு வழங்கப்பட்டது; இதை, சிதம்பரத்தைச் சேர்ந்த மூத்த வாசகி, பத்மாவதி அனைவருக்கும் ஆசிர்வதித்து, வழங்கினார்.

டூரை நிறைவு செய்யும் போது, திருப்பூர் வாசகி கீதா, அனைவரையும் நிற்க வைத்து, 'ஊரில் இருக்கிற அத்தனை கண்ணும் இப்போது நம் மீது தான்...' என்று சொல்லி, திருஷ்டி சுற்றி கழித்தார். எந்நேரமும் ஏதாவது ஒரு நல்ல வார்த்தை சொல்லி, குழந்தையைப் போல அனைவரிடமும் சிரித்து பேசியபடியே இருந்த இவர், டூரை நிறைவு செய்து பிரியும் போது, 'இந்த தங்கையை மறந்துடாதீக...' என்றவரின் கண்களில் வழிந்தது, கண்ணீர் அல்ல; அப்பழுக்கற்ற பாசம்!

பரிசு மழையில் வாசகர்கள்!

இந்த ஆண்டு, வாசகர்கள் பரிசு மழையில் நிறையவே மகிழ்ந்தனர். வழக்கமான தேங்காய்பூ துண்டு, பனியனுடன், ஒரு பையும் சேர்த்து வழங்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு தெரியாது டூர் நிறைவதற்குள் அந்தப் பை, பரிசுகளால் நிரம்பி விடும் என்று!

ராஜபாளையம் ராமசுப்பிரமணிய ராஜா, லேப் டாப், -மொபைல் போன் வைத்துக் கொள்ளும் இன்றைய தலைமுறையினருக்கான ஒரு பை வழங்கினர். ராஜபாளையம், 'இதயம் பப்ளிசிட்டீஸ்' உரிமையாளர், மாரியப்பன், வாசகர்கள் குடும்பத்திற்கு புடவை வழங்கினார். 'பிரீஸ் ரிசார்ட்ஸ்' உரிமையாளர் டி.கே.ஸ்ரீதரமூர்த்தி, வாசகர்கள், அடுத்த முறை வந்தால், தங்குவதற்கு டிஸ்கவுன்ட் கார்டும், கூடவே ஒரு கடிகாரமும் வழங்கினார்.

இதையெல்லாம் பெற்றுக் கொண்டாலும், வாசகர்களுக்கு, 'அந்துமணி நம்முடன் இருக்கிறாரா, இல்லையா நம் பார்வையில் அவர் படாவிட்டாலும், அவர் பார்வையில் நாம் பட்டோமா, இல்லையா...' என்ற சந்தேகம் இருந்தபடியே இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில், அவரது, அன்றைய தேதி கையெழுத்திட்ட, சுவாமி விவேகானந்தரின் ஓலைசுவடி வடிவிலான, வித்தியாசமான புத்தகம் பரிசாக வழங்கப்பட்டதும், புதையல் கிடைத்தது போல மகிழ்ந்தனர்!

மைனசை பிளஸ் ஆக்கிய அந்துமணி!

இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததன் காரணமாக, குற்றாலம் முழுமையாக களைகட்டவில்லை.

'பழைய குற்றாலத்தில், தண்ணீர் இல்லையா பரவாயில்ல; அகஸ்தியர் அருவிக்கு போகலாம்...' என்றார் அந்துமணி. இதனால், வளைந்து, நெளிந்த மலைப்பாதையில், குளு குளு அனுபவத்தோடு பயணம் செய்து, கொட்டும் அகஸ்தியர் அருவியில், அருமையான குளியல் போட முடிந்தது.

அங்கிருந்து திரும்பி வரும் போது, பாபநாசம் கோவிலின் பின்பக்கம் உள்ள, தலையனை என்ற பகுதியில், ஆற்று தண்ணீர் பரந்து, விரிந்து ஓடிக்கொண்டு இருந்தது. அங்கு மட்டும், ஒரு மணி நேரத்திற்கு மேல், ஆனந்த குளியல் போட்டனர்; ஆங்காங்கே நீந்தி, குளித்தும் மகிழ்ந்தனர். இந்த அனுபவம், இதற்கு முன், 28 ஆண்டுகளில் வந்த வாசகர்களுக்கு கூட கிடைத்திராதது.

இதே போல, படகுத்துறையில், தண்ணீர் இல்லாததால், படகுப் பயணம் ரத்தானது. 'அதனால் என்ன... மேகங்கள் கொஞ்சி மகிழும், திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு போகலாம்...' என்றார் அந்துமணி. அடேங்கப்பா... அங்கே அனைவருக்கும் கிடைத்தது அற்புதமான அனுபவம். தொட்டு விடும் துாரத்தில் மேகமும், விட்டு விட்டு அடித்த சாரலும், திருநீறு பூசிய திருக்கோலத்தில், முருகனின் திருக்கோல தரிசனமும் அபாரம்.

இதற்கு மேலும் வாசகர்களை சோதித்து விடக்கூடாது என்பது போல, இரண்டாவது நாள் குற்றாலத்தில் பெய்த மழையால், உச்சகட்ட சீசனில் கொட்டுவது போல, சிற்றருவியில், தண்ணீர், ஆளை தள்ளி விடுவது போல விழுந்தது, 'ஆகா அருமை...' என்று சொல்லி, குளித்து, களித்தனர்.

இப்படி, குற்றாலத்தில் மைனசாக இருந்த விஷயங்களை, பிளஸ் ஆக்கிய அந்துமணியை, வாசகர்கள் வெகுவாக பாராட்டி, மகிழ்ந்தனர்.

-எல்.முருகராஜ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us