sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

திண்ணை!

/

திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : அக் 08, 2017

Google News

PUBLISHED ON : அக் 08, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைந்த திரைப்பட இயக்குனர், ப.நீலகண்டன் எழுதிய, 'வண்ணப்பூக்கள்' நூலிலிருந்து: பத்திரிகைகளில் வரும் சித்திர படத் தொடர்கதைகளை படித்திருப்பீர்கள்; கதாபாத்திரங்களின் உருவங்களை சித்திரமாக வரைந்து, அவர்கள் பேசிக் கொள்ளும் வசனத்தை, சிறு வட்டத்திற்குள் போட்டிருப்பர்.

ஒவ்வொரு இதழிலும், ஏதாவதொரு சஸ்பென்சில் கதை முடியும்; அடுத்த இதழை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும். இந்த சித்திர தொடர்கதைகளுக்கு மூலாதாரமே, திரைப்படங்கள் தாம்!

அமெரிக்காவில், 'பெண்களின் உலகம்' என்ற பத்திரிகையின் முதலாளி, சில திரைப்படங்களை தயாரித்தார். ஒவ்வொன்றும் இரண்டு, 'ரீல்' நீளம் தான்; இந்த திரைப்படங்களில் புதிய யுக்தியை கையாண்டார், அந்த பத்திரிகை முதலாளி. அது, ஒவ்வொன்றும் தனிக்கதை; ஆனால், கதாபாத்திரங்கள் மட்டும் ஒன்றாகவே இருக்கும். அதே கதாநாயகன், வில்லன்... திரைப்படங்களின் பெயரும் ஒன்றே தான்.

உதாரணமாக, வாட் ஹாப்பண்ட் டு மேரி என்றொரு திரைப்படம்.

முதல் வாரத்தில், இந்த பெயரோடு வந்த திரைப்படத்தின் கதையும், அடுத்த வாரம் இதே பெயருடன் வெளியாகும் திரைப்படத்தின் கதையும் வெவ்வேறு! ஆனால், இரண்டிலும் மேரி இருப்பாள். அவள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தனித்தனியாக பல திரைப்படங்களில் பார்ப்பது போல இருக்கும்.

இவற்றிற்கு, 'தொடர் திரைப்படங்கள்' - சீரியல் மூவிஸ் என்று பெயரிட்டனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும், 'டிரிப்யூன்' என்ற பத்திரிகை அதிபரும், 'கேத்லினின் வீரச் செயல்கள்' என்ற பெயரில், பல தொடர் திரைப்படங்களை எடுத்து வெளியிட்டார்.

இந்த திரைப்படங்களில் வேறொரு புதிய யுக்தியை புகுத்தினர்; ஒவ்வொன்றையும் சஸ்பென்சுடன் முடித்தனர்.

ஏதாவதொரு சூழ்ச்சி செய்து, கதாநாயகியை பயங்கரமான ஆபத்தில் சிக்க வைத்து விடுவான், வில்லன். அதோடு, அந்த வாரத்தின் காட்சி முடிந்து விடும். அவள் எப்படி தப்பினாள் என்பதை பார்க்க, ரசிகர்கள் துடிப்பர். அடுத்த வாரம் அதே வரிசையில் வெளியாகும் திரைப்படத்தின் ஆரம்பத்தில், கதாநாயகி தப்பி விடுவாள். படத்தின் முடிவில், அவள் மீண்டும் ஒரு புதிய ஆபத்தில் சிக்கிக் கொள்வாள்; 'தொடரும்' என்று போட்டு விடுவர்.

ஒருமுறை பார்த்த மக்கள், வாரா வாரம் தொடர்ந்து இந்த திரைப்படங்களுக்கு வர ஆரம்பித்தனர். இதைப் பார்த்த, பத்திரிகை முதலாளிகள், இந்த திரைப்படங்களின் பாணியில், தம் பத்திரிகைகளிலும் வாரா வாரம் சித்திர தொடர்கதைகளை வெளியிட ஆரம்பித்து விட்டனர்.

'கல்கியின் கட்டுரைகள்' நூலில், அமரர் கல்கி எழுதியிருப்பது:

நான், திருப்பூர் கதர் போர்டில் ஊழியம் செய்து கொண்டிருந்தேன். அதனால், நூல் நூற்கும் ராட்டை பற்றி, எனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று எண்ணினார், ராஜாஜி; அவர் அப்படி எண்ணியதில் தவறு கிடையாது. ராட்டினத்தை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் தான்; அதைப்பற்றி அழகான கட்டுரை எழுத சொல்லியிருந்தால், ராஜாஜி கூட திருப்தியடையும்படி பேஷாக எழுதியிருப்பேன். ஆனால், அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், அவருடைய ராட்டினத்துக்கு எண்ணெய் போடும்படி கட்டளையிட்டார். நானும் ஆகட்டும் என்று, ஜம்பமாக ஒப்புக் கொண்டேன்.

ஆனால், அரை மணி நேரம் ராட்டைக்கு, எண்ணெய் போட முயற்சி செய்ததில் வாழ்க்கையே வெறுத்து விட்டது.

ராட்டைக்கு எண்ணெய் போடுவதை போல், இந்த உலகில் இன்னொரு சிரமமான காரியம், கைக்குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுப்பது!

ராட்டையில், இரண்டு இடங்களில் எண்ணெய் போட வேண்டும்; அரை மணி நேர முயற்சிக்கு பின், எண்ணெய் ஸ்நானம் செய்திருந்தது, ராட்டை. அறையெல்லாம் எண்ணெயில் மூழ்கியிருந்தது. என் வேட்டி, துணிமணிகள், அரைப்படி எண்ணெய் குடித்துவிட்டன. ஆனால், அந்த நாசமாகப் போகிற ராட்டையில் எண்ணெய் பட வேண்டிய, இரண்டு இடங்களில் மட்டும் ஒரு சொட்டு எண்ணெய் கூட படவில்லை.

நிமிஷத்துக்கு நிமிஷம் என் கோபம் அதிகமாகி, வியர்த்து, விறுவிறுத்துப் போய், கலயத்தில் பாக்கி இருக்கும் எண்ணெயை, ராட்டையின் தலையில் கொட்டலாமா அல்லது என் தலையிலேயே கொட்டி, ஸ்நானம் செய்து விடலாமா என்று யோசித்த போது, அங்கு வந்து சேர்ந்தார், ராஜாஜி. ராட்டையையும், என்னையும் பார்த்தவர், புன்னகையுடன், கலயத்தில் பாக்கி இருந்த எண்ணெயை எடுத்து, எப்படியோ சக்கரத்தின் அச்சிலும், தோல் காதின் துளையிலும் மட்டும் படும்படியாக போட்டு விட்டார்.

நூல் நூற்கும் ராட்டையைப் பற்றி எனக்கிருக்கும் அறிவு, இவ்வளவு தான் என்று நினைத்து, புன்னகை பூத்தாரோ என்னவோ! எனக்குத்தான் வெட்கமாக போய் விட்டது.

நடுத்தெரு நாராயணன்






      Dinamalar
      Follow us