
'கல்கியின் நகைச்சுவை' நூலிலிருந்து: நம் தெய்வங்களுள், ரங்கநாதர் என்றால், எனக்கு கொஞ்சம் பயம் தான். 'பகவானே... நீங்கள் இருக்கிற இடத்திலேயே என்றென்றைக்கும் இருந்து, அருள் புரியுங்கள்...' என்று பிரார்த்திப்பேன்.
ஏனென்றால், பகவான் ஒருநாள் தம் படுக்கையை சுருட்டி, நம் வீட்டுக்கு வந்து, படுக்க இடம் கேட்பாரானால் ஆபத்தாகப் போய்விடும். அவருடைய படுக்கையைப் பார்த்ததும், வீட்டை அவரிடமே விட்டு விட்டு ஓடிப் போக வேண்டியது தான்! பாம்பென்றால் படையும் நடுங்கும்போது, நாம் எம்மாத்திரம்!
என்ன ஒன்று... நம் வீட்டில் எந்த அறையும் அவர் படுகையை விரிக்கும் அளவுக்கு நீளமாக இருக்காது. படுக்கையை விரித்துப் பார்த்து, முடியாமல் அவரே போய்விடுவார்.
இந்திய ரகசிய போலீஸ் துறைத் தலைவராக இருந்த, மல்லிக் என்பவர் எழுதிய, 'நேருவுடன் என் ஆண்டுகள்' என்ற ஆங்கில நூலிலிருந்து:
சுதந்திரத்துக்குப் பின், முதன்முறையாக, 1951ல் ரகசிய போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. உள்துறை அமைச்சராக இருந்த ராஜாஜி, அதில் கலந்து, அரசு நிர்வாகத்துக்கு, ரகசிய போலீஸ் எவ்வளவு அத்தியாவசியமானது என்பதைக் கூறி, திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி, அதை கடைப்பிடிக்கும்படி வலியுறுத்தினார். ரகசிய போலீசாரிடமிருந்து வரும் செய்தியை, சரியானது என்று ஏற்றுக் கொள்ளும் முன், அரசு, அதை மூன்று வெவ்வேறு இடங்களில் உறுதி செய்ய வேண்டும் என்பது, அந்தக் குறளின் பொருள்.
அக்குறளின் அறிவுரையை கடைப் பிடிக்கலானோம். இதன் காரணமாக, தம் குற்றம் குறைகளை தாமே விமர்சனம் செய்து கொள்ளும் உணர்வைப் பெற்றது ரகசிய போலீஸ் நிர்வாகம். ரகசிய தகவல்கள் வரும்போது, அவற்றை சரியானபடி எடை போடுவதில், எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கலானோம்.
எனவே அரசுக்கு நாங்கள் ஒரு ரகசியத் தகவலை அனுப்பி வைத்தால், அது, நிச்சயமாக நம்பகமானதாகத் தான் இருக்கும் என்ற, உறுதி, அரசுக்கு ஏற்பட்டது. இப்படி, தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்வதை, ராஜாஜியிடம் கற்றதால், நாங்கள் நேர்மையானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில், எங்கள் கவுரவம் வளர்ந்தது.
தியோடர் பாஸ்கரன் எழுதிய, 'தமிழ் சினிமா வளர்ந்த கதை' நூலிலிருந்து: தமிழகத்திற்கு, சினிமா வந்த முதல் எட்டு ஆண்டுகள், திரைப்படக் காட்சிகள் சென்னையில் மட்டுமே நடந்தன.
திருச்சி ரயில்வேயில் வேலை பார்த்த, சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற தமிழர், சொந்தத்தில் ஒரு புரொஜக்டர் வாங்கி, திருச்சி பக்கத்திலுள்ள கிராமங்களில் துண்டு படங்களைக் காட்டினார். இந்தப் படங்கள் யாவும் ஓரிரு நிமிடங்களே ஓடக் கூடியவை. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டன.
சாமிக்கண்ணுவின் அன்றைய டூரிங் சினிமாவை, இரண்டு மாட்டு வண்டிகளில் அடக்கி விடலாம். சில பெஞ்சுகள், புரொஜக்டர், திரை - இவை மட்டுமே தேவை; கொட்டகை ஏதும் கிடையாது. இந்த பெஞ்சுகளைப் போட்டு, முன்னால் திரையைக் கட்டி, சுற்றிலும் ஓலைத்தட்டி வைத்துக் கட்டி விட்டால், கொட்டகை தயார்!
காட்சியாளரிடம் ஒன்று அல்லது இரண்டு துண்டுப் படங்கள் இருக்கும். அந்த இரண்டு படங்களும் தேய்ந்து, கிழியும் வரை ஓட்டி, பின் தான் வேறு படங்களை வாங்குவார். ஓரணா, இரண்டணா காசு கொடுத்து உள்ளே நுழையலாம். காசில்லாதவர்கள் அரிசி, பருப்பு மற்றும் புளி போன்றவை கொடுத்து, காட்சியைப் பார்க்கலாம். இப்படிச் சேர்ந்த பண்டங்களை, அந்த வாரச் சந்தையில் விற்று, அடுத்த ஊருக்கு மூட்டை கட்டுவார், காட்சியாளர்.
நடுத்தெரு நாராயணன்

