தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 32; பி.காம்., படித்துள்ளேன். கணவர் வயது, 37; தனியார் நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ளார். பெற்றோருக்கு ஒரே மகன்; என் உடன் பிறந்தது, ஒரு தங்கை; கல்லுாரியில் படிக்கிறாள்.

'ரியல் எஸ்டேட்' தொழில் செய்து வருகிறார், என் தந்தை. திருமணமாகி, ஏழு ஆண்டுகளாகியும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. மருத்துவரிடம் சென்று பார்த்ததில், கர்ப்பப்பையில் பிரச்னை இருப்பதாக கூறி, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்கின்றனர். சிகிச்சை செலவு அனைத்தையும், தந்தை தான் ஏற்றுள்ளார். ஆனால், கணவரும், மாமியாரும் குழந்தை இன்மையை சுட்டிக்காட்டி, தினமும் என்னை படாதபாடு படுத்துகின்றனர்.

என் தங்கையை, கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்க துடிக்கிறார், மாமியார்; மாமனாரும் இதற்கு உடந்தை. குழந்தை இல்லாதது ஒரு காரணம் என்றாலும், தங்கையையும் இவருக்கே திருமணம் செய்து வைத்து விட்டால், சொத்து முழுவதும் தங்களுக்கே கிடைத்துவிடும் என்பதற்காகவே, இந்த ஏற்பாட்டை செய்வதாக, என் காதுபடவே கூறுகின்றனர்.

எனக்கும், என் குடும்பத்தாருக்கும் இதில் சிறிதும் விருப்பமில்லை. இதையே காரணமாக வைத்து, தினமும், 'டார்ச்சர்' செய்கிறார், கணவர். இதனால், மன வருத்தத்தில் உள்ளனர், என் பெற்றோர். அவர்களுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என, பயமாக உள்ளது. அதன்பின், என் தங்கையின் நிலையை நினைத்தால், 'பகீர்' என்கிறது.

இந்த பிரச்னை தீர, வழி என்ன என்று கூறுங்கள் அம்மா.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —

மனைவியும், மைத்துனிகளும் ஒரே குக்கரில் வெந்த இட்லிகள் என்பதை சில முட்டாள் ஆண்கள் உணர்வதில்லை; மைத்துனி என்பவள் மகள் போன்றவள்.

ஆயிரம் ஆண் குழந்தைகள் பிறந்தால், ஜோடி சேர, ஆயிரம் பெண் குழந்தைகள் பிறப்பது இயற்கையின் நியதி. அதன் அடிப்படை, ஒருவனுக்கு ஒருத்தி என்பதே! சில மைத்துனிகளும் அக்காள் கணவர் மீது மையலுற்று வலை வீசுவது உண்டு. கணவன் - மனைவி - மைத்துனி அவரவர் ஸ்தானத்தில் கவுரவமாக வாழ்ந்தாலும், குடும்ப பெரியவர்கள், சொத்து ஆசையில், உறவு பொம்மலாட்டம் ஆடுகின்றனர். இது, வேதனைக்குரிய விஷயம்.

முதலில் நீ, உன் தங்கையிடம் பேசி, அவள், உன் புகுந்த வீட்டுக்கு வராமல் பார்த்துக் கொள்.

சாத்வீகமாய் இருந்தது போதும்; புகுந்த வீட்டாரிடம், 'எங்கள் சொத்துகளை கவர, என் தங்கையை மறுமணம் செய்ய துடிக்கிறீர்கள்... இது, ஒருநாளும் நடக்காது. தொடர்ந்து முயற்சி செய்தீர்கள் என்றால், காவல் நிலையத்தில் புகார் செய்வோம். என் கர்ப்பப் பை பிரச்னைக்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்; இறைவன் அருளால் எனக்கு குழந்தை பிறக்கும்...

'என் தங்கைக்கும் கர்ப்பப் பை பிரச்னை இருந்தால், உங்கள் மகனுக்கு மூன்றாவதாய் ஒருத்தியை மணம் செய்து வைப்பீர்களா... குழந்தை இல்லாவிட்டால், கணவன் - மனைவி சந்தோஷமாய் குடும்பம் நடத்த முடியாதா... இன்னும் மூன்று ஆண்டு பொறுத்திருந்து பார்த்து, சட்ட ரீதியாய் ஒரு குழந்தையை தத்தெடுத்து விட்டு போகிறேன்.

'மறுமணம் செய்தே தீருவேன் என அடம்பிடித்தீர்கள் என்றால், சட்டப்படி என்னை விவாகரத்து செய்து, என்னையும், என் தங்கையையும் விட்டு விட்டு, வேறு ஏதாவது ஏமாந்த பெண்ணை, மறுமணம் செய்து கொள்ளுங்கள்...' என, ருத்ரதாண்டவம் ஆடு.

'சம்பந்திகளிடம் பொட்டுப் பூச்சிகளாய் நடக்காமல், நெஞ்சை நிமிர்த்தி நியாயம் கேளுங்கள்...' என, பெற்றோரை உசுப்பு.

இளங்கலை வணிகவியல் படித்த நீ, ஏதாவது ஒரு வேலைக்கு போகலாம் அல்லது மேற்கொண்டு, முதுகலை வணிகவியலோ, சி.ஏ.,வோ படிக்கலாம். முறையாக விவாகரத்து பெற்ற பின், உன், சொந்த காலில் நிற்கலாம். உன் கர்ப்பப் பை பிரச்னையை புரிந்துகொண்ட வரன் கிடைத்தால், மறுமணம் செய்து கொள்ளலாம்.

உன் தங்கைக்கு, கல்லுாரி படிப்பு முடிந்த பின், தகுந்த வரன் பார்த்து மணம் முடித்து வை. கணவன் என்ற துணை இல்லாவிட்டாலும், ஒரு பெண் நினைத்தால், மகிழ்ச்சியான, சுதந்திரமான, அர்த்தப்பூர்வமான வாழ்க்கை வாழ முடியும்.

அநீதிக்கும், ஆக்கிரமிப்புக்கும், சுரண்டலுக்கும், அடிமைப்படுத்துதலுக்கும், ஆணாதிக் கத்துக்கும், காம விகாரங்களுக்கும், பணத்தாசைகளுக்கும் எதிராக போர்க்குரல் எழுப்ப பெண்ணினம் தயங்கக் கூடாது.

ஒரு பெண் குரல் ஒலித்தால், அது அனிச்சையாக ஒரே அலைவரிசையில் ஆயிரம் பெண்களுக்கு தாவும்; ஆயிரம், லட்சங்களாகி பூமிபந்து அதிரும்!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us