PUBLISHED ON : டிச 17, 2017

அன்புள்ள அம்மாவுக்கு —
என் வயது, 36; பெற்றோருக்கு ஒரே பெண். அரசு துறை ஒன்றில், மிக உயர்ந்த பதவியில் உள்ளேன். சிறு வயதிலிருந்தே, அரசு பணி மீது இருந்த ஆர்வம் காரணமாக, கண்ணும், கருத்துமாக படித்து, பட்டம் பெற்று, போட்டி தேர்வுகள் எழுதி, உயர் அதிகாரியாக பணியில் அமர்ந்தேன். மேன்மேலும் நிறைய சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறேன்.
காவல்துறையில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர், என் தந்தை. படிப்பை முடித்தவுடன், திருமண பேச்சை எடுத்தார், என் அம்மா. அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளேன்.
என் லட்சியம் நிறைவேறி, திரும்பி பார்க்கும் போது, என், வயது, 36 ஆகி விட்டது. இப்போதெல்லாம் என் திருமண பேச்சை எடுப்பதில்லை, பெற்றோர். அவர்கள் காலத்துக்கு பின், என் நிலை என்ன என்று யோசிக்கிறேன். என்னுடன் பணிபுரியும் ஒருவர், என்னுடன் சகஜமாக பேசுவார். என் எண்ணமும், அவருடைய எண்ணமும் ஒத்துப் போவதால், நானும் அவரிடம் பல விஷயங்களை விவாதிப்பேன்.
இதுவரை, அவர், எனக்கு நல்ல நண்பராகவே உள்ளார். என் சம அந்தஸ்தில் உள்ள அவரை ஏன் திருமணம் செய்யக் கூடாது... என்று நினைக்கிறேன். ஆனால், என் விருப்பத்தைக் கூறி, அதை, அவர் மறுத்து விட்டால், என்ன செய்வது என்று தயக்கமாக உள்ளது.
அவருக்கு திருமணமாகி, மனைவி இறந்து விட்டார்; குழந்தைகள் இல்லை. என் விருப்பத்தை அவருக்கு தெரிவிப்பதா அல்லது மீதியிருக்கும் என் வாழ்நாளை, என் பணிக்காக அர்ப்பணிப்பதா?
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்புள்ள மகளுக்கு —
முனைவர் பட்டம் பெற்ற பின் தான் திருமணம், போர்டிகோவுடன் கூடிய பங்களா போன்ற வீடு கட்டி முடித்த பின், நீண்ட நாள் ஒற்றை தலைவலி குணமான பின், தம்பி - தங்கைகளை படிக்க வைத்து, ஆளாக்கி சொந்தக் காலில் நிற்க வைத்த பின், மாமியார் - நாத்தனார் இல்லாத மாப்பிள்ளை கிடைத்த பின் திருமணம் செய்து கொள்வேன் என, ஆணோ - பெண்ணோ அடம் பிடிப்பது மடமை!
இந்த எண்ணம், கடல் வற்றிய பின், கருவாடு தின்ன ஆசைப்படுவதற்கு சமமானது. லட்சியம், குறிக்கோள் மற்றும் சிகரங்களை அடைய, ஒருபோதும் தடையாக இப்பதில்லை, திருமணம். மாறாக, மகத்தான வெற்றிகளை குவிக்க, பெரும்பாலான திருமணங்கள் உதவியுள்ளன. வாலிபம் வானவில் போல, கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து போகும்.
ஆணோ - பெண்ணோ அதிகபட்சம், 25 - 28 வயதிற்குள் கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மனிதரின் வாழ்க்கை, திருமணம் செய்து கொள்ளாமல் முழுமை அடையாது.
உனக்கு, 36 வயதிலாவது திருமண ஆசை வந்தது ஆறுதலான விஷயம். நீ ஆசைப்படும் ஆண், ஒரு விதவனாக இருப்பது இன்னொரு நல்ல விஷயம். நீயும், உன் நண்பரும், 40 வயதை நெருங்குபவர்கள். எதற்கு தேவையில்லாத சங்கோஜம்... அவரை ஒரு காபி ஷாப்புக்கு கூப்பிட்டு, நாசூக்காய், ரத்தின சுருக்கமாய் உன் விருப்பத்தை சொல். மறுக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். மறுத்தால் வற்புறுத்தாதே; நட்பை தொடரு!
அதேசமயம், அவர் மறுத்து விட்டாரே என்று மனம் துவண்டு விடாதே... உலகில் கடைசி ஆண் அல்ல அவர். தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான மேட்ரிமோனியல்கள் உள்ளன. ஏதாவது ஒன்றில் உன் வாழ்க்கை குறிப்பை பதிவிட்டு, மணமகன் தேடு அல்லது உன் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வைத்திருந்தால், அவர் உனக்கு பொருத்தமானவரா என ஆராய்ந்து முடிவெடு.
மேட்ரிமோனியல் மூலம் நீ பார்க்கும் வரன், கீழ்கண்ட வரைமுறைக்கு ஒத்துப் போக வேண்டும்...
1. வரன் சம வயதினராகவோ, 40 வயதை தாண்டாதவராகவோ இருத்தல் நலம்.
2. விவாகரத்து ஆனவரை விட, விதவன் மாப்பிள்ளை நல்லது. விவாகரத்து ஆனவர் என்றால், என்ன காரணத்துக்காக விவாகரத்து பெற்றிருக்கிறார் என்பதை அலசி ஆராய வேண்டும்; சைக்கோவிடம் வலிய போய் மாட்டிக் கொள்ள கூடாது.
3. மாப்பிள்ளை ஊளை சதை இல்லாதவராக இருக்க வேண்டும்.
4. நிலையான பணியில், உனக்கு சமமாய், சம்பளம் பெறும் வரன் பொருத்தமானவர்.
5. வரன் சம்மதித்தால், நீங்கள் இருவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம்.
யாரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தாலும், அவருடன் ஒரு மணி நேரம் மனம் விட்டுப் பேசி, இருவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவராக இருப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை ஏற்பட்டால், திருமணம் செய்.
நீ திருமணம் செய்து கொள்ளவும், உன் திருமணம் வெற்றி பெறவும் வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
