PUBLISHED ON : மார் 04, 2018

பெண் என்னும் பொக்கிஷம்!
பெண் என்பவள்
பேசத் தெரிந்த தெய்வம்!
அங்கே
கருவறைக்குள் தெய்வமிருக்கும்
இங்கே
இவளுக்குள்
கருவறை இருக்கும்!
கற்சிலையாய் ஓரிடத்தில்
கண்மூடி அமராமல்
கால் கடுக்க வீடெங்கும்
நடமாடும் தெய்வம் அவள்!
வேண்டுதல் ஏதுமின்றி
விரதங்கள் ஏதுமின்றி
அன்பு, பாசம், காதல்
கருணை என வரம் தந்து
வாழ்வளிக்கும் தெய்வம்!
அன்னை, சகோதரி
மனைவி என்றெல்லாம்
அவதாரம் பல எடுத்து
அரவணைக்கும் தெய்வம்!
அடுப்படியில் நின்று தினம்
வெந்து மெலிந்திருப்பாள்...
ஆண்களின் வெற்றிக்கு பின்னே
அவளே ஒளிந்திருப்பாள்!
மலர் போல மெல்ல பேசும்
தென்றலும், அவள் தான்!
தீங்குவரின் புயலென வீசும்
பெருங்காற்றும் அவள் தான்!
அன்னை தெரசா போல்
அன்பு மழை பொழிவாள்
வேலுநாச்சியாய் அவளே
வாளெடுத்தும் வீரம் காட்டுவாள்!
கற்புக்கு கேடு வரின்
கனல் கக்கும் எரிமலையாவாள்
காதல் பேசும் நேரம் வரின்
சில்லென குளிர்விக்கும் பனிமலையாவாள்!
புது புது அர்த்தம் கொடுக்கும்
புலமை மிகு புத்தகம் பெண்...
போற்றிக் காக்க வேண்டிய
விலை மதிப்பில்லா
பொக்கிஷம் பெண்!
மீனாசுந்தர், காஞ்சிபுரம்.
