தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை

திண்ணை

திண்ணை


PUBLISHED ON : ஜன 21, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆனந்த விகடன்' 1953, தீபாவளி மலரில், ராஜாஜி எழுதிய வாழ்த்து செய்தி:

சிரிப்பு நல்ல வழியில் வர வேண்டும்; கோபச் சிரிப்பு, பொறாமை, துவேஷ சிரிப்பு உதவாது; வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த சிரிப்பே ஆரோக்கியச் சிரிப்பு; அதுவே, அச்சில் ஏற்றத்தக்க சிரிப்பு.

நல்ல விகடங்களை எளிதில் அனுபவிக்கலாம். படித்தவுடனே, படத்தை பார்த்த உடனே சிரிக்கிறோம். ஆனால், அவற்றை கற்பனை செய்து, நல்ல உருவம் கொடுப்பது சுலபம் அல்ல... அதற்கு, சிறந்த மூளையும், உலக அனுபவமும், தயையும், ஆழ்ந்த யோசனையும் வேண்டும்.

ஒரே ஆள் தினமும் இடைவிடாமல் விகடங்கள் உண்டாக்கி, பத்திரிகைகளுக்கு தருவது அசாத்தியம். கொஞ்சம் ஓய்வும், கற்பனை செய்வதற்கு வேண்டிய அவகாசமும் இல்லாமல் போனால், நல்ல மூளையும் கூட வேலை செய்யாது. இதை, பத்திரிகை ஆசிரியர்கள், கவனத்தில் வைத்து, அவர்களிடம் வேலை வாங்க வேண்டும். நல்ல நகைச்சுவை நிறைந்த பொருள் வேண்டுமானால், சந்தோஷம் வேண்டும். வியாகுலமும், கவலையும் நிறைந்த உள்ளத்தில், சிரிப்பு கற்பனைகள் எப்படி உண்டாகும்... மண்ணெண்ணெய் வார்த்து புல் வளர்க்க முடியுமா, முடியாது!

'இந்திய சிற்பக் கலை' நுாலிலிருந்து: உலகப் புகழ்பெற்ற சிற்பி, ரோடின் என்பவர், 'கடவுள் என்னைக் கூப்பிட்டு, 'இயற்கையில் திருத்தம் செய்ய வேண்டியது என்னென்ன இருக்கிறது?' என்று கேட்டால், 'எது எது, எப்படி எப்படி இருக்க வேண்டுமோ, அது அது, அப்படி அப்படியே இருக்கிறது; ஒன்றிலும் கை வைக்காதீர்கள், என்று பதிலுரைப்பேன்...' என்றார்.

ஒருசமயம், பால்ஸாக் என்ற பிரபல எழுத்தாளரின் உருவத்தை சிலையாக செய்தார், ரோடின். பின், தன் மாணவன் ஒருவனை கூப்பிட்டு காட்டினார். 'ஆகா... சிற்பத்தின் கை ஒன்றே போதுமே... எத்தனை அற்புதமாக இருக்கிறது...' என்று பாராட்டினான். வேறு சிலரையும் அழைத்து வந்து காட்டினார், ரோடின்.

ஒருவர் பாக்கியில்லாமல், 'அடடா என்ன அழகான கை... இவ்வளவு அழகான கையைப் பார்த்ததே இல்லை...' என்று புகழ்ந்தனர். உடனே, வேகமாகச் சென்று, ஒரு சுத்தியலை எடுத்து வந்து, அந்தச் சிற்பத்தின் கையை ஒரே போடாகப் போட்டு உடைத்து விட்டார், ரோடின். அத்தனை பேரும் திகைத்துப் போயினர்.

அவர்களிடம், 'சிற்பமென்றால் மொத்த அம்சங்களும் சிறப்பாக அமைய வேண்டும்; எந்த ஒரு பகுதியும் மற்றதை விட அளவு மீறி உயர்ந்து விளங்கக் கூடாது...' என்று விளக்கினார், ரோடின்.

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் மகன் சுப்பிரமணியம், 'என் தந்தை' என்னும் தலைப்பில், 'கலைமகள்' இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து: சிறை தண்டனைக்கு முன், என் தந்தையை நாடு கடத்தும்படி தான் உத்தரவிட்டிருந்தது, பிரிட்டிஷ் அரசு. ஆனால், உலகப் போர் மூண்டதன் விளைவாக, அந்த உத்தரவு அமல் செய்யப்படாததால், ஆயுள் தண்டனை கைதியாக, கண்ணனுார் சிறைக்கு, அனுப்பினர்.

இது, பின், ஏழரை ஆண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி, மேலும் ஓராண்டாக குறைத்தனர்.

சிறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே இறைவனை வழிபடுவார், என் தந்தை. அவ்விதம், ஒருநாள் அவர் வழிபாடு செய்கையில், ஜெயிலர் அவரை கூப்பிட்டிருக்கிறார். மூன்று முறை அழைத்தும், அந்தக் குரல், என் தந்தையின் காதில் விழவில்லை. ஜெயிலர் இதுபற்றி தந்தையிடம் குற்றம் சுமத்தியபோது, 'உன்னை விட பெரியவரை வழிபட்டுக் கொண்டிருந்தேன்; அதனால், நீ அழைத்தது காதில் விழவில்லை...' என்று பதிலளித்தார், என் தந்தை.

அதற்கு ஜெயிலர், 'சிறைக்கு வந்தும், உன் திமிர் அடங்கவில்லை. உனக்கு என்ன தண்டனை விதிக்கிறேன் பார்...' என்று சவால் விட்டானாம். அந்த வன்மம் காரணமாகவே, என் தந்தை சிறையில் செக்கிழுக்க நேரிட்டது!

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us