PUBLISHED ON : மார் 04, 2018

'தெரிந்து கொள் தம்பி' என்ற நுாலிலிருந்து: 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு எழுத என்ன செய்ய வேண்டும்?'
மத்திய அரசின் கீழ் இயங்கும், யு.பி.எஸ்.சி., என்ற அமைப்பு, இந்தத் தேர்வுகளை நடத்துகின்றன. இத்தேர்வுக்கான விளம்பரங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் முன்னணி நாளிதழ்களில் வெளியாகும்.
இந்த தேர்வு எழுத, ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு வயது, 28; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வயது, 32.
அந்தந்த மாநில மொழியிலும் தேர்வு எழுதலாம்; முதலில், பிரிலிமினரி தேர்வு நடக்கும். பின், விருப்பப்பட்ட பாடத்தில் எழுத்துத் தேர்வு, பொது நேரடி தேர்வு என்று பல தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். இவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களை, ஐ.எப்.எஸ்., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., என்று, 'ரேங்க்' அடிப்படையில் பிரிப்பர்.
இதில், ஐ.எப்.எஸ்., - ஐ.ஏ.எஸ்., பிரிவில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், ஐ.பி.எஸ்., பணிக்கு செல்லலாம். ஆனால், ஐ.பி.எஸ்., பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டோர், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., பணிக்கு செல்ல முடியாது.
ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுத, பல தனியார் கல்லுாரி நிறுவனங்கள், 'கோச்சிங்' வகுப்புகள் நடத்துகின்றன. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களுக்கு, அரசே இந்தப் பயிற்சியை நடத்துகிறது.
'குமுதம்' வார இதழில், கண்ணதாசன் எழுதிய, 'காலடிச் சுவடுகள்' என்ற கட்டுரைத் தொடரிலிருந்து: குழந்தைக்காக என்ற படத்தில், நான் எழுதிய பாடல் ஒன்றுக்காக, எனக்கு, அகில இந்திய பரிசு கொடுத்தனர். டில்லியில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு சென்றிருந்தேன். மாலை, 5:00 மணிக்கு விழா; நானோ, வழக்கம்போல் மதியம் நன்றாக மது அருந்தி, துாங்கி விட்டேன். வழக்கம்போல் அங்கு வந்திருந்த சகோதரர், ஏ.எல்.சீனிவாசன் பரிசை பெற்றுக் கொண்டார்.
அன்று பரிசுபெற்ற எல்லாருக்கும், ஒரு செப்புப் பத்திரத்தோடு, ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பணமும் கொடுத்திருந்தனர். பாடலாசிரியரான எனக்கு, ஒரு செப்புத் தகடு மட்டுமே!
இரவில், அமைச்சர், ஐ.கே.குஜ்ராலுக்கு போன் செய்து, 'இந்த செப்புத் தகட்டை வாங்கவா, ஆயிரம் ரூபாய் செலவு செய்து இங்கே வந்திருக்கிறேன்... அசோகா ஓட்டலில் நான் வந்து தங்கியதற்கான ஓட்டல் பில்லை உங்கள் செய்தி இலாகா தான் கட்ட வேண்டும்...' என்று கூறினேன்; அவரும் ஒப்புக் கொண்டார்.
அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும், பாடலாசிரியருக்கும் பணம் கொடுக்கின்றனர்.
'பாரதி வாழ்விலே...' நுாலிலிருந்து: இப்போதெல்லாம் பத்திரிகைகளுக்கு உள்நாடு, வெளிநாடு என்று இரண்டு வகை சந்தா தானே உண்டு. பாரதியார், தன், 'இந்தியா' பத்திரிகைக்கு கொடுத்திருந்த சந்தா அறிவிப்பு:
எல்லா கவர்மென்டாருக்கும், 50 ரூபாய் சந்தா. ஜமீன்தார், ராஜாக்கள் முதலியோருக்கு, 30 ரூபாய்; மாதம், 200 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளோருக்கு, 15 ரூபாய்; மற்றவர்களுக்கு, மூன்று ரூபாய் சந்தா.
ஒருமுறை கல்கி, டி.கே.சிதம்பரநாத முதலியார் மற்றும் ம.பொ.சிவஞானம் இம்மூவரையும் ஒருங்கே சொற்பொழிவாற்ற அழைத்திருந்தனர். மேடையில் அவர்களை அறிமுகப்படுத்தியவர், 'இன்று, மும்மணிகள் பேசுவர்...' என்று கூறினார். அதையடுத்து பேச வந்த கல்கி, 'மும்மணிகள் பேசுவர் என்று அறிவித்தனர்; ஒருவர் ரசிகமணி, (டி.கே.சி.,) மற்றொருவர், கிராமணி, (ம.பொ.சி.,), மூன்றாமவர், மணியாக இருக்க, நான், ஒரு பெண்மணி கூட இல்லையே...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
