PUBLISHED ON : டிச 17, 2017

எழுத்தாளர், வை.மு.கோதைநாயகியின் கணவர் பார்த்தசாரதி, 'கோதைநாயகியின் நினைவுகள்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையிலிருந்து: தான் முதன் முதலில் எழுதிய நாவலை எடுத்துக் கொண்டு, அந்நாளைய பிரபல எழுத்தாளர் வடுவூர் துரைசாமி ஐயங்காரிடம் சென்றார், கோதைநாயகி. அதை படித்துப் பார்த்து, 'உன்னிடம் விஷயம் இருக்கிறது...' என்று பாராட்டி, 'இதை, வாசகர்கள் ஆர்வத்துடன் படிக்கும் வகையில், சுவையாக திருத்தி அமைத்தால் வெளியிடலாம்...' என்றார், வடுவூரார்.
பின் அவரே, 'ஜகன்மோகினி என்ற பெயரில், ஒரு பத்திரிகை இரண்டு ஆண்டாக வெளிவந்து, நின்று விட்டது; நீங்கள் அதை வாங்கி நடத்தலாமே...' என்றார்.
நானும், வை.மு.,வும் கலந்தாலோசித்து, 'ஜகன்மோகினி' பத்திரிகையை, 1925ல் வாங்கினோம். வை.மு.,வின் முதல் நாவலான, 'வைதேகி'யின் ஆரம்ப அத்தியாயங்கள், 'ஜகன்மோகினி'யில் வெளிவந்தது.
பத்திரிகைக்கு கிடைத்த வரவேற்போ, வை.மு., எதிர்பார்த்ததற்கும் மேலாக இருந்தது. படிப்படியாக விற்பனை உயர்ந்து, ஆறே மாதத்தில், ஆயிரம் பிரதிகளை தாண்டியது.
ஆனால், 'ஜகன்மோகினி'யின் அசுர வளர்ச்சி, வடுவூர் துரைசாமிக்கு மனச்சோர்வை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அப்போது வெளிவந்த, 'மனோரஞ்சனி' என்ற பத்திரிகையில், தொடர் ஒன்று எழுதி வந்தார், வடுவூரார். அது, ஆயிரம் பிரதி தான் விற்பனை ஆனது; ஆனால், 'ஜகன்மோகினி'யோ, இரண்டாயிரம் பிரதிகளை தாண்டி விற்றது.
எனவே, இனி, வை.மு., எழுதித் தரும் கதையை, திருத்தி தரக்கூடாது என முடிவு செய்தார், வடுவூரார். ஆறு அத்தியாயம் வரை திருத்தி கொடுத்தவர், ஏழாவது அத்தியாயத்தை திருத்தி தருவதற்கு, கேட்க போனபோது, 'கதையா அது... நல்லாவே இல்ல; அடுப்பில போட்டுட்டேன்...' என, கூறிவிட்டார்.
அவரது உள்நோக்கத்தை புரிந்து கொண்ட, வை.மு., மனம் தளரவில்லை. அதேவேளையில், தன் நாவல்கள் திருத்தி அமைக்கப்பட்டால் தான் செல்லுபடியாகும் என்ற நிதர்சனமும் அவருக்கு புரிந்தது. அதனால், தாமாகவே முயன்று, நல்ல முறையில் எழுத ஆரம்பித்தார். ஏழாவது அத்தியாயத்திற்கு அவர் வைத்த தலைப்பு, 'வேளையின் பயனா, மூளையின் சிதறல்!'
இது, வடுவூராரை மனதில் வைத்து, கொடுக்கப்பட்ட தலைப்பு. அந்த அத்தியாயத்தில், தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டி எழுதியிருந்தார், வை.மு., இன்றும், 'வைதேகி' நாவலை படிக்கிறவர்கள், முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு நடையிலும், அதற்கு பிறகுள்ள அத்தியாயங்கள் வேறு நடையிலும் இருப்பதை காணலாம்!
தமிழருவி மணியன் எழுதிய, 'திரையுலகின் தவப் புதல்வன்' நுாலிலிருந்து: வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாரிக்கப்பட்ட போதே, அதற்கு எதிராக, சிவகங்கை சீமை என்ற படத்தை எடுத்தார், கண்ணதாசன். எந்த கோணத்தில் பார்த்தாலும், வீரபாண்டிய கட்டபொம்மனை விட, சிறந்த படம், சிவகங்கை சீமையே!
இப்படத்தில், வெள்ளை அதிகாரியாக நடித்த வஹாப் என்ற நடிகர் பேசிய வசனம் ஆங்கிலத்திலேயே அமைக்கப்பட்டது. அவரது உதவியாளராகிய துபாஷி, அதை தமிழில் மொழி பெயர்த்து, மருது சகோதரர்களிடம் விளக்குவார். ஆனால், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், ஜாக்சன் துரை மற்றும் பானர்மேனும் நல்ல தமிழில் வசனம் பேசியது இயல்புக்கு மாறாக இருந்தது.
நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் பாளையக்காரனாக இருந்த கட்ட பொம்மனை, ஒரு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியை போன்று, ஜெய்ப்பூர் அரண்மனையில் காட்டிய வினோதம், ஊமைத்துரையை அடுக்கு மொழியில் பேசச் செய்த கோமாளித்தனம், பாத்திரப் படைப்புகளில் வெளிப்பட்ட அதீத செயற்கை தன்மை என்று, வீரபாண்டிய கட்டபொம்மனின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆனால், இவ்வளவு குறைகளையும் மறைத்து, அந்த படத்தை வெற்றியடையச் செய்தது, சிவாஜி கணேசனின் நடிப்பாற்றல்!
நடுத்தெருநாராயணன்
